- ச. ஸ்ரீபிரியா
என் தோழி தாயை இழந்தவள். தந்தை படித்த மாப்பிள்ளை பார்த்து மணம் முடித்தார். புகுந்த வீட்டில் ஐந்து ஆண் பிள்ளைகள். மாமனார் படிக்காதவர், ஆனால் ஐவரையும் படிக்க வைத்தார். இருவருக்கு மட்டும் அரசு வேலை; மற்றவர் தனியார் வேலை. வீட்டுக்கு வந்த மருமகள்கள் எல்லோரும் படித்தவர்கள், ஆனால் வேலைக்குச் செல்லவில்லை.
என் தோழிக்கு மட்டும் வேறு வழியில்லை. கணவனுக்கு நிலையான வருமானம் இல்லை. குழந்தை பிறந்ததும் அதைக் கணவனிடம் விட்டு, தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தாள். அவர் குழந்தையைப் பார்த்துக்கொண்டார், வீட்டையும் கவனித்தார். எப்போதாவது கிடைக்கும் அவரது வருமானமும் அவளது சம்பளமும் சேர்ந்து குடும்பம் ஓடியது. மகனைத் தனியார் பள்ளியில் சேர்த்து, கட்டணம் கட்டி, பொறியியல் வரை படிக்க வைத்தனர்.
திடீரென ஒருநாள், மாரடைப்பு அவரை அழைத்துக்கொண்டது. குடி, புகை என எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மனிதர். தோழி உடைந்தாள். ஆனால் தந்தையை இழந்த மகனுக்குத் தாயும் இல்லாமல் போனால் என்ன ஆவான் என்ற எண்ணம் அவளை நிமிர்த்தியது. அன்று முதல் அவள் ஒவ்வொரு நாளும் மெழுகாய் உருகினாள்.மகனுக்காக.

ஒரு பெண் தனியாளாய் நின்று இந்தச் சமூகத்தில் வெல்வது எளிதல்ல. சொல், பார்வை, பழி எனப் பல சோதனைகள். எல்லாம் தாண்டி மகனைப் பொறியியல் முடிக்க வைத்தாள், நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேரத் துணை நின்றாள்.
இந்த வாழ்க்கை சொல்லும் பாடம் ஒன்று தான்: குடும்பத்திற்காக உழைக்கும் கணவன்மார்கள், உடலையும் மனதையும் கவனியுங்கள். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்யுங்கள். தினமும் சிறிது உடற்பயிற்சி, மனைவியோடும் பிள்ளைகளோடும் மனம் விட்டுப் பேசுங்கள், சிரியுங்கள், விளையாடுங்கள். ஏனென்றால் கணவன் இல்லாமல் ஒரு பெண் வாழ்ந்து காட்டுவது இன்றும் பெரும் சவால்.
என் தோழிக்கு நேர்ந்த வலி வேறு யாருக்கும் வேண்டாம். ஆரோக்கியமே உண்மையான சொத்து.அதைக் காப்பதே குடும்பத்திற்குச் செய்யும் முதல் கடமை.
(ச. ஸ்ரீபிரியா பழனிவேல், உதவித் தலைமையாசிரியர், பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
Short Story: நுணுக்கம்!
ஜலநாராயணப் பெருமாள்!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
தந்தையும் ஆன அன்னை!
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
{{comments.comment}}