- வ. சரசுவதி
மனிதன் சமூக உயிர் எனப் பேசப்பட்டாலும், அவனது வாழ்வில் தனிமை தவிர்க்க முடியாத ஒன்று. பலருக்கு தனிமை என்பது வெறுமை, வலி, ஏக்கம் என்று தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அந்தத் தனிமையிலேயே ஒரு மறைந்த வசீகரம் உள்ளது. அது நம்மை உடைத்துப் போடுவதற்கல்ல; நம்மை வடிவமைப்பதற்கே.
தனிமை நம்மை நம்மோடு பேச வைக்கிறது. கூட்டத்தில் இருந்தால் வெளியில் சிரிப்போம்; தனிமையில் இருந்தால் உள்ளே அழுவோம். அந்தக் கண்ணீரே நம்மை உணர வைக்கும் உண்மையான ஆசான். நான் யார் ?, எங்கே தவறினேன்?, எதை இழந்தேன்?, எதை அடைய வேண்டும்? என்ற கேள்விகள் தனிமையில்தான் பிறக்கின்றன. அதே தனிமையில்தான் அவற்றிற்கான பதில்களும் மெல்ல மெல்ல உருவாகின்றன.
உலகின் பெரும் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவஞானிகள் அனைவரும் தனிமையின் மடியில் அமர்ந்தே தங்கள் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். சத்தம் நிறைந்த இடங்களில் சிந்தனை முளைக்காது; அமைதியில் தான் எண்ணங்கள் வேரூன்றும்.சில நாட்களாக நானும் அப்படித்தான். ஏன் (நமது கலைஞர் கருணாநிதி அவர்கள் நிறைய எழுத நினைத்தால் ஆள் அரவாட்டம் இல்லாத இடத்தில் தான் எழுதுவாராம்.) அந்த அமைதியின் மற்றொரு பெயரே தனிமை.

தனிமை நம்மை திருத்தும் ஒரு கண்ணாடி. பிறரைக் குறை கூறும் பழக்கம் மெல்ல மறைந்து, நம்மையே ஆராயும் மனநிலை உருவாகிறது. என் தவறு என்ன? நான் மாற வேண்டிய இடம் எது? என்ற சுயவிமர்சனம் தனிமையில் தான் சாத்தியமாகிறது. அந்த சுயவிமர்சனமே மனிதனை உயர்த்தும் படிக்கட்டாக மாறுகிறது.
அதே நேரத்தில், தனிமை நம்மை வலிமையாக்கும். பிறரின் ஆதரவு இல்லாமலும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை அது கற்றுத் தருகிறது. நம்முள் இருக்கும் சக்தியை நாமே கண்டறியும் தருணம் தனிமையில் தான் நிகழ்கிறது. எனக்கு நானே, யாருக்கும் நான் பதில் கூற வேண்டியது இல்லை. என்னிடம் கேள்வி கேட்க யாரும் இல்லை. எனக்கு பிடித்தவற்றை நான் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை பிறக்கச்செய்கிறது. ஒருநாள் தனிமை நம்மை சோர்வடையச் செய்தாலும், மறுநாள் அதுவே நம்மை தன்னம்பிக்கையுடன் நிற்கச் செய்கிறது.
ஆகவே, தனிமையைப் பார்த்துப் பயப்பட வேண்டியதில்லை. அதனை வெறுக்கவும் தேவையில்லை. அது நம்மை நம்மோடு இணைக்கும் ஒரு பாலம். சரியாக புரிந்துகொண்டால், தனிமை ஒரு தண்டனை அல்ல; அது ஒரு வரம். நம்மை சிந்திக்க வைக்கும், திருத்தும், நம்மை வளர்க்கும் அந்த தனிமை தான் வாழ்க்கையின் உண்மையான வசீகரம்.
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)
உலகத்திலேயே மிகப் பெரிய பெருமிதம் எது தெரியுமா.. Proud To Be A Woman!
ஹலோ ஏஐ.. உன்னால் இதைச் செய்ய முடியுமா.. Will AI Heal the Earth We Scarred?
கரூர் சம்பவ வழக்கு...விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்ப வாய்ப்பு
புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக முள் சீதா பயன்பாடு
பரபரப்பு.. படபடப்பு.. அந்த கடைசி நேர டென்ஷன்.. THE FINAL SUBMISSIONS..!
ஒரு கழுதைக் கதை சொல்ட்டா பாஸ்.. Imagination of donkey's evaluation!
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
காலை நேரப் பூங்குயில்.. Morning is good When....!
{{comments.comment}}