கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!

Dec 30, 2025,12:14 PM IST

- ப.அகிலா


சேலம்: தமிழகத்தில் கோனோ கார்பஸ் (Conocarpus) வகை மரங்களை புதிதாக நடுவதைத் தவிர்க்கவும், ஏற்கனவே வளர்ந்துள்ள மரங்களை அடியோடு அகற்றவும் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டுள்ளது. 


வேகமான வளர்ச்சிக்காகப் பல நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அயல்நாட்டுத் தாவரத்தால் ஏற்படும் சூழலியல் சீர்கேடுகளே இதற்கு முதன்மைக் காரணமாகும்.




நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்: இம்மரங்கள் அதீத நீர் வேட்கை கொண்டவை. மண்ணின் ஆழமான அடுக்குகளில் இருக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சித் தீர்ப்பதால், சுற்றுவட்டாரக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மிக விரைவாக வறண்டு போகின்றன.


கட்டமைப்புச் சிதைவுகள்: இவற்றின் வேர் மண்டலம் மிகவும் வலிமையானது மற்றும் ஆழமாக ஊடுறுவும் தன்மை கொண்டது. இது கட்டிடங்களின் அஸ்திவாரம், சுற்றுச்சுவர்கள், நிலத்தடி நீர் குழாய்கள் மற்றும் தார்ச் சாலைகளை ஊடுருவி பெரும் சேதத்தை விளைவிக்கின்றன.


உயிர்ப்பன்மயச் சூழல் பாதிப்பு: மண்ணிலுள்ள சத்துக்கள் முழுவதையும் இம்மரமே எடுத்துக்கொள்வதால், அருகாமையில் வளரும் மற்ற உள்நாட்டுத் தாவரங்களின் வளர்ச்சி முடங்குகிறது. இதனால் இயற்கையான நிலப்பரப்பின் சமநிலை சீர்குலைகிறது.


ஆரோக்கியக் குறைபாடுகள்: இம்மரத்தின் மகரந்தத் துகள்கள் மற்றும் மணத்தினால் மனிதர்களுக்கு ஒவ்வாமை (Allergy), சுவாசக் கோளாறுகள், கண்கள் சிவத்தல் மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற மருத்துவச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.


தீ விபத்து அபாயம்: கோடை காலங்களில் காய்ந்த இதன் இலைகளும் கிளைகளும் எளிதில் தீப்பற்றக்கூடியவை, இது நகர்ப்புறங்களில் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.


நமது மண்ணைச் சேராத மரம் என்பதால், பறவைகளோ அல்லது தேனீக்களோ இந்த மரத்தை வாழ்விடமாகவோ, உணவு ஆதாரமாகவோ கருதுவதில்லை.


சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய மரங்களுக்குப் பதிலாக, மண்ணின் வளத்தை மேம்படுத்தும் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவும் கீழ்க்காணும் பூர்வீக மரங்களை நடுவதற்கு அரசு பரிந்துரைக்கிறது:


வேம்பு மற்றும் புங்கன்

அரச மரம் மற்றும் ஆலமரம்

நாவல் மற்றும் இலுப்பை


குஜராத் போன்ற சில மாநிலங்கள் ஏற்கனவே இந்த மரங்களுக்குத் தடை விதித்துள்ள நிலையில், தற்போது தமிழகமும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.


(ப.அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்