ஃபைலை திறக்க ஜோசியக்காரர் சொல்லணுமா? உதயநிதி காரசார பேச்சு

Aug 21, 2026,10:53 AM IST

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரும் திமுகவின் முக்கியத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு காரசாரமாக உரையாற்றினார். ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்கும், எச்சரிக்கைகளுக்கும் பதிலளிக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.


ஃபைலை ஓப்பன் பண்ண வச்சிடாதீங்க :


கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், "ஆதாரம் இருக்கா...ஆதாரம் இருக்கா என கேட்கிறீர்கள். மூன்று துறைகளை ஆய்வு செய்து அதில் நடைபெற்றுள்ள ஊழல்கள் குறித்த ஃபைல் முதல்வரின் டேபிளில் ஆதாரத்துடன் உள்ளது என நிதியமைச்சர் மரிய வில்சன் கூறி இருந்தார். அவர் ஏதோ போகிற போக்கில் அதை சொல்லவில்லை. உண்மையாகவே அந்த ஃபைல்கள் என்னுடைய டேபிளில் தான் இருக்கு. அதை திறக்க வச்சிடாதீங்க. எப்போது திறக்க வேண்டுமோ அப்போது கண்டிப்பாக திறக்கப்படும். இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று தான் அமைதியாக இருக்கிறேன்" என்றார். 


ஃபைல்களை திறந்து பாருங்கள்:




முதல்வரின் இந்த பேச்சிற்கு சட்டமன்றத்தில் இன்று பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "டேபிள் முன்பு இருக்கும் ஃபைல்களை திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என முதல்வர் பேசியிருந்தார். தயவுசெய்து அந்த ஃபைல்களை உடனடியாகத் திறந்து பாருங்கள். அதில் ஏதேனும் ஆதாரம் இருந்தால் தாராளமாக நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டு, ஃபைல்களை திறப்பதற்கு ஜோசியக்காரன் வந்து சொன்னால்தான் திறப்பீர்களா?" என முதலமைச்சரை நோக்கி நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.


மிரட்டல்களுக்கு அஞ்சாத கட்சி:


தொடர்ந்து உரையாற்றிய அவர், "வெறும் உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது. சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை தைரியமாக எடுங்கள். ஆதாரங்கள் இருந்தால் அதை வைத்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, வெறும் எச்சரிக்கைகளை மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது" என்று ஆளுங்கட்சிக்குச் சவால் விடுத்தார்.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு:


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரின் இந்த அதிரடிப் பேச்சு மற்றும் கேள்வி எழுப்பிய விதம் அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆளுங்கட்சியின் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சாமல், நேரடியாக ஃபைல்களைத் திறந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் விடுத்த சவால், திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்