சென்னை: திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமைகளுடன் விளங்கும் ராகவா லாரன்ஸ், தற்போது தமிழக அரசியலில் களம் இறங்குவது குறித்த தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அரசியலுக்கு வருவதாக அவர் கூறி விட்டார். ஆனால் நான் வரலாமா வேண்டாமா என்பதை மக்கள் வழிகாட்டட்டும் என்றும் கூறி கொஞ்சம் லேசாக குழப்பி விட்டுப் போயுள்ளார். அதேசமயம் குட்டிக் கதை, எனது நண்பர் விஜய், அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டேன் என்று சூசகமாகவும் சிலவற்றைக் கூறி விட்டுப் போயுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? தவெக சார்பில் களமிறங்க போகிறீர்களா என கடந்த சில நாட்களாக லாரன்சிடம் மீடியாக்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இது தொடர்பான தனது முடிவை ஜூன் 11ம் தேதி அறிவிக்க உள்ளதாக லாரன்ஸ் ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால் நேற்று எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக ஜூன் 12ம் தேதியான இன்று காலை, தான் அரசியலுக்கு வர உள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தான் அரசியலுக்கு வர வேண்டுமா, இல்லையா என்பதை மக்களாகிய நீங்களே முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "அரசியலில் இணைய நான் தயாராக உள்ளேன். அரசியலில் இணையலாமா? வேண்டாமா? என்பதை மக்களாகிய நீங்களே முடிவெடுத்து சொல்லுங்க. உங்கள் கருத்துகளைக் கேட்ட பிறகு என் முடிவைத் தெரிவிக்கிறேன். நீங்கள் ஆம் என்றால் அரசியலுக்கு வர தயாராக உள்ளேன். வேண்டாம் என்றால் நான் அரசியலுக்கு வர மாட்டேன். தொடர்ந்து தன்னலமற்ற எனது சமூக பணிகளை செய்வேன் என்றும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று காலையே லாரன்ஸ் தனது முடிவை அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் மறைவு காரணமாக, திரையுலகிற்கு மதிப்பளித்து தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்து, இன்று (ஜூன் 12, 2026) இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அரசியல் தனக்கு ஆரம்பத்தில் குறிக்கோளாக இருக்கவில்லை என்று கூறியுள்ள லாரன்ஸ், "பதவிக்காகவோ, பணம் சம்பாதிப்பதற்காகவோ நான் அரசியலுக்கு வர நினைக்கவில்லை. நான் நம்பும் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவருக்கு பக்கபலமாக இருந்து சேவை செய்யலாம் என்றே நினைத்தேன். ஆனால், தற்போதைய சூழ்நிலைகள் என்னை இந்த முடிவை நோக்கி தள்ளியுள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனது அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு எண்ணற்ற மருத்துவ மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வரும் ராகவா லாரன்ஸ், தற்போது மக்களின் நேரடி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தனது அடுத்த அரசியல் பாய்ச்சலை நிகழ்த்தத் தயாராகி வருகிறார். மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு, அவர் தனது இறுதி முடிவையும், எந்தக் கட்சியில் இணையப் போகிறார் அல்லது தனிப்பாதை வகுக்கப் போகிறாரா என்ற விவரத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாரன்ஸ், ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரது கட்சியில் இணையலாம் என காத்திருந்து, ரஜினி அரசியலுக்கு வராததால் தற்போது தானே அரசியல் களத்தில் இறங்க முடிவு செய்திருப்பதை லாரன்ஸ் மறைமுகமாக கூறி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தற்போது அவர் விஜய்யின் தவெக.,வில் இணைவாரா, அல்லது அண்ணாமலை துவங்கி உள்ள புதிய அரசியல் இயக்கத்தில் இணைய போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
Tamil Short story: ஆறுதல்!
Evergreen Bharathiraja: பதினாறுவயதினிலே .. மறக்க முடியாத பாரதிராஜா!
சுக்கிர வார பிரதோஷம்.. சிவனை வழிபடுவதே வாழ்வின் பயன்!
பூத்தூவும் வானம்!
பரிசம் போட வா மாமா!
மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு!
அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!
Tamil Short Story: கறை நல்லது!
{{comments.comment}}