மழைக்கு இதமாக சமைத்துப் பாருங்கள்.. சுடச்சுட மிளகு பொங்கல்!

Nov 04, 2026,11:48 AM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


புரட்டாசியில் புறப்பட்டு ஐப்பசியில் அடை மழையாகப் பெய்யும் என்பார்கள். குளிரும், காய்ச்சலும், ஜலதோஷமும் கூடவே வந்துவிடுமே!


இப்பவும் அப்படித்தான் ஜில்லென்று இருக்கிறது கிளைமேட். இதோ உங்களுக்காக தொண்டைக்கு இதமான மிளகு பொங்கல்.


ஒரு கப் பச்சரிசி

அரை கப் பாசி பருப்பு

ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு

முக்கால் டேபிள் ஸ்பூன் சீரகம்

ஒரு டேபிள் ஸ்பூன் தனியா

இரண்டு வற்றல் மிளகாய்

தாளிக்க அரை கப் நெய்

ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்

கல் உப்பு தேவையான அளவு

தாளிக்க முந்திரி, கறிவேப்பிலை. அலங்கரிக்க கொத்துமல்லித் தழை கொஞ்சம்




முதலில் அரிசியையும் பாசி பருப்பையும் வாணலியில் போட்டு கை பொறுத்த சூடு வரும் வரை வறுத்து, களைந்து மூன்று அல்லது நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேகவைத்துக் கொள்ளவும்.


மிளகு, சீரகம், தனியா, கல் உப்பு, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும்.


 வாணலியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்து வைக்கவும்.  அரைத்த பொடியை நெய்யில் வாசனை வரும் வரை கருகிவிடாமல் வறுத்துக் கொள்ளவும்.  குக்கரை திறந்தபின் இந்த பொடித்த கலவையை போடவும்.


பிறகு அதே  வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பிடித்தால் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து சூடாகவே குக்கரில் வெந்த சாதத்தில் கொட்டி நன்கு கிளறவும்.  கடைசியாக பரிமாறும் போது முந்திரி, கொத்து மல்லி சேர்த்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


மழைக்கு ஏற்ற அல்டிமேட் பொங்கல்.  செஞ்சு அசத்துங்க.


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Booner to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்