- முனைவர் ராணி சக்கரவர்த்தி
ஆண்கள் எந்த வயதிலும் வெளியூர் செல்ல வேண்டும் எனில் ஒரு ஜோடி உடையையும், பர்சையும் எடுத்துக்கொண்டு எந்த பெரிய திட்டமிடலும் இல்லாமல் கிளம்பி விடலாம். ஆனால் பெண்கள் நிலை அப்படியில்லை. அதுவும் திருமணமான பெண்கள் வெளியூரோ, சுற்றுலாவோ கிளம்புவது என்றால் அது பெரிய போராட்டம். வீட்டில் சில ஏற்பாடுகள், வெளியே செல்ல பல முன்னேற்பாடுகள், யாருக்கும் என்ன வேண்டும்? என யோசித்து யோசித்து எடுத்து வைத்து, தண்ணீர் முதல் அனைத்து உணவுகளையும் கட்டி எடுத்துக்கொண்டு கிளம்புவதே பெரிய சவாலாக இருக்கும். சுற்றுலா செல்வதே மகிழ்ச்சியாக இருக்க, என்பதையே மறந்து பல பெண்கள் பதட்டத்தோடும், கோபத்தோடும் இருப்பதைப் பல வீடுகளில் பார்க்கிறோம்.
கூடிச் சிரிப்பது, பேசி மகிழ்வது, ஓடி விளையாடுவது எல்லா வயதுப் பெண்களுக்கும் பிடிக்கும். ஆனால் 30 வயதுக்கு மேல் இப்படி சிரிக்கலாமா? விளையாடலாமா? என்ற தயக்கம், நமது ஆசையை பூட்டுப் போட்டு பூட்டிவிடும். இந்த ஊர் என்ன சொல்லும் உறவுக்காரர்கள் என்ன சொல்வார்கள்? நம் பிள்ளைகள் என்ன நினைப்பார்கள்? என மற்றவர்களின் எண்ணங்களுக்கும், மதிப்பீடுகளுக்கும் முக்கியத்துவம் தந்து நம் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறோம்.
பொதுவாக பெண்கள் தங்கள் குடும்பத்தோடும் சுற்றுலா செல்வதை விட, தன் தோழிகளோடு பயணம் செய்வது, சுற்றுலா செல்வது, ஒரு புது அனுபவமாக இருக்கும். பெரிய பொறுப்புகள், சுமைகள் இல்லாமல் சிறகுகள் முளைத்தது போன்ற உணர்வைத் தரும். பல வீடுகளில் பெண்களைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வது, ஆண்களின் தலையாயக் கடமை. ஆண் துணை இல்லாமல் பெண்கள் வெளியே செல்வது ஆபத்து, நல்ல குடும்பத்து பெண்கள் தனியாக வெளியே செல்ல மாட்டார்கள் என்ற பிற்போக்கான எண்ணத்தோடு இருக்கிறார்கள். அதனால் இந்த குடும்பத்தின் பெண்கள், சிறு சிறு விஷயத்திற்கும் கணவனையோ, அப்பாவையோ, சகோதரனையோ அல்லது மகனையோ நம்பியே வாழும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தன்னால் தனித்து செயல்பட முடியாது, தனக்கு ஒன்றும் தெரியாது என்ற மனநிலைக்கு பெண்கள் வந்து விடுகிறார்கள். மற்றவர்களை சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இது ஒரு வகையான உணர்வு ரீதியான வன்முறை. இது வெளியில் தெரியாத, அதிகம் பேசப்படாத வன்முறை. இது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல, நல்ல பணியில் இருக்கும், கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்களில், பலரும் இந்த சார்பு நிலையில் தான் இருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது.
மனைவியை தாய்வீடு செல்ல தடை போடுவது, தன் உறவுகளோடு, தோழமைகளோடும் பேசத் தடை போடுவது, உனக்கு ஒன்றும் தெரியாது என அடிக்கடி கேலி, கிண்டல் செய்வது, அவளின் தனிப்பட்ட தேவைகளைக் கூட மற்றவர்களிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும், வாங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவது போன்றவைகளும் உணர்வு ரீதியான வரம்பு மீறல்களும் தான். இதுதான் Teddy bear attitude என்பார்கள். உன்னை கண்ணுக்குள் வைத்து பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன், நீ தனியே வெளியில் செல்லாதே, நான் சொல்வது போல் இருக்க வேண்டும், நான் சொல்வது போல் உடை அணிய வேண்டும் என்று சொல்வது, கிளியை தங்கக் கூண்டுக்குள் அடைப்பது போன்றது. இந்தச் சூழலில் வாழும் பெண்களுக்கு சுயசார்பும், சுய மதிப்பீடு குறைந்து, பதட்டமும், மனச்சோர்வும் அதிகரிக்கிறது. தான் சார்ந்து இருப்பவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ? என்ற பயம் அதிகரிப்பதால், பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கி, மனநிம்மதியை இழக்கிறார்கள். இது குடும்ப நிம்மதியையும் குழைத்து விடுகிறது.
