ந.தீபலட்சுமி
"ஹலோ...மேடம்...மேடம்...."
"சார்.....சார்....."
" வீட்டில் யாராவது இருக்கீங்களா?"
"மேடம்.....மேடம்...."
கதவின் தாழ்ப்பாள் டொக்..டொக்...என தட்டும் சத்தம் கேட்டது.
குக்கூ..... குக்கூ.... என காலிங் பெல் அழைத்தது.
காதுகளை இறுக மூடிக் கொண்டாள் மாலதி.
" சே, ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே..." என புலம்பிக் கொண்டே ,அவளுடைய அம்மாவை அழைத்தாள்.
" அம்மா...அம்மா...வாசல்ல யாரோ கூப்பிட்டுகிட்டு இருக்காங்க..உங்க காதுல விழலையா? போய் பாருங்க " என மிரட்டாத குறையாக அம்மாவிடம் கத்தினாள் மாலதி.
ஞாயிற்றுக்கிழமை தூக்கம் போனதில் கொஞ்சம் கடுப்பாகிப் போனாள்.
"நீ இன்னும் எந்திரிக்கலையா?" எனக் கேட்டுக்கொண்டே வேகமாக போய் கதவைத் திறந்தாள் பத்மா.
"மேடம் கிருமி நாசினி தெளிக்கணும் தொட்டி எங்க இருக்கு?" எனக் கேட்டுக்கொண்டே மாநகராட்சி ஊழியரான செல்வி உள்ளே நுழைந்தாள்.

"ஏண்டி மா உங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தான் கிடைக்குமா? மத்த நாளெல்லாம் வர மாட்டீங்களா?" என சற்று கடுப்புடன் கேட்டாள் பத்மா.
"என்னமா பண்றது? எங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை லீவுதான். இருந்தாலும் இந்த பகுதியில சிலருக்கு காய்ச்சல் பரவுதுன்னு ரிப்போர்ட் வந்ததால எங்களை வீடுகள்ல இருக்குற தண்ணி தொட்டி, சுற்றுப்புறம், கால்வாய் இதெல்லாம் செக் பண்ணி மருந்து தெளிச்சுட்டு வர சொல்லிட்டாங்க" என அவள் பதில் சொன்னாலும் அவளுடைய வேலையை கவனமுடன் கச்சிதமாக செய்து முடித்தாள் செல்வி.
"அவ்ளோதாம்மா முடிஞ்சது. அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன். பரவால்ல நீங்க உங்க வீட்டையும் வீட்டை சுத்தியும் சுத்தமா வச்சிருக்கீங்க" போகிற போக்கில் ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் கொடுத்து விட்டுப் போனாள் செல்வி.
அவ்வளவுதான்! பத்மாவுக்கு பெருமை தாங்கவில்லை.
ஒன்பது மணி ஆகியும் படுக்கையை விட்டு எழுந்து இருக்காத தன்மகளை வலுக்கட்டாயமாக போய் உலுக்கினாள் பத்மா.
"மாலதி எழுந்திரும்மா. மணி ஒன்பது ஆகுது. இன்னும் இப்படியே தூங்கிட்டு இருந்தா என்ன செய்யறது? போ ,போய் குளிச்சிட்டு வா. சூடா பொங்கல் இருக்கு, வடையும் செஞ்சு வச்சிருக்கேன். உனக்கு பிடிச்ச சட்னியும் இருக்கு .சீக்கிரம் வா," என சின்னக் குழந்தையை கொஞ்சி எழுப்புவது போல் எழுப்பினாள் பத்மா.
மாதவி அவர்களின் ஒரே மகள் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்ட இருபத்தைந்து வயது குழந்தை.
எப்படியோ டிகிரி முடித்து பி.எட் முடித்து டெட் எக்ஸாம் பாஸ் பண்ணி ஆசிரியராகப் பணியாற்றும் அவர்களின் ஒரே செல்ல மகள்.
சின்ன சிணுங்கலுடன் எழுந்த மாதவி மனமே வராமல் படுக்கையை விட்டு எழுந்து பாத்ரூமிற்குள் சென்றாள்.
" அம்மா... அம்மா..."
டொக்...டொக்....
"அம்மா.... அம்மா...."
"இதோ வரேன்...இதோ வரேன்..." என கத்திக்கொண்டே ஓடிப் போய் கதவை திறந்தாள் பத்மா.
"யாருப்பா நீ, என்ன வேணும்?"
"அம்மா நாங்க பக்கத்துல இருக்குற ஆசிரமத்தில் இருந்து வரோம். எங்க ஆசிரமத்தில் நூறு குழந்தைகள் இருக்காங்க. உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்கள்" எனக் கேட்டவனை ஏற இறங்க கண்களால் அளந்தாள் பத்மா.
"ஆசிரமமா? எந்த ஆசிரமம்? அட்ரஸ் சொல்லுப்பா....உங்க மேனேஜர் போன் நம்பர் கொடுங்க. நான் பேசிட்டு கொடுக்கிறேன்."
"சாரிம்மா...அவரு நம்பர் லாம் தரக்கூடாது.நீங்க எதுவும் கொடுக்கலன்னா பரவாயில்லை" எனக்கூறி விட்டு விறு விறுவென நடையை கட்டினான் அவன்.
"ஹூம் ! எனக்கு தெரியாதா இவங்கள பத்தி எல்லாம் வந்துட்டானுங்க..." எனக் கூறிக்கொண்டு உள்ளே சென்றாள் பத்மா.
