கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில், மூன்று பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது, கடலூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கிச் சென்ற பாசஞ்சர் ரயில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் முழுவதுமாக நொறுங்கியது.
விபத்தில் வேனில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் உள்ளிட்டோர் உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
யார் மீது தவறு?
முதற்கட்ட தகவலின்படி, ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படவில்லை என்றும் ரயில்வே கேட் கீப்பரின் கவனக்குறைவே
விபத்துக்குக் காரணம் என்றும் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்தில் குவிந்த பொதுமக்கள் கேட் கீப்பர் மீது தாக்குதலும் நடத்தினர்.
அதேசமயம், ரயில்வே தரப்பில் இன்னொரு தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது கேட் மூடப்பட்ட நிலையில், பள்ளி வேன் டிரைவர்தான், நேரமாகி விட்டது கேட்டைத் திறக்குமாறு கூறியுள்ளார். இதைக் கேட்டு கேட்கீப்பர் கேட்டைத் திறந்துள்ளார் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது. இதில் எது சரி என்று தெரியவில்லை. முழுமையான விசாரணைக்குப் பிறகே என்ன நடந்தது. யார் மீது தவறு என்று தெரிய வரும். தற்போது கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்புக் குழுவினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். விபத்து நடந்த இடத்தில் மாணவர்களின் பாடப்புத்தகங்கள் மற்றும் பைகள் சிதறிக் கிடந்த காட்சிகள் காண்போரை சோகத்தில் ஆழ்த்தின.
{{comments.comment}}