ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)

May 26, 2026,11:41 AM IST

அருட்பெருஞ்ஜோதி.

ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


ஜூலை 6,2022.புதன் கிழமை.


அமர்நாத் குகைக்கு ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்தோம். இருபுறமும் கடைகள் வரிசையாக. நடு நடுவே நிறைய சாமியார்கள், அகோரிகள் சிறு சிறு tentகளில் உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டு தங்கி இருந்தனர். நடந்து செல்பவர்களுக்கு ஜவான்கள் வெந்நீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வாங்கிக் குடித்துக் கொண்டோம். 7,8 ஜவான்கள் அங்கே நின்றிருந்தனர். திடீரென ஆமாம் அது தான் எனக்குரல் கேட்க ஜவான்களை நாங்கள் திரும்பிப் பார்க்க, அவர்களும் எங்களைப் பார்க்க, நீங்கள் தமிழா என நாங்கள் அவரகளைக் கேட்க  கிருஷ்ணகிரி என்று கூறினார்கள். 


மூவர் தமிழ், இருவர் கன்னடம். ஆனால் தமிழ் எங்களுக்குத் தெரியும் என்றனர். எவ்வளவு தூரம் தொலைவில் வந்தாலும் நம் தமிழைக் கேட்டதும் ஏதோ நம் சொந்தங்களைப் பார்த்தது போன்ற உணர்வு. அவ்வளவு நேரமும் tired ஆக feel பண்ணியிருந்தாலும் நம் தமிழர்களைப் பார்த்ததும் உற்சாகமாகி விட்டோம். அவர்களில் மது என்ற ஜவானின் முகம் மிகவும் பரிச்சயமான முகமாக இருந்தது. அவர்களின் சேவையை மிகவும் பாராட்டினோம். போட்டோ எடுத்துக் கொண்டோம். அவர்களிடமிருந்து விடைபெற்று மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தோம்.  




மழை தூற ஆரம்பித்து விட்டது. நடுவில் பனிபடர்ந்த இடம் வந்தது. Ice இல்  கம்பை ஊன்றிக் கொண்டு நடந்தோம். ஜவான்கள் உதவி புரிந்தார்கள். மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. கடைகளாக இருந்த இடங்களில் சிறிது நேரம் நின்றோம். மழை சிறிது குறைந்தவுடன் நடக்க ஆரம்பித்தோம். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நமது bag,phone, leather items களை கடைகளில் வைத்து விட்டுத் தான் செல்ல வேண்டும். Token தருகிறார்கள். அதற்குக் கடைக்காரர்கள் பணம் எதுவும் வாங்குவதில்லை. பிரசாதம் வாங்கினால் அதற்கு மட்டும் பணம். 


நாங்கள் பிரசாதம் வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தோம். கூட்டத்தில் ஏறுவதற்குக் கைப்பிடித்து ஜவான்கள் தூக்கி விடுகிறார்கள். எங்கு நோக்கினும் மனிதர்கள். ஹர ஹர மஹாதேவா ஒலி தான். படியில் ஏற ஆரம்பித்து விட்டோம். அங்கும் ஏறுமிடத்தில் மைக் வைத்து announce பண்ணுகிறார்கள். நம்மோடு வந்தவர்களுக்கு செய்தியைத் தெரிவிப்பதற்கு.


எங்களுடன் வந்த மற்றவர்கள் ஒவ்வொருவரும் எங்கே என்றே தெரியவில்லை. நாங்களும், அன்புமணி அண்ணா,

தேவசேனாவும் ஒன்றாக வந்தோம். நாங்கள் படிஏறிப் போவதை எங்களுடன் வந்தவர்களுக்குத் தெரிவிக்க நம் தாய்மொழியில் நான் பேசினேன். அங்குள்ள ஜவான் திரும்பவும் ஒரு முறை கூறுமாறு கூறினார். நாங்கள் 16 பேரும் ஈசனைக் காண செல்கிறோம் என மைக்கில் ஈசனிடம் கூறியாகி விட்டது. கூறாமல் இருந்தாலும் அவனருளால் தான் அங்கு வந்துள்ளோம். ஆனால் நம் தமிழ் அமர்நாத்தில் ஒலிக்கப்பட்டது. 


காலில் போட்டிருந்த shoeகளை கழட்டிவிட்டுத் தான் ஏற வேண்டியதுள்ளது.  shoeகளைப் பத்திரமாக வைப்பதற்கு  இடமிருந்தது. அதற்கும் ஆட்களை நியமித்து service செய்து கொண்டிருந்தார்கள்.மொத்தம்  சுமார் 250 படிகள் இருக்கின்றன.இந்தப் படிகளைக் கட்டுவதற்கு உதவியவர்கள் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த நகரத்தார்கள். தமிழிலும் அதை எழுதி வைத்து உள்ளார்கள்.


