- முனைவர் தி. தங்கலட்சுமி
உண்மை என்பது இவ்வுலகில் இல்லைராக்கேஷ் மிகவும் மனம் நொந்து போய் தன் படுக்கையில் விழுந்துகிடந்தான். உலகில் உள்ள கெட்டது அனைத்தும் தனக்கு மட்டும் நடக்கிறது என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தான். மீண்டும் மீண்டும் அவன் சந்தித்த தோல்விகள் அனைத்தும் வரிசைகட்டி அவன் மனத்திரையில் வந்து போயின.
"உண்மை என்பது இவ்வுலகில் இல்லை" என்று தன்னையும் அறியாது சத்தமாக கத்தினான்.அப்போது அவன் காதுகளில் ஒரு ஏளனமான சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான். அறையில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான். ஆனாலும் அந்தச் சிரிப்பொலி மீண்டும் பலமாகக் கேட்டது. அவனது காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை.
சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'யார் அது?' என்று கேட்டான். சிரித்த குரல் இப்போது பேசியது.
"என்ன ராக்கேஷ்... எப்படி இருக்கிறாய்? என்னை நீ மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது அல்லவா?"
மீண்டும் லேசாக சிரித்துக் கொண்டு தொடர்ந்து பேசியது அந்தக் குரல்.
"நான் யார் என்று பிறகு சொல்கிறேன். முதலில் உன் ஆழ்ந்த சோகத்திற்குக் காரணம் சொல்" என்றது.
ராக்கேஷ் கொஞ்சம் பயம் தெளிந்து அந்தக் குரலின் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.

'என் சோகம் ஒன்றா? இரண்டா? உன்னிடம் அத்தனையையும் சொல்லிவிட முடியுமா? என்று தெரியவில்லை' என்றான்.
அதற்கு அந்தக் குரல், 'பரவாயில்லை... நீ ஒவ்வொன்றாகச் சொல் நான் அனைத்தையும் கேட்கிறேன்' என்றது.
"என் ஐந்தாண்டு கால காதலி சாரு என்னைவிட்டுப் பிரிந்து வேறு ஒரு பணக்கார மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாள். இன்று அவளது கல்யாண பத்திரிக்கையை அனுப்பி வைத்துள்ளாள்.
'யாரு அந்த ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நேரில் காணாத காதலியா??' என்று கேட்டுவிட்டு மீண்டும் சத்தமாக சிரித்தது.
'ஏய்! நீ யாரு? என்னோட பர்சனல் விஷயமெல்லாம் தெரிந்து வைச்சிருக்குறயே?' என்று மீண்டும் பதற்றமானான்.
'ரொம்ப பதறாத ராக்கேஷ். நான் உனக்கு ரொம்ப ரொம்ப வேண்டப்பட்டவன்தான். மேல சொல்லு... அடுத்த சோகம் என்ன??' என்றது குரல்.
கொஞ்சம் பதற்றம் தணிந்த ராக்கேஷ் அடுத்ததாக, 'என் அப்பாவே என் மீது வஞ்சம் தீர்த்துவிட்டார். அவர் சொத்தில் இருந்து என் பங்காக ஒன்னத்துக்கும் லாயக்கு இல்லாத ஊருக்கு வெளியில் உள்ள ஒரு பொட்டல் காட்டு நிலத்தைத் தந்துள்ளார். என் அண்ணனுக்கு மட்டும் பூர்வீக வீடு, ஐந்து லட்சம் ரொக்கம் இன்னும் என் அம்மாவின் நகைநட்டு, பட்டு, பண்டபாத்திரம் என்று தாராளமா வாரி வழங்கி இருக்கிறார். நானும் அவர் பெத்த பிள்ளைதான?' என்று படபடவென கொட்டித்தீர்த்தான்.
'எங்க அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா, இந்த ஆளு இப்படி செய்ய விட்டிருக்குமா?' என்று புலம்பினான்.
'அவர் சம்பாதித்த சொத்து, அவர் விருப்பம் போல எழுதி வைச்சிருக்குறாரு. இதில் என்னப்பா தப்பு?' என்றது குரல்.
"இது என்ன நியாயம்? இது என்ன ராஜா காலத்து அரசாட்சியா...? அவர் பதவிக் காலத்துக்குப் பிறகு மூத்த வாரிசுக்கு அரசுரிமைங்கிறது மாதிரி... இதெல்லாம் ரொம்ப அநியாயம். உனக்குச் சொன்னா புரியாது. நீ பேசாம இரு".
"அவர் சம்பாதித்த சொத்துன்னா, ஒரு நியாயம் வேணாமா? எங்க அண்ணெ என்ன சாப்பாட்டுக்கு வழி இல்லாமயா இருக்கறான்?. அவனும் அவன் சம்சாரமும் அரசாங்க சம்பளம் வாங்கிக்கிட்டு நல்லா ராஜாவும் ராணியும் போல சொகுசாத்தான் வாழுறாங்க..." என்று தன் மனதில் உள்ள பொறாமையைக் கொட்டித் தீர்த்தான்.