பெண்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்:
* ஆண்கள் வளர்க்கப்படும் அதே சூழலில் தான் பெண்களும் வளர்க்கப்படுகிறார்கள்.
* ஆண்களுக்கு இணையாக கல்வி அறிவும், சமூக அறிவும் பெறுகிறார்கள்.
* பெண்கள் இயற்கையில் உடல் வலிமையும், மன உறுதியையும் உடையவர்கள் என்பதை உணர வேண்டும்.
* ஆண்களைச் சார்ந்து இருப்பவள், அடங்கி இருப்பவள் தான் நல்ல குடும்பப் பெண் என்ற எண்ணம் மாற வேண்டும்.
* பெண்கள் தங்களின் தேவைகள், உரிமைகள், கனவு மற்றும் ஆசைகளை ஆராய்ந்து அறிந்து அதற்கு மதிப்பளிக்க வேண்டும்.
* நம்மைச் சார்ந்த பெண்களின் உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்க வேண்டும்.
* பெண் குழந்தைகளைத் தைரியத்தோடும், சுயசார்ப்போடும் வளர்க்க வேண்டும்.
பயணப்படுவோம் தோழி:
இல்லத்தரசி, வேலைக்குச் செல்லும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள் என யாராக இருந்தாலும், பெண்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள எளிய வழி பெண்கள் பயணம் போவது. பெண்கள் மட்டும் சேர்ந்து பயணிப்பது. எல்லா பெண்களுக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும். பெண்களே பயணத்தை ஒருங்கிணைத்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து உறவினர்களோ, தோழிகளோ, நம் வீட்டுப் பெண்களோ யாராக இருந்தாலும் உடன் சேர்ந்துக் கொண்டு, முதலில் அருகில் இருக்கும் இடத்திற்குச் சென்று வரலாம். பேசி மகிழ்ந்து, சிரித்து, ஆடி பாடி வீடு வந்து சேர்ந்ததும் பயணத்தை நினைத்து மனம் குதூகலிக்கும், அடுத்த பயணத்தை திட்டமிடும். உங்களின் எண்ண ஓட்டத்திற்கு இணையான பெண்களை ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.
வயது ஒரு தடை இல்லை. எல்லா வயதுப் பெண்களுக்கும் பயணம் மகிழ்ச்சி தரும். பெண்கள் மட்டும் பயணிக்கும் போது குடும்பச் சுமைகள் மறந்து, உடல் வலிகள் மறந்து, இளமைப் பருவத்திற்குச் சென்ற உணர்வையும், அனுபவத்தையும் தரும். எனவே பெண்களே நம் மனநிலையைப் பாதுகாக்க, மகிழ்ச்சியான வாழ்வு வாழ, சுயமதிப்போடும், மரியாதையோடும் வீரநடை போட, உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள். உங்களின் நிலையை, தேவையை உங்களைச் சார்ந்தவர்களுக்கு புரிய வையுங்கள். உங்களின் வலிமையை உணர, உலகுக்கு உணர்த்த பயணப்படுங்கள் தோழிகளே... போவோமா... ஊர்கோலம்.
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.
பஹல்காம் தாக்குதல்: பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க ராகுல்காந்தி முடிவு!
காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி!
சிறிய கடைகளின் உரிமத்தைக் கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்:டாக்டர் அன்புமணி
மனமாற்றம் வேண்டும்!!
போவோமா ஊர்கோலம்... பயணப்படுவோம் தோழி!
தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை நாளை வெளியிடுகிறார் விஜய்
இந்த வாய்ப்பு உங்களுக்கு தான் மக்களே... இன்றும் தங்கம் விலை குறைவு தான்!
தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாத கல்வி நிதி.. மத்திய அரசுக்கு ஓ.பி.எஸ். திடீர் கண்டனம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 29, 2025... இன்று பிறரிடம் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
{{comments.comment}}