Short Story: புத்தம் புது காலை!

Nov 03, 2026,02:17 PM IST

- மடிப்பாக்கம் பிரபாவதி


அந்தி சாய்ந்து மெல்ல இருட்டாகிக் கொண்டிருந்தது.  நடையை வேகமாகப் போட்டாள் சுகுணா.  தினமும் இப்படித்தான் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்கு வரும்போது ஏழரை, எட்டு ஆகிவிடுகிறது.


"அம்மா காபி கலந்துட்டியா? ரொம்ப அலுப்பா இருக்குமா" என்றவள் கால்களை அலம்பிக்கொண்டு நைட்டிக்கு மாறி சோபாவில் அமர்ந்தாள்.


"இந்தாம்மா காபி.  அபிநவ், ஆர்த்தி ரெண்டு பேரும் அரையாண்டு பரீட்சையில நல்ல மார்க் வாங்கியிருக்காங்க மா" என்றாள் அம்மா.


கண்டிப்பான அக்கா என்பதால் இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள்.  "அட அப்பிடியா? வெரி குட்" என்றவள் இருவரையும் அழைத்து அணைத்துக் கொண்டாள்.


அபினவ் ப்ளஸ் டூவும், ஆர்த்தி டென்த்தும் படிக்கிறார்கள்.  குடிகார அப்பாவால் சுகுணாவால் பத்தாவது மட்டும்தான் படிக்க முடிந்தது.  தையல் கற்றுக் கொண்டு ஒரு துணி தைத்து எக்ஸ்போர்ட் செய்யும் கம்பெனியில் உழைத்துச் சம்பளம் வாங்கி வந்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள் பாவம்.




விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் அந்த ஊரில் இரண்டு மூன்று பேர் உயிரிழந்தனர்.  அதில் சுகுணாவின் அப்பாவும் ஒருவராக இருந்தது குடும்பத்திற்கு இழப்புதான்.


வீட்டு ஆம்பளை இல்லாததால் கொஞ்சம் பயந்து பயந்துதான் வாழ்கின்றனர்.  சுகுணாவின் அம்மா காலை எட்டரை மணியிலிருந்து மாலை நான்கு வரை ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தையைப் பார்த்துக் கொள்கிற வேலை.


குறைந்தது ஐந்து வருடமாவது ஆகும்.  அபினவ் படிப்பை முடித்து வேலைக்குப் போகவேண்டும்.  காத்திருத்தல் தொடர்ந்தது.


அபினவ் படிப்பு முடிந்து வேலைக் கிடைத்ததும் வீட்டில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை.  ஆர்த்தி டிகிரி படித்துக் கொண்டிருந்தாள்.  ஆனால் அபினவ் எண்ணங்கள் வேறு மாதிரி இருந்தது.  


தான் விரைவில் வெளிநாடு செல்லப் போவதாக கூறினான்.  முதலில் மகிழ்ந்தாலும் சுகுணாவிற்கு அதிர்ச்சியாகவும் இருந்தது.


அம்மாதான் மிகவும் கோவமும் அழுகையுமாக இடிந்து போனாள்.  


"அங்கப் போய் வேலை பார்த்தாலும் நான் அதை வச்சுக்கிட்டு மேலப் படிக்கப் போறேன்.  என் வாழ்க்கைல என்ன முடிவெடுக்கணும்னு உங்களக் கேக்கணுமா?" 


"என்ன வார்த்தையெல்லாம் பெரிசா இருக்கு.  முடிவு எடுத்தாச்சுல்ல.  கிளம்பிப் போய்கிட்டே இரு" என்றாள் சுகுணா.  அடி வயிறு கொதித்தது.  ஃபிரிட்ஜ் தண்ணி எடுத்து ஒரு பாட்டில் முழுவதும் குடித்தாள்.


"சுகுணா, ஒனக்கொரு கல்யாணம் பண்ணிப் பாக்கிற பாக்கியம் இல்லியேடி" 


"எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை மா.  ஆர்த்தியை நல்லபடியா ஒருத்தன் கிட்ட பிடிச்சுக் கொடுக்கணும்.  அது வரைக்கும் எனக்கு ஓய்வு இல்லம்மா.  நீங்க தூங்குங்க" என்று திரும்பிப் படுத்தாள்.  கண்ணீர் வழிந்து தலையணை ஈரமானது.


காலையில் எழுந்ததும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது புதிதாக காலைப் பொழுதை ரசிக்க ஆரம்பித்தாள் சுகுணா.  இனி இயற்கையுடன் பேசி ரசித்து வாழ வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.  


(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்