இப்போது, ராக்கேஷிடம் அந்தக் குரல் மிகவும் கடுமையான குரலில் பேசத் துவங்கியது.
'டேய்! நீ இவங்களப் பத்தி பேசவே தகுதி இல்லாதவன்டா. அது உனக்கும் தெரியும். இப்போ எதுக்கு இவ்வளவு ஓவரா சீன் போடுற?' என்றது.
ராக்கேஷ்க்கு இதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறியது, 'யாருடா நீ? என்னப்பத்தி உனக்கு எல்லாமே தெரிச்ச மாதிரியே பேசுறியே?' என்று ஆத்திரப்பட்டான்.
'ஆமாண்டா... உன்னப்பத்தி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். உங்க அப்பா, நீ செஞ்ச வேலைக்கு உன்ன ஒன்னும் நடுத்தெருவில விட்டுடல இல்ல. அத நெனச்சு சந்தோஷப்படுடா மடையா. நீ உங்க அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்சு குருவி சேர்க்கறாப்ல சேர்த்து வைச்ச ஐஞ்சு லட்ச ரூபாய அவருக்கே தெரியாம ஆட்டைப்போட்டவன் தானடா. உன் பங்கு அதுலயே கழிஞ்சதுன்னு உங்கப்பா, சொல்லாமச் சொல்றார்டா.
என்ன சொன்ன.., உங்க அம்மா மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா... ஏன்டா டேய் அந்தம்மா, உசுரோட இருந்தப்ப அவங்க சொன்ன எந்தப் பேச்சையாவது நீ கேட்டுருக்கயா?. அந்தம்மாவுக்கு நெஞ்சுவலி வந்து செத்ததுக்குக் காரணமே நீ செஞ்ச அத்தன அட்டூழியமும்தானடா காரணம். உங்க அண்ணனோ நல்லா படிச்சான்; அரசாங்க வேலையில இருக்கான்.
ராத்திரி பகலா கண்விழிச்சுப் படிச்சு பரிட்சை எழுதி எந்த சிபாரிசு இலஞ்சப்பணம் என்று ஒரு செலவு வைக்காம அவனோட திறமையினால முன்னேறி சொந்தக்கால்ல நிற்கிறான். உன்னையும்தான் உங்கப்பா படிக்க வச்சாரு. நீ என்ன பண்ண... படிக்காம ஊர் சுற்றித்திரிஞ்ச. இல்லாத பொல்லாத கெட்ட பழக்கத்த எல்லாம் பழகின. இப்போ நியாயம் வேற கேட்கற....அப்றோம்... காதலி!
அடேய் நீ எப்பவாவது உண்மையாக இருந்திருக்கிறயா? உன்னோட ஃபேஸ்புக் ஐடில ஒன்னுகூட உன்னோட நிஜப்பேருல இல்ல. இதுல ஒரே நேரத்துல நாலஞ்சு பொண்ணுங்ககூட அரட்ட அடிப்ப. பத்தும்பத்தாததற்கு சாரு! உன்னோட ஐந்தாண்டு கால காதலி...! அவளோட நல்ல நேரம் தப்பிச்சுட்டா... உங்கிட்ட மாட்டிக்கிட்டு ஏமாறல.
இதற்கு மேல் ராக்கேஷால் பொறுமையாக இருக்க முடியவில்லை. 'போதும் நிறுத்து. நீ யாருன்னு இப்பவாவது சொல்லு' என்றான்.
'ஹூம்... இன்னுமா நீ என்னைக் கண்டுபிடிக்கல... சந்துரு?' என்றது குரல்.
தன்னுடைய உண்மையான பெயரைச் சொல்லியதும், தன்னோடு இவ்வளவு நேரமும் பேசிக் கொண்டு இருந்தது... தனது மனசாட்சியே என்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.
"உண்மை என்பது இவ்வுலகில் இல்லை" என்று வெளி உலகத்தில் உண்மையைத் தேடாதே! உனக்கு நீயே உண்மையாக இருக்கிறாயா?. என்று உன் உள்ளே இருக்கும் உலகத்திடம் கேட்டுத் தெரிந்து கொள்! நீ உண்மையை உணர்ந்து, உனக்கும் ஊருக்கும் உண்மையாக வாழ்! என்று கூறி அக்குரல் கரைந்து மறைந்தது.
(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).
கனவுகள் மெய்ப்படும்!
Wonder Words: ஏன்.. எப்படி .. எதற்கு?.. விந்தையான வார்த்தைகள்!
பலவண்ணம்!
எதிர்பாராமல் கிடைத்த உதவிக்கு என்றுமே கடமைப்படு!
Thangalakshmi Short Story: உண்மை என்பது இவ்வுலகில் இல்லை
காரைக்குடியில் மக்கள் கூட்டத்திற்கு நடுவே சைக்கிள் ஓட்டிய விஜய்...ஸ்தம்பித்த சாலைகள்
இணையத்தில் கசிந்த விஜய்யின் 'ஜனநாயகன்' சீன்ஸ்...ரசிகர்கள் கொதிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்காக முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன்
மாம்பழம் சின்னத்தை முடக்கம்... ராமதாஸ் மனு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
{{comments.comment}}