Monday Motivation: எனை வாழ்நாளெலாம் இட்டுச்செல்வது.. புத்தகமெனும் தோழன்!

Apr 27, 2026,12:38 PM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


அரிச்சுவடி வடிவில் அறிமுகமாகும் ஆசான்!

எழுத்தறியும் எனதறிவின் முதற்தோழன்! 


ஏட்டுக் கல்விக்காக என்னை கல்விச்சாலைதனில்      

விட்டுச் சென்றாள் அன்னை! – பன்(னீ)ராண்டுகள்!


ஆண்டுகள்தோறும் மொழியின் வழியில் நடைபயில     

கற்பித்தே எனைக் கரைகாணா அறிவுலகில்       

காணாமற்போகச் செய்தனர் எனதருமை ஆசான்கள்!


ஓலைச்சுவடி வடிவில் வாழ்ந்த எமது               

முன்னோர் யாத்த செய்யுளனைத்தும்             

கரைத்தே குடித்திடத் துடித்தன கறையானும்...!


கறையானாலும் செரித்தடக்கிட முடியாதே... எஞ்சியவை

கெஞ்சிய ஒலிதனைச் செவிமடுத்தார் தமிழ்த்தாத்தா! 


தம் கரம்பட கொஞ்சிக் கொஞ்சியே தமிழ்ப்பா(லை)       

உரையிட்டு உறையிலிட்டு நறுமண நெய்யாக்கி          

அதனைப் பக்குவமாய் அச்சிட்டு அழகழகாய்            

அடுக்கிட்டார் புத்தகசாலைதனில்!   


  


ஏடே எனை இட்டுச்சென்றது புத்தகசாலைக்கு!                 

நூலே நூல்பிடித்து நூலகம் கூட்டிச் சென்றது!


பாடப்புத்தகத்தோடு பன்மொழியாக்கப் புத்தகமும்         

புத்தியை ஆக்கிரமிக்க ஆவல்கொண்டே              

என்கரங்களில் தஞ்சம் புகுந்தன...        

                     

தழுவிக் கிடந்த கரங்களின் வழி               

‘கூடாரம் நுழைந்த ஒட்டகமாக’                                

புத்தகமே என்னுள் சிம்மாசனமிட்டு அரியணை ஏறியது!        

புத்தியை வளர்க்கும் சக்தியாக மாறியது!


எழுத்தை ஆளும் எழுத்தாளனின் பேனாமுனை                

எனை இருக்கை முனைக்கு நகர்த்திடும் சாமர்த்தியமும்      

விரல் நகமனைத்தும் இழக்குமளவிற்கான                    

சுவாரஸ்ய சாதுர்யங்களும் எத்தனை எத்தனை! 


துப்பறிவாளனின் துணையோடு துல்லியமாய்த்          

தீர்ந்த வழக்குகள் ஏராளம் ஏராளம்!


வரலாற்றின் பக்கங்களைப் பக்கம் நின்றே பார்க்க           

வாகாய் வர்ணனைவழி வாசகனைக்              

கைபற்றி அழைத்துச் சென்றே கைப்பற்றிக்கொள்ளும்           

மாயாஜல வித்தைகள் என்னே! என்னே!       


எத்தனை காட்சி ஊடகம் வந்தாலும்                  

எனது கற்பனாசக்தியை ஊடறுக்க இயலாதே போயின...        

பிரம்மாண்டப் பெருமுயற்சிகள் அத்தனையும் 

தோல்வியே தழுவின!


உலக இலக்கியத்தின் வழி                   

எல்லாநாட்டு எழுத்தாளரும்                       

எனது அறிவின் சாளரம் வந்தே சேர்ந்தனர்! 

        

ஆச்சர்யம் நிறை மானுடத்தின் மகிமையை            

மானிடவியலின் பரிமாணத்தை வெகு எளிதாய்          

வாசிப்பின் வழி மடைமாற்றிவிட்டனர்! 


புரிதல்களின் எல்லைகள் விரிவடைந்தன!                 

மொழிகளின் வேர்கள் வேலிதாண்டிக் கிளர்ந்தன! 


புரட்சிகளின் மையங்கள் போராளிகளின் உயிர்த்தியாகங்கள்      

உணர்வோடு ஒன்றிணைந்தன! உத்வேகம் தந்தே           

உயிரைக் கரைத்து உணர்வில் கலந்தன!


உலக ஞானத்தை ஜென் தத்துவங்களை            

உள்ளூறும் ஞானமார்க்கமாக மகான்களின் மகத்துவத்தை      

மனதின் மையத்தை மௌனத்தில் நிறுத்திட...              

சுவாசத்தின் சகவாசத்தை சுகமாக அறிந்திட...


மொழிபெயர்ப்பால் மராத்தியப் படைப்பும்                 

வங்கப்படைப்பும் வாயில்வந்தே சேர்ந்தன!                

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட உன்னத தேசத்தின்           

நேசமெல்லாம் நெஞ்சில் நிறைந்தன!     


கைகளில் ஏந்திய புத்தகமே எமை வழிநடத்திச் சென்றன!      

மனித மனங்களின் விநோதங்களை                     

விநாடியில் மாறும் உணர்ச்சி பேதங்களை             

தத்துவார்த்த வேதாந்தக் கருத்துகளை             

எளிதில் விளங்கா விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்          

வேறுவேறல்ல இரண்டின் வேரும் ஒன்றே! 


சொல் வேறு பொருள் வேறல்ல...            

சொல்லிச் சென்றவன் வேறு                   

சொல்லின் வழி சொந்தம் கொண்டவன் வேறல்ல...!


அதுவே இது; இதுவே அது – என              

அத்வைத நிலையடையச் செய்யும்              

புத்தகத் தோழனே! – நீயே                    

புத்தியில் ஊற்றெடுக்கும் புதுமைகளின் நாயகன்! 


பனுவல் கொண்டே பாங்காய்                

அறம் வளர்த்தது அன்னைத் தமிழும்!                  

எது சரி? எது தவறென நீதி போதித்தே              

நித்யமாய் நிலைத்து நின்றே                          

தர்மம் காத்தன நீதி நூல்களும்!


எழுத்தின் சுவையை எண்ணத்திறத்தை                 

எண்ணிலடங்கா பக்கங்களில் தாங்கியே              

என்னுள் அனுபவச் சுவை அறிவித்தே                

என் பக்கமகலாது நின்றாய்!     

       

நல்வழிகாட்டியாய் உற்ற உயிர்த்தோழனாய்                      

எனை வாழ்நாளெலாம் இட்டுச்செல்வது                  

எனதருமைப் புத்தகமெனும் தோழனே!


(முனைவர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை பெயரில் மோசடி: பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

news

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: சுகாதாரத்துறை சிறப்பு ஏற்பாடு

news

தேர்தல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: உச்சம் தொட்ட விமானக் கட்டணம்

news

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி

news

V Sankar poem: நடிப்பதே வாழ்க்கை !

news

தவெக தலைவர் விஜய் வேட்புமனுவுக்கு எதிரான மனு தள்ளுபடி

news

Monday Motivation: எனை வாழ்நாளெலாம் இட்டுச்செல்வது.. புத்தகமெனும் தோழன்!

news

மதுரையின் மகாராணியாக பட்டம் சூட்டப்பட்ட மீனாட்சிக்கு.. நாளை திருக்கல்யாணம்!

news

இயற்கை.. இனிதே ரசித்து வாழ்வோம் மானுடம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்