அம்மி குழவியிலிருந்து தக ரடின் வரை.. ரயில் பயணங்களில்!

Sep 28, 2026,11:54 AM IST

- சுதா திருநாராயணன்


எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் செய்த ரயில் பயணங்கள் கணக்கு வழக்கு இல்லை. 6, 7 வயதில் இருந்தே நாக்பூரில் இருந்து டெல்லி சென்னை என பல ஊர்களுக்கும் பெற்றோருடன் பயணம் செய்திருக்கிறேன். 


அப்போதெல்லாம் தேர்ட் கிளாசில் தான் பயணம் செய்வோம். அம்மி குழவியிலிருந்து தக ரடின் வரை சகல பொருட்களுடன் பயணம் கிளம்புவோம். ஐந்தடுக்கு பெரிய கேரியர் நிறைய புளியோதரை, மிளகாய் பொடி தடவிய இட்லி, தயிர் சாதம் என்று அமர்க்களமாய் செல்வோம். ரயிலில் கூடவே பயணிக்கும் பயணிகளுக்கும் சாப்பாடு தருவோம்.


என்னுடைய சில முக்கியமான, நான் மிகவும் ரசித்த  ரயில் பயணங்கள்.

    

என்னுடைய 13வது வயதில் என் தந்தைக்கு நாக்பூரில் இருந்து புணேக்கு மாற்றல் ஆயிற்று. ஆபீஸ் மூலம் சென்றதால் முதல் வகுப்பில் பிரயாணம் செய்தோம். முதன்முறையாக ரயிலில்  முதல்  வகுப்பு  பயணம். அதன்பிறகு பலமுறை பூனாவில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தாலும் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.




பூனாவில் இருந்து பாம்பேக்கு பலமுறை பயணம் செய்துள்ளோம் / பலமுறை தனியாகவும் பயணித்திருக்கிறேன். என்னுடைய அத்தை பம்பாயில் இருக்கிறார். விடுமுறை நாட்களில் அவர் வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.  பூனாவில் இருந்து பாம்பே 3 மணி நேர பயணம் மட்டுமே. 1970களிலேயே தினமும் மும்பை எனப்படும் பம்பாய்க்கு பயணம் செய்து ஆபீஸ் சென்றவர்கள் பலர், பெண்கள் உட்பட. டெக்கான் க்வீன் எக்ஸ்பிரஸ் காலை ஏழேகாலுக்கு பூனாவில் புறப்பட்டு காலை 10 மணிக்கு  பம்பாய் சென்றுவிடும். ஆபீசுக்கு செல்பவர்கள் எல்லோரும் அதில் தான் செல்வார்கள்.  


1978ல் சிம்ஹகட் எக்ஸ்பிரஸ் என்ற டபுள் டெக்கர் ட்ரெயின் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் மேல் தளத்தில் அமர்ந்து சென்ற பயணங்கள் அருமையானவை. பூனாவில் இருந்து பாம்பே செல்லும் போது இயற்கை காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும். கோபோலி என்ற மலைப்பாதை,  ghat section, மிகவும் அழகாக இருக்கும். மாலை மயங்கும் நேரத்தில்  ரயில் மலை பாதையில் செல்லும்போது தாழ்வாக இருக்கும் கோபோலி கிராமத்தின் விளக்கு வெளிச்சங்களை பார்க்கும் பொழுது வானத்து நட்சத்திரங்கள் கீழே இறங்கி வந்து மினுமினுப்பது  போல் பிரமாதமாக இருக்கும். பூனாவிலிருந்து பாம்பே செல்லும் போது நிறைய குகைகளின் ஊடே ரயில் பயணிக்கும். அற்புதமான அனுபவமாக இருக்கும். 


ஒவ்வொரு முறையும் ரயில் பயணங்களை அனுபவித்தது மிகவும் சுவாரசியம். 1979ல் ஆகஸ்ட் மாதம் முதலில் என் நிச்சயதார்த்தத்திற்கு பூனாவில் இருந்து சென்னைக்கு நான் தனியாக வந்தேன். என் பெற்றோர் முன்பே வந்து பிள்ளை வீட்டாரை பார்த்து பேசி முடித்துவிட்டு என் அண்ணனுக்கு தந்தி கொடுத்து என்னை வரச் சொன்னார்கள். நான் கிளம்பிய அன்று ரிசர்வேஷன் கிடைக்காமல் என் அண்ணன் டி டி யாரிடம் கெஞ்சி கூத்தாடி எப்படியோ ஒரு பர்த் வாங்கிவிட்டான். அவனுக்கு அலுவலகத்தில் லீவு கிடைக்காததால் அவனாலும் என்னுடன் வர முடியவில்லை. அன்று டிடி யாருக்கு அவன் கொடுத்த லஞ்சம் இரண்டே ரூபாய். என் சித்தப்பா வீட்டில் என்னைப் பெண் பார்க்க வந்த என் கணவர் வீட்டார் நான் தனியாக பூனாவில் இருந்து வந்தேன் என்று சொன்னவுடன் அதிர்ச்சி அடைந்தனர். என் அத்தை என்னை பார்த்து முழித்துவிட்டு "தெரிஞ்சவா கூட வந்தா" என்று சமாளித்தாள்.  


பிறகு மீண்டும் 1979ஆம் வருடம் அக்டோபர் மாதம் என் திருமணத்திற்காக பூனாவில் இருந்து நகைநட்டு வெள்ளிப் பாதிரம் சகிதம் எல்லோருமாக பயணப்பட்டோம். வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருந்த டிரங்க் பெட்டி மீது நான் படுத்துக் கொண்டு வந்தது இன்னமும் நினைவிருக்கிறது. 