வளைந்து வளைந்து செல்கின்றன.  ஒவ்வொரு படியிலும் ஜவான்கள் நிற்கிறார்கள். படி ஏறும் போது கூட்டமில்லை. நின்று,நின்று தான் படி ஏறுகிறார்கள். என் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வந்தது. குகையானது 75 அடி உயரம்,80அடி அகலம் உள்ளே 80 அடி அமைப்போடு இருக்கின்றது. மேலே ஏறும் போது 2 புறாக்கள் அழகாக வட்டமிட்டு திரும்பவும் குகைக்குள் சென்றன. புறாக்களைப் பார்த்ததும் அனைவரிடமும் ஹர ஹர மஹாதேவா முழக்கம். படிஏறி குகையின் விளிம்பிற்கு வரும் போது மேலே இருந்து தீர்த்தம் போல் அருமையாக நீர் விழுகிறது. அதைப் பருகி விட்டு,தலையை நனைத்து விட்டு மேலே ஏற மணிஓசை கேட்க. கொஞ்சம் கொஞ்சம் பேர்களாக உள்ளே அனுப்புகிறார்கள்.


ஆஹா, நம் ஜென்ம சாபத்தைப் போக்கும் பனி லிங்கத்தைக் கண்டோம். நமக்கு வலதுபுறம் ஓரத்தில் சுமார் ஏழரை அடி உயரத்தில் பனி லிங்கமாகக் காட்சி அளிக்கிறார். அருகில் சூலாயுதம் வைக்கப் பட்டு இருக்கிறது. அங்கே சுமார் ஒன்றரை அடி உயரத்தில் பனி உருவத்தில் அன்னை பார்வதிதேவி காட்சி அளிக்கிறார். அவருக்குப் பக்கத்தில் சுமார் 2 அடி உயரத்தில்  பனியாக மொழு மொழுவென விநாயகர் காட்சி அளிக்கிறார். 2 பண்டிட்கள் அங்கு இருந்து நாம் கொடுக்கும் பிரசாத்தை வாங்கி இறைவன் முன்பு வைத்து விட்டு பின்னர் நம்மிடம் தந்து விடுகின்றனர். நாங்களும் பிரசாதத்தைக் கொடுத்து இறைவன் அருளோடு வாங்கிக் கொண்டோம். கண்ணாறக் கண்டோம் ஈசனை. பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. சரியாக மணி அப்போது 3.15.என் கண்களிலிருந்து கண்ணீராக வழிகிறது.  எதுவுமே அப்போது நினைக்கத் தோன்றவில்லை.




ஜவான் நம்மைப் பார்க்க நாங்கள் திரும்பப் பார்த்து விட்டுச் செல்கிறோம் எனக் கூறச் சரி எனக் கூறிப் புன்னகை புரிந்தார். ஓரமாகத் தள்ளி வந்து நின்று பார்த்துப் பின் கீழே இறங்கினோம். இறங்குவதற்கு வேறு வழி. கீழே பத்துப் படிகள் இறங்கியதும் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து விட்டோம். ஒருத்தருக்கொருத்தர் எதுவும் பேசவில்லை. திரும்ப இறங்கி நடந்து வந்து shoeகளைப் போட்டுக் கொண்டு லங்காவில் சிறிது சாப்பிட்டுக் கிளம்ப நினைக்கும் போது சரியான மழை. லங்காவில் சிறிது நேரம் இருந்து விட்டுத் திரும்ப வந்து எங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டோம். அதற்குள் மற்றவர்கள் வந்து விட கீழே இறங்கி வந்தோம். 


நடந்து வந்த நால்வரும் மற்றவர்களின் bag களைப் பார்த்துக் கொண்டு இருக்க ,அவர்களைத் தரிசனத்திற்கு அனுப்பி விட்டு நாங்கள் இருந்தோம். எல்லோரும் தரிசனம் முடித்துப் பின் வந்து சேர்ந்தனர். திரும்ப பால்டால் என்னுமிடத்தை அடைய வேண்டும் .மழை வேறு பெய்து கொண்டிருப்பதால் குதிரையில் செல்வது மிகவும் கடினம் எனக்கூறி அன்றிரவு அங்கிருந்த கடைகளுக்குப் பின்னால் இருந்த tent இல் 16 பேரும் தங்கினோம். சிலர் படுத்து விட்டனர். ஈசனின் தரிசனம் என் மனக்கண்ணில் இருந்து கொண்டே இருந்தது. அன்றிரவு அமர்நாத்திலேயே தங்கியிருந்து, ஈசனே உன் நினைவு எப்பொழுதும் எங்களுடனே இருக்க வேண்டும் எனும் எண்ணத்தோடு கண்ணயர்ந்தோம்.  Tentக்கு மிக அருகிலேயே பனி உருகி ஆறாக ஓடுகிறது. இரவு அந்த சலசல வென சத்தம் கேட்டுக் கொண்டு உறங்காமல் உறங்கிக் கொண்டிருந்தோம்.


ஓம் நமசிவாய.

திருச்சிற்றம்பலம்.


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கருப்பு ... ஒரு விமர்சனப் பார்வை!

news

கொளுத்துது வெயிலு.. தமிழ்நாட்டில் பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வலுக்கிறது கோரிக்கை

news

பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு.. திகைப்பில் வாகன ஓட்டிகள்!

news

ADMK MLAs resignation: தொடரும் அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

news

ஆஹா.. ஜென்ம சாபல்யம் நீங்கியது.. கண்டோம் பனி லிங்கத்தை.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 9)

news

சத்தியம் நிறைவேறியது!

news

தாவுடா செவலை தாவு.. கட்சி விட்டு கட்சி தாவுவது.. நம்ம ஊரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

news

தமிழகத்தை உலுக்கிய.. தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில்.. தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை

news

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்