தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!

Jan 29, 2026,01:42 PM IST
- ஸ்வர்ணலட்சுமி

விசுவாவசு வருடம் 2026, பிப்ரவரி 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தை மாதம் 18 ஆம் தேதி முருகப்பெருமானுக்குரிய முக்கிய வழிபாட்டு தினமான தைப்பூசம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தை மாத பௌர்ணமியும் மற்றும் பூச நட்சத்திரமும் இணையும் நாள் இந்த தைப்பூச திருநாள் ஆகும். இந்த நாள் தெய்வீக ஞானத்தின் வடிவமான வேலாயுதத்தை முருகப்பெருமானுக்கு பார்வதி தேவி அளித்த நாள் என்றும் எனவே இந்த நாள் ஞானம்,வெற்றி மற்றும் செல்வ வளம் பெருகும் நாளாகவும் கருதப்படுகிறது.



நேரம்:

பௌர்ணமி திதி பிப்ரவரி 01 ஞாயிற்றுக்கிழமை காலை 4: 41 முதல் பிப்ரவரி 02 திங்கட்கிழமை காலை 4: 43 வரை.

பூச நட்சத்திரம்:

பிப்ரவரி 01 அதிகாலை 1: 54 மணி முதல் பிப்ரவரி 02 அதிகாலை 1.01 மணி வரை.

கொண்டாடப்படும் இடங்கள்:

தைப்பூசத் திருநாள் தமிழ்நாடு,இந்தியா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர்,இலங்கை, அமெரிக்கா என உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள தமிழர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமானின் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குறிப்பாக, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர்,பழனி, சுவாமிமலை,திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய  தலங்களில்  வெகு விமர்சையாக தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசத்திற்கு விரதம் இருப்பவர்கள் 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது தைப்பூசம் நாள் அன்று ஒரு நாள் மட்டும் என தங்கள் உடல் நிலைக்கு ஏற்றவாறு, அவரவர் வேலை பளுவுக்கு  இயன்ற அளவிலும் விரதம் இருந்து வழிபாடு செய்வர். சிலர் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாதயாத்திரையாக சென்றும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

உடல்நிலை சரியில்லாமல் தீராத நோயால் அவதிப்படுபவர்கள் முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டி, அதன்படி நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத் திருநாள் அன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவது வழக்கம்.

தைப்பூச திருநாளை பற்றிய புராணக் கதைகள்  :

பல்வேறு புராண காரணங்கள் தைப்பூசத் திருநாளை பற்றி சொல்லப்படுகிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி போர் ஏற்பட்டது இதில் தாரகாசுரன்,சூரபத்மன் போன்ற அசுரர்கள் தேவர்களை சிறைப்படுத்தினர். இதனால் வருத்தம் அடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் தான் முருகப்பெருமான், இவர் தேவர்களின் சேனாதிபதியாக இருந்து அசுரர்களை அழித்து தேவர்களை காத்தார். இந்த நாளை போற்றும் விதமாகவே தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

இந்த உலகத்தில் முதன் முதலில் நீர்தான் உருவானதாக கருதப்படுகிறது. பிறகு அதில் இருந்து நிலம், உலக உயிர்கள் தோன்றின.அவ்வாறு உலகம் உருவாக தொடங்கிய தினமே தைப்பூசம் என்பது நம் முன்னோர்கள் கூற்று. இதன் நினைவாகவே தான் பல சிவாலயங்களில் தைப்பூச தினத்தன்று "தெப்ப உற்சவ விழா "சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஞானப்பழத்திற்காக விநாயகரும்,முருகனும் போட்டியிட்டு சிவன்- பார்வதியை சுற்றி வந்து விநாயகர் ஞானப்பழத்தை பெற்றதனால், கோபம் அடைந்த முருகப்பெருமான் பழனி மலையில் ஆண்டி கோலத்தில் வந்து நின்றார்.அந்த நாளே  தைப்பூசம் என்றும் கூறப்படுகிறது. எனவே பழனியில் தைப்பூசத் திருநாள் பத்து நாட்கள் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

அன்னை பராசக்தி பழனி மலையில் ஆண்டி கோலத்தில் நின்ற முருகனுக்கு "ஞானவேல்" கொடுத்த நாளே தைப்பூசத் திருநாள் என்றும் கூறப்படுகிறது.

பார்வதி தேவி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடிய நாள் தைப்பூசம் என்றும், சிதம்பரத்தில் சிவன் பார்வதியாக இணைந்து நடனம் ஆடியதும் இந்த நாளே என்றும் கூறப்படுகிறது.எனவே, தைப்பூசத் திருநாளில் சிவன் மற்றும் பார்வதி தேவியின் வழிபாட்டிற்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக இருப்பவர் குருபகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தைப்பூசத் திருநாள் பற்றிய  தகவல்களை அடுத்த பதிவிலும் காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

தைப்பூசம்: முருகப்பெருமானை போற்றிக் கொண்டாடும் திருநாள்!

news

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா: ஆனந்த் அறிவிப்பு

news

கொலம்பியா எல்லையில் விபத்துக்குள்ளான விமானம்.. எம்.பி உள்பட 15 பேர் பலி

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்த தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்காயாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்