- ஆ.வ. உமாதேவி
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடந்தேறியது.
மகா சிவராத்திரி என்பது, ஆண்டுதோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தசி திதியில் சிவபெருமானை வேண்டி, இரவில் விழித்திருந்து வழிபடும் ஒரு முக்கிய இந்து பண்டிகை ஆகும். சிவனுக்கு உகந்த இந்த இரவு, இருளை நீக்கி ஞானம் பெறவும் இறைவனுடன் இணையும் ஒரு பக்தி வழிபாட்டு நாளாகவும் சிவம் ஜோதிமயமான நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி= சிவம்+ ராத்திரி. சிவம் என்றால் மங்களம் ராத்திரி என்றால் இரவு. அதாவது இன்பம் மற்றும் மங்களம் தரும் இரவு என்பது பொருள். பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து சிவலிங்கத்திற்கு நான்கு கால அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் செய்வார்கள்.
சிருஷ்டியின் தொடக்கத்தில் சிவன் நெருப்புத் தூணாக தன்னை வெளிப்படுத்திய நாளாக இது கருதப்படுகிறது. பக்தர்கள் இந்நாளில் உண்ணா நோன்பு இருப்பர். நான்கு கால பூஜைகளில் சிவனின் நாமத்தை பாடி இறைவனை தரிசிப்பர். "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை உச்சரிப்பர்.

ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே "யார் பெரியவர்" என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது அவர்களுக்கு நடுவில் சிவனே ஒரு பிரம்மாண்டமான நெருப்புத் தூணாக தோன்றி அடி அல்லது முடியை கண்டுபிடிப்பவர் பெரியவர் எனக் கூற, விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து அடியை தேடினார். பிரம்மா அன்னப்பறவை வடிவம் எடுத்து முடியை தேடினார். இருவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. விஷ்ணு தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால், பிரம்மா முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். பிரம்மாவின் பொய்க்காக அவருக்கு பூலோகத்தில் கோயில் இல்லாமல் போனது. பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனை உணர்ந்து வழிபட்ட இரவே "மகா சிவராத்திரி" ஆக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் விரதம் இருந்தால், நமது பாவங்கள் நீங்கி சிவலோகப் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம். அனைத்து சிவாலயங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஸ்ரீகாளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆலங்காடு, தஞ்சாவூர், உத்தரகோசமங்கை, ராமேஸ்வரம், சுருட்டப்பள்ளி போன்ற இடங்களில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவிலும் இவ்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
திருத்தணியில் சிவராத்திரி கொண்டாட்டம்.
பழைய தர்மராஜா கோயில் தெருவில் சதாசிவ குளக்கரையில் அமைந்துள்ளது மனோன்மணி உடனாய சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயம். இங்கே ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வீதிகளில் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து ஐயனுக்கு பாலபிஷேகம் செய்வார். சண்ட மேளத்துடன் இந்த ஊர்வலம் வெகு விமர்சையாக வலம் வரும். அவரவர் கையாலேயே பாலபிஷேகம் செய்யும் பாக்கியம் பக்தர்களுக்கு கிட்டும் ஆண்டின் ஒரே நாள். பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
குளத்தின் நடுவில் உள்ள யோக நிலை சிவனுக்கும் சிறப்பு பூசைகள் நடைபெறும். (சதாசிவ குளத்தைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் சிறியோர் முதல் பெரியோர் வரை தினமும் நடைபயிற்சியை மேற்கொள்வர் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுக்க திண்ணைகளும் உண்டு) சனிபகவானுக்கு தனி சன்னதி உள்ளது. நவகிரகம் உள்ளது. சூரியனாருக்கு என தனி சன்னதியும் நால்வர் சிலைகளும் உள்ளன. பைரவருக்கு தனி சன்னதியும் உள்ளது. தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெறுகிறது. எங்களின் குலசாமியான காட்டேரி அம்மன் மற்றும் ஜடாமுனிஸ்வரருக்கு தனித்தனி ஆலயம் உள்ளது. கங்கை அம்மனுக்கும் தனி ஆலயம் உள்ளது மிகச்சிறப்பு.
சிவராத்திரி நாளான நேற்று மாலை 6:00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இரவு 7:00 மணிக்கு பரதநாட்டிய ஆசிரியர் திருமதி.வி.வசுமதி தலைமையில் "ஸ்ரீ விஸ்வ நாட்டியாலயா" குழுவினரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளின் பரதநாட்டியம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இரவு முழுவதும் பக்தர்கள் பஜனைப்பாடல்களை பாடி, நான்கு கால பூஜைகளையும் கண்டு களித்து பேரின்பம் அடைந்தனர். குறிப்பாக ஆண்களுக்கு உகந்த ராத்திரி என்பதால், ஆண் பக்தர்கள் அதிகம் பங்கேற்றனர். முக்கியமாக இரவு 11:30 முதல் 1:00 மணி வரை கண் விழித்து இருப்பது மிகவும் சிறப்பு. அந்த நேரத்தில் ஒரு முறை சொல்லப்படும் நமச்சிவாய மந்திரம் ஆயிரம் முறை சொல்வதற்கு சமமாகும். ஒரு வில்வ இலையை போட்டு அர்ச்சனை செய்யும்போது லட்சம் முறை பகவானின் திருநாமத்தை சொன்ன பலன் கிடைக்கும். அந்த நேரத்தை "லிங்கோத்பவர் நேரம்" என்று சொல்வர். பக்தர்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப பொருள் உதவி செய்து விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர்.

"அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற சொல் ஈஸ்வரனை மையமாக வைத்தே சொல்லப்பட்டதாகும். எனவே, அவனின் அருளை பெற அவர் நாமத்தை உச்சரித்து சிறப்புறுவோம்.
(இக்கோவிலில் உள்ள மூலவர், அம்பாள், நந்தி பகவான், சண்டிகேஸ்வரர், பலிபீடம் இந்த ஐந்து சிலைகளையும் வைக்கும் பாக்கியத்தை இறைவன் எங்களுக்கு அளித்தது பெரும் பேராக கருதுகிறோம். குறிப்பாக மூலவரை தன் கையாலேயே வைக்கும் பாக்கியத்தை, என் கணவர் பெற்றது, எங்களுக்கு இறைவன் தந்த ஆசியாகவே எண்ணுகிறோம். "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"என்ற சிவபுராண பாடல் வரியில், அவன் தாளை வணங்க கூட அவன் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அவரையே பிரதிஷ்டை செய்வது என்றால், அது நாங்கள் செய்த தவத்தின் பலனே.)
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: நீதிமன்றத்திலேயே நீதிக்கே பாதுகாப்பு இல்லையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
என்னைப் பற்றி அருவருப்பாக கீழ்த்தரமாக பேசுவதை நிறுத்துங்கள் - நடிகை திரிஷா
அம்மாவின் கோல நோட்டு (சிறுகதை)
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு
திருத்தணி சதாசிவ லிங்கேஸ்வரர் ஆலயத்தில் கோலாகலமாக நடந்த மகா சிவராத்திரி
மீண்டும் இந்தியாவைச் சந்திக்குமா பாகிஸ்தான்.. செமி பைனலா அல்லது இறுதிப் போட்டியா?
சித்தத்தை சிவமயம் ஆக்கும்.. பித்தத்தை தெளிவாக சிவமாக்கும்!
ஆசை
கனவு மெய்ப்பட வேண்டும்!
{{comments.comment}}