ம.நீ.ம சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.. கமல்ஹாசன் அறிவிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

Mar 24, 2026,08:54 PM IST

சென்னை: மக்கள் நீதி மய்யம் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு தருவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அரசியல் அரங்கில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவை பெரும் தியாகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ளார். கமல்ஹாசனுக்கு நன்றி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டிருந்த நீண்டதொரு விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:


"நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று'


திருக்குறள் எண்: 222


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.


2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களும், துணை முதல்வர் அவர்களும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும்.


இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை. அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். 




எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.


தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், 'எங்கே எங்கள் பங்கு' என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அவர்கள் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.


தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, திராவிட மாடல் 2.0 அரசு அமைவது இன்றைய தேவை. இது வெறும் ஆட்சி மட்டுமல்ல. காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நீதிபரிபாலனம்.


ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.


என்னையும் என் அரசியலையும் புரிந்துகொண்டு எந்த சுயநலமின்றி, ஒன்பது ஆண்டுகளாக என்னோடு தொடர்ந்து பயணிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் சுயநலமற்ற அரசியலுக்கு ஆகச்சிறந்த முன்னுதாரணங்கள். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்கைக்கும் நான் செலுத்தும் மரியாதை.


அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும்போல் தீரத்துடன் தொடரும். மிக விரைவில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பதவியேற்பு விழாவில் அவரை மகிழ்ச்சியோடு நாம் சந்தித்து வாழ்த்துவோம் எனும் நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. நாளை நமதே என்று கூறியிருந்தார் கமல்ஹாசன்


கமல்ஹாசனின் இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. பலரையும் இது ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த முடிவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இது தியாகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்


அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னைச் சந்தித்து, நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 

நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்றும் தெரிவித்தார்.


இரண்டு அரசியல் இயக்கங்களின் தலைவர்களாக மட்டுமல்ல, நல்ல நண்பர்களாக நாங்கள் இருவரும் இருதரப்புக் கருத்துகளையும் பரிமாறிக் கொண்டோம். "இது தியாகம் அல்ல, கடமை" என்று அவர் சொன்னார். உண்மையில் அவர் செய்திருப்பது தியாகம்தான். 


அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. அவரது முடிவு என்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது. அவருக்கும் அவரது மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்நாடு முழுவதும் அன்புச் சகோதரர் கமல்ஹாசன் அவர்கள் வலம் வர வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள். அமைய இருக்கும் #DravidianModel 2.0 அரசு அவரது அன்பினாலும் ஆனது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்!


பேருள்ளத்துடன் தன்னலத்தைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டு நலனை முன்னிறுத்தியிருக்கும் அவரது பெருந்தன்மையான முடிவை வரலாறு பாராட்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Ananthi Poem: கரும்பலகையின் கனவு

news

அன்பு அன்னைக்கு அன்னையர் தின வாழ்த்துப் பாமாலை!

news

அன்னையர் தினத்திற்கு வாழ்த்து சொல்வதில் இல்லை மகிழ்ச்சி!

news

Happy Mother's day: தரணி போற்றும் நம் தாய்

news

828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

Assembly Interim Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா நியமனம்!

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

அதிகம் பார்க்கும் செய்திகள்