குளித்துவிட்டு வெளியில் வந்த மாதவி இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் வேக வேகமாக வெளியேறுவதை கண்டு சிரித்து வைத்தாள்.
"என்னடி ,மச மசன்னு நின்னுகிட்டு?வா வந்து சாப்பிடு .இவங்கள மாதிரி ஆயிரம் பேர் வந்தாலும் என்னை ஏமாத்த முடியாது" என பெருமிதத்துடன் சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் சென்றாள் அவள் அம்மா.
அப்படித்தான் தொடங்கியது அன்றைய நாள்.
காய்கறிகாரரின் ....."அம்மா"
கீரைக்காரரின்..... "அம்மா"
கேபிள் காரரின் ...."சார்.... சார்"
கிழிந்த பட்டு புடவை கேட்கும்.... "அம்மா"
சிக்கு முடிக்கு பத்து ரூபாய் கொடுக்கும்....."அக்கா"
பழைய சாமானுக்கு அலுமினிய பாத்திரம் கொடுக்கும் ...."அம்மா"
5 கிலோ தக்காளி நூறு ரூபாய் எனக் கூப்பிடும் " அம்மா"
'நைட்டி..மா...நைட்டி...மா...."அம்மா..."
பட பட வென்ற சத்தத்துடன் தனது வண்டியை நிறுத்தி கீழே இறங்கினார் ஈஸ்வரன். மாலதியின் தந்தை. அந்த ஊர் இன்ஸ்பெக்டர்.
"ஹாய் டாட்...வொய் ஆர் யு லேட்?"நான் கேட்டுக்கொண்டே சிறு குழந்தை போல் ஓடி வந்த மகளை வாஞ்சையுடன் பார்த்தார் ஈஸ்வரன்.
"அதை ஏன் கேட்கிற மாலதி. பெரிய பிரச்சினை. பக்கத்து தெருவில் தனியாக இருந்த ஒரு வயதான அம்மாவை அடித்துப் போட்டுவிட்டு பணத்தையும்,நகையையும் கொள்ளையடித்து போயிருக்கான்.அதை என்கொயரி பண்ணிட்டு வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு"
"ஓ! மை காட்!"
"நீங்களும் தெரியாதவர்கள் யாராவது வீட்டில் வந்து கதவை தட்டினால் உடனே கதவை திறக்காதீர்கள்."
"இல்லப்பா, நானும் சரி அம்மாவும் சரி கேர்புஃல்லா தான் இருக்கோம். ஆனாலும்...." என இழுத்தாள் மாதவி.
என்ன என்பது போல் பார்த்தார் ஈஸ்வரன்.
"இந்த சண்டே வந்தாலே பெரிய தொல்லையா இருக்குப்பா. யாராவது கதவை தட்டிக் கொண்டே இருக்காங்க. அவர்களை எல்லாம் பிடிச்சு உள்ள போடுங்களேன்"என சற்று கோபமுடன் கூறினாள் மாலதி.
அதைக் கேட்டு மெல்ல சிரித்தார் ஈஸ்வரன்.
"எல்லாரையும் தப்பா நினைக்க கூடாதும்மா. சிலர் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வரத்தான் செய்வாங்க. நாம தான் தெளிவா புரிஞ்சு நடந்துக்கணும். ஜாக்கிரதையா இருக்கணும்."
"அது சரி நீங்க போலீஸ் தானே அப்படி தான் சொல்லுவீங்க. எங்களுக்கு இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் ஃப்ரீயா இருக்க முடியும். அதுலயும் இவ்வளவு டிஸ்டர்பன்ஸ்"என சற்று கோபமாகவும் ஏக்கத்துடனும் கூறினாள் மாலதி.
"சரி சரி விடும்மா . சண்டேஸ்ல போனா மட்டும்தான் வீட்ல இருக்கிறவங்களை சந்திக்க முடியும் அப்படிங்கிறது அவங்களுடைய ஐடியா. அதனால தான் இன்னைக்கு வராங்க"என தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக அறிந்ததை கூறினார் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்.
"என்னவோப்பா எனக்கு சுத்தமா பிடிக்கல" என சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று விட்டாள் மாலதி.
இரண்டு வாரம் கடந்தது.
"ஹலோ...ஹலோ..."

"மேடம்...மேடம்..."
"சார்...சார்..."
" வீட்டில் யாராவது இருக்கீங்களா?"
"மேடம்...மேடம்..."
காலிங் பெல் அழுத்தப்பட்டு உள்ளே 'குக்கூ.... குக்கூ.....'என விடாமல் கத்தியது அது.
"யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமை கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே? வந்துடுவாங்க....எதையாவது தூக்கிக்கிட்டு,சே..!" என திட்டிக் கொண்டே கதவை திறந்தாள் அவள்.
வெளியே....
இதைக் கேட்டு, விக்கித்துப் போய் சிலையாக நின்றாள் ,சென்சஸ் டூயூட்டிக்கு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து சென்றிருந்த ஆசிரியை மாலதி.
(ந. தீபலட்சுமி, பி.டி. ஆசிரியர், ஆங்கிலம், கிரியேட்டிவ் ரைட்டர், வேலூர்)
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!
அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா.. மறக்க முடியாத செளகார் ஜானகி.. பின்னி எடுத்த வேடங்கள்..!
"திமுக எம்எல்ஏ.,க்களுக்கு கார் வேண்டாம்!" – சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு
எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்
ஏ டி எம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? நேரில் செயல் விளக்கம் பெற்ற மாணவர்கள்!
{{comments.comment}}