2003இல் என் முதல் மகளுக்கு குஜராத்தில் ரிலையன்ஸில் வேலை கிடைத்து அங்கு போய் சேர்ந்தாள். நான்தான் அவளை அங்கு கொண்டு சேர்த்தேன். அவளுக்கு செகண்ட் ஏசியில் பயணிக்க அனுமதி. நானும் செகண்ட் ஏசி டிக்கெட் வாங்கிக் கொண்டு அவளுடன் பயணம் செய்தது மிகவும் ஜாலியான அனுபவம்.

 

2009ல் என் இரண்டாவது மகள் திருச்சி சென்னை பெங்களூர் மைசூர் பூனா என்று ஒரு டூர் அரேஞ்ச் செய்து நானும் அவளும் மட்டும் ரயிலில் ஏசி முதல் வகுப்பில்  பயணித்தோம். விப்ரோவில் பணியாற்றிக் கொண்டிருந்த அவள்  அப்பொழுதுதான் வேலையை விட்டுவிட்டு இந்த டூர் அரேஞ்ச் செய்தாள்.


2011ல்  கல்கி குழுமத்திலிருந்து தீபம் என்ற ஆன்மீக பத்திரிகையை தொடங்கினார்கள். அப்பொழுது அதில் ஒரு க்விஸ் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு காசியாத்திரை டூர் பரிசாக கிடைத்தது. வெற்றிபெற்ற நான்கு நபர்களில் நானும் ஒருத்தி. ஐ ஆர் சி டி சி யின்  ரூபாய்  5000 மதிப்புள்ள  பத்து நாள் காசி யாத்திரை டூர். என்னுடைய ஆனந்தத்திற்கு அளவே இல்லை. என்னுடைய கணவர் உடனே தனக்கும் பணம் கட்டி  டிக்கெட் புக் பண்ணிக்கொண்டார்.


பரிசு எனக்கு மட்டும் தானே !!!  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் கயாவில் முன்னோர்களுக்கு /பெற்றோர்களுக்கு  கயா சிரார்த்தம் செய்து திருப்தி அடைந்தோம். இந்த காசி யாத்திரை டூரில் அலகாபாத் காசி கயா திரும்பி வரும்பொழுது இராமேஸ்வரம் என்று பல ஊர்களுக்கு அழைத்துச் சென்று எங்களை திருச்சியில் கொண்டு வந்து விட்டார்கள். போகும்போது சென்னையில் போய் ஏறிக் கொண்டோம். பத்து நாளும் மிக அருமையான சாப்பாடு. என் கணவர் இன்னமும் உன்னால்தான் கயா சிரார்த்தம் செய்ய முடிந்தது என்று மிகவும் மகிழ்ச்சியுடன் சொல்வார். இன்னமும் எவ்வளவோ ரயில் அனுபவங்கள் எழுத எழுத ரயில்வண்டி தொடராய் தொடரும்.  


சிறுவயதில் நாக்பூரில் இருந்து டெல்லி சென்னை போன்ற இடங்களுக்கு பல முறை தேர்ட் கிளாஸில் பயணம் செய்திருக்கிறோம். கொளுத்தும் வெயிலில் வியர்வை வழிந்தோட பிரயாணம் செய்தது தனி அனுபவம். ரயில்வேயில் வேலை பார்க்கும் உறவினர் முதல் வகுப்பில் பிரயாணம் செய்வதை பார்க்கும் பொழுது பொறாமையாகவும் ஏக்கமாகவும் இருக்கும். அதையெல்லாம் இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து திருச்சி வருவதற்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் டிக்கெட் புக் செய்திருந்தேன். ஆனால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸிற்க்கு வாங்கி இருக்கிறேன் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு விட்டேன். 


அப்போது என் கணவர் ஒரு ப்ராஜெக்ட்காக சென்னையில் தங்கியிருந்தார்.  அவரிடமும் மற்றும் சந்திக்கச் சென்ற உறவினர்கள் எல்லாரிடமும் ராக்போர்ட்டிற்கு டிக்கெட் வாங்கியிருக்கிறேன், நைட் போகணும் என்று கூறி கூறி தீர்மானமாக அதையே நினைத்துக் கொண்டிருந்தேன். ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்த என் கணவர் "டிக்கெட்டை கொண்டா, எந்த கோச் என்று பார்க்கிறேன்" என்று  டிக்கெட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.




ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் டிக்கெட்டை வைத்துக்கொண்டு ராக்போர்ட்டிற்க்கா போகிறாய் ? என்று சிரித்தார். நல்லவேளையாக ராக்போர்ட்டில் ஒரு பெர்த் கிடைத்தது. மற்றொரு முறை சென்னைக்கும் பெங்களூர் செல்வதற்கும் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு டிக்கெட் வாங்கி வைத்திருந்தேன். சென்னை கிளம்பும் அன்று பெங்களூர் டிக்கெட் எடுத்துக்கொண்டு போகப் பார்த்தேன். நல்லவேளையாக கிளம்பும்போதே டிக்கெட்டை செக்  செய்துவிட்டதால் தப்பித்தேன். நல்லவேளையாக ஃப்ளைட்டுக்கு போகும்போது பாஸ்போர்ட்டை மறப்பதில்லை. 


புகைப்படத்தில் நானும் என் மகளும் 2009ஆம் ஆண்டு ரயிலில்  பயணித்தபோது மாலை மயங்கும் நேரத்தில் ரயிலில் இருந்து எடுத்த அருமையான புகைப்படம்.


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர்.  தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!

news

அம்மி குழவியிலிருந்து தக ரடின் வரை.. ரயில் பயணங்களில்!

news

தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்