எம்எல்ஏ.,க்களுக்கு கார் கொடுப்பது ஏன்? அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

Aug 21, 2026,12:56 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ) அரசு சார்பில் வழங்கப்படும் சொகுசு கார்கள் மற்றும் வசதிகள் தொடர்பான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.


எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து:

தமிழ்நாடு அரசு தற்போது சந்தித்து வரும் கடும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அரசு சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள கார்களைத் தங்கள் கட்சி (தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவினங்களைக் குறைக்கும் நோக்கில், பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே கார்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு கார்கள் வேண்டாம் என்றும் அவர் பேரவையில் வலியுறுத்தினார்.


அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் விளக்கம்:




உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்திற்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேரவையில் விரிவான விளக்கம் அளித்துப் பேசினார். அவர் பேசுகையில், "கார் வைத்திருக்கும் தவெக எம்.எல்.ஏ-க்கள் யாரும் சென்று அரசு கார் கேட்கப் போவதில்லை. கார் வைத்திருக்காத, ஏழ்மையாக இருக்கும் உறுப்பினர்கள் விண்ணப்பம் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். சொந்த கார் என்னிடம் இருக்கிறது, ஆனால் அரசு காரில் சென்றால் ஒரு மரியாதையாக இருக்கும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சொன்னார்" என்று குறிப்பிட்டார். 


தொடர்ந்து பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைச் சுட்டிக்காட்டி, "எதிர்க்கட்சித் தலைவருக்கு 2, 3 வீடுகள் இருக்கின்றன; ஆனால் அவர் அரசு பங்களாவில் தான் வசிக்கிறார். அந்தக் கடிதத்தைக் கூட பொதுப்பணித்துறை அமைச்சராகிய என்னிடம் தான் ‘அரசு பங்களா வேண்டும்’ என்று அவர் கொடுத்தார். நீங்கள் உங்கள் தேர்தல் பத்திரத்தில் கார் இல்லை என்று சொல்லலாம்; வீடு இல்லை என்று சொல்லலாம்; 'ரூ.10,000 தான் இருக்கிறது' என்று கூட சொல்லலாம். ஆனால் எங்கள் கட்சியிலும் சரி, பிற கட்சிகளிலும் சரி, உண்மையிலேயே கார் இல்லாமலும், வீடு இல்லாமலும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்" என்று அதிரடியாகப் பதிலளித்தார்.


அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த வாதத்திற்கு பதிலளித்த திமுக எம்எல்ஏ., கே.என்.நேரு, எம்எல்ஏ.,க்கள் அனைவரின் வீடுகளுக்கும் அரசு சார்பில் வாடகை வழங்கப்படுகிறது. பொதுப்பணித்துறை அமைச்சர் சொந்த வீட்டில் தான் இருக்கிறார். ஆனால் அவரும் அந்த வாடகை தொகையை பெற்றுக் கொள்கிறார். ஏன், அவர் அது வேண்டாம் என சொல்லட்டுமே?" என்றார். 


சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படை வசதிகள், சொத்து மதிப்பு விவரங்கள் மற்றும் அரசு நிதி மேலாண்மை தொடர்பாக சட்டப்பேரவையில் நடைபெற்ற இந்த அனல் பறக்கும் விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்