ஜூன் மாதம் 27.. சகல நன்மை தரும் சிவபெருமானக்குரிய சனிப்பிரதோஷம்

Jun 25, 2026,12:47 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026 ஜூன் மாதம் 27ஆம் தேதி சனிக்கிழமை சகல நன்மை அளிக்கும் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் அமைந்துள்ளது. பிரதோஷம் என்பது சிவ வழிபாட்டில் மிக முக்கியமான வழிபாடு ஆகும்.ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசி திதியில் பிரதோஷ நாள் வருகிறது. 


அதாவது, அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கும் மூன்று நாட்களுக்கு முன் வரும். பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அதிலும், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானதாகும்.


நேரம்:


ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷ தினங்கள் வருகின்றன. திரியோதசி திதி அன்று மாலை 4:30 முதல் 6:00 மணி வரையிலான காலத்தை 'பிரதோஷ காலம்' என்கிறோம். பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும் என்றும், சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட அதீத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


சனிப்பிரதோஷம் ஏன்? அதீத முக்கியத்துவம் வாய்ந்தது :




தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாக, வாசுகி எனும் பாம்பை கயிறாக வைத்து அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலை கடைந்தனர்.தேவர்களும், அசுரர்களும் இருபுறமும் நின்று இழுக்க மலையில் உடல்  அழுந்தி ஏற்பட்ட வலியால் வாசுகி பெருமூச்சு விட்டது. அது விஷமாக மாறி கடலில் கலந்தது. பிரபஞ்சத்தையே அழிக்கும் ஆற்றல் கொண்ட ஆலகால விஷத்தால் உலக உயிர்கள் அனைத்தும் துன்பப்பட்டன. 


எனவே, உலகை காக்கும் பொருட்டு சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். அந்த விஷம் உடலில் இறங்காமல் இருக்க சிவபெருமான் கழுத்தின் தொண்டை பகுதியை பார்வதி தேவி அழுத்தி பிடித்தார். இதனால் விஷமானது சிவபெருமானின் தொண்டையில் நின்று விட்டது.சிவபெருமான் கழுத்து பகுதி நீல நிறமாக மாறியது. இதன் காரணமாகவே ஈசன் "நீலகண்டன்" என்றும் பெயர் பெற்றார்.


அந்த விஷத்தின் வீரியம் காரணமாக சற்று மயங்கிய நிலையில் இருந்த சிவபெருமான் விழித்துக் கொண்டு தன் வாகனமான நந்தியின் இரு கொம்புகளுக்கு  இடையே நடனம் ஆடினார். அவ்வாறு நடனமாடிய நேரத்தை தான் பிரதோஷ நேரமாக (4:30 - 6:00 )கணக்கிட்டு வழிபடுகிறோம்.  சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை என கூறப்படுகிறது. எனவே சனிக்கிழமை அமையும் "சனிப்பிரதோஷம்" அதீத  முக்கியத்துவம் வாய்ந்தது.


வழிபாடுகள் :


பிரதோஷ தினத்தில் முப்பத்து முக்கோடி தேவர்கள்,பிரம்மா, விஷ்ணு ஆகியோரும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். எனவே,அந்த நேரத்தில் நாமும் சிவபெருமானை வழிபட்டு வாழ்வில் உள்ள துன்பம் அனைத்தையும் போக்கிக் கொள்வது சிறப்பு.


பிரதோஷ தின வழிபாடு எவ்வாறு செய்ய வேண்டும்?


பிரதோஷ தினத்தில் நந்தி பகவானை  வணங்கி விட்டு சிவபெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் வந்தடையும். இந்த நாள் விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி,திருநீறு அணிந்து சிவாலயங்களுக்குச் சென்று வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவின்றி விரதம் இருந்து திருமுறைகளை, சிவபுராணம்,சிவன் பற்றிய மந்திரங்கள்  படிக்கலாம்.


ஐந்து எழுத்து மந்திரமான "ஓம் நமசிவாய "எனும் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி வழிபடுவது சிறந்தது. மற்ற நாட்களில் வரக்கூடிய பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதை விட "சனிப்பிரதோஷம் "அன்று விரதம் இருந்து வழிபட ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப விரதம் இருப்பது சிறப்பு. சிவாலயங்களில் சந்திரசேகரன்- பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் மூன்று முறை வலம் வருவார். முதல் சுற்றில் செய்யப்படும் வேத பாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம்  சுற்றில் செய்யப்படும் நாதஸ்வர இன்னிசையும் உடன் வலம்  வந்தபடி கேட்க வேண்டும்.


நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமானை நோக்கி தரிசிப்பது சிறப்பாகும். சனி பிரதோஷம் அன்று விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பாவங்கள் நீங்கி, புண்ணியம் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கு கிடைக்கும். வறுமை நீங்கி, வசந்தம் உண்டாகும். செல்வச் செழிப்பு பெருகும். அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல நன்மை அளிக்கும்.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென் தமிழுடன் எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் ஜூன் 28 முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை

news

திமுக அரசு மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்: தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி

news

"அப்பாவையே காணோம்?": முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

news

மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

news

ஜூன் மாதம் 27.. சகல நன்மை தரும் சிவபெருமானக்குரிய சனிப்பிரதோஷம்

news

இதுவும் சரிதானே!

news

மின்வாரிய நிதிநிலை...வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார்

news

உடைமை தன்மை பற்றி (All about Possessiveness) அலசிப் பிழிவோமா?

news

இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? சூசகமாக சொன்ன கே.என்.நேரு

அதிகம் பார்க்கும் செய்திகள்