பெரிதாக பேசப்பட்ட வெற்றி என்னாச்சு.. தமிழ்நாட்டில் பாஜகவின் சரிவுக்கு அண்ணாமலை தான் காரணமா?

Jun 04, 2024,01:20 PM IST

சென்னை :  தமிழக லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகக் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் ஒரு முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. அண்ணாமலை சற்று அடக்கி வாசித்து இருந்தால் பாஜக.,விற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றும் சொல்லப்படுகிறது.


அண்ணாமலைக்கு முன்பு பாஜக தலைவராக இருந்து வந்தவர் எல். முருகன். அவருக்கு முன்பு தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன். அவரது காலத்தில்தான் தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு நிகராக பாஜகவை மாற்றிக் காட்டினார். கட்சிக்கென்று தனி இமேஜை உருவாக்கினார். பலரையும் பாஜக பக்கம் ஈர்த்தவர் தமிழிசைதான். அவரது பேச்சுத் திறமையும், பதிலுக்குப் பதிலடியாக பேச்சால் கொடுத்த சுவாரஸ்யமான பதிலடிகளும்தான் பாஜக பக்கம் பலரையும் இழுக்க முக்கியக் காரணமாக அமைந்தது.


விமர்சிப்பதிலும் கூட நாகரீகத்தைக் கடைப்பிடித்தவர் தமிழிசை. அவரது சொல் விளையாட்டுக்கள், கிட்டத்தட்ட திராவிடக் கட்சிகளின் சொல்லாடல்களுக்கு இணையாக இருக்கும் என்பதால் அவரது பேச்சுக்களும் மக்களிடையே எடுபட்டன. ஆனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பாஜகவை வளர்க்க முடியவில்லை. காரணம், மக்கள் மனதில் தேங்கிப் போயுள்ள திராவிட சித்தாந்தம் அந்த அளவுக்கு வலுவாக இருந்ததே. இதனால்தான் தூத்துக்குடியில் தமிழிசையே தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது.




முருகனுக்குப் பிறகு தலைவராக வந்த அண்ணாமலை எடுத்த எடுப்பிலேயே அதிரடியைத் தொடங்கினார். அப்போதே அவரது செயல்பாடுகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தின. மூத்த தலைவர்கள் இதை ரசிக்கவில்லை. ஆனால் அண்ணாமலை அவர் போக்கில்தான் போய்க் கொண்டிருந்தார். அவரது அடுத்தடுத்த செயல்பாடுகள், அவர் எடுத்த பல முடிவுகள் பாஜகவுக்கு நன்மை  பயப்பதை விட பாதகத்தையே ஏற்படுத்தின.


தேவையில்லாமல் பேசி அதிமுக.,வுடன் கூட்டணி ஏற்பட விடாமல் செய்து விட்டார் அண்ணாமலை என பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக.,விற்கு இன்னும் செல்வாக்கோ, ஓட்டு வங்கியோ வளரவில்லை. அதாவது ஒரு சக்தியாக உருவெடுக்கும் அளவுக்கு பாஜக வளரவில்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில் அதிமுக போன்ற பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்க வேண்டும். அதே போல் ஜெயலலிதா உள்ளிட்ட மறைந்த அதிமுக தலைவர் பற்றி அண்ணாமலை பேசியது அதிமுக தொண்டர்களிடமும், ஜெயலலிதா மீது நல்ல மதிப்பு கொண்டவர்களிடமும் பாஜக., மீது அதிருப்தியை ஏற்பட வைத்து விட்டது. 


பாஜக தலைவர்கள் சிலவரின் செயல்பாடுகள், மக்கள் நல பணிகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவற்றை பற்றி பேசாமல் வெறும் வாய் சவடால் மட்டுமே விட்டதும் பாஜக.,விற்கு பெரும் சரிவை தந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரச்சாரத்தின் போதும் திமுக.,விற்கு எதிரான விஷயங்களை முன் வைத்த பாஜக, தங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு என்ன செய்வோம் என்பதை தெளிவாக சொல்ல தவறி விட்டது. 


அண்ணாமலை போன்றவர்களின் சில செயல்பாடுகளால் பாஜக.,வில் செல்வாக்கு வாய்ந்த வேட்பாளர்களாக கருதப்பட்ட தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர். நெல்லையில் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவரான நயினார் நாகேந்திரனே தோல்வி முகத்தில் உள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஒருவர் விடாமல் பாஜக வேட்பாளர்கள் அனைவருமே தோல்வி முகத்தில் இருக்கிறார்கள் என்றால் பாஜக சொன்ன செல்வாக்கு எங்கே போனது என்ற கேள்வியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.


இந்த்த தேர்தலுக்குப் பிறகு வடக்கு தெற்கு என்ற பாகுபாடே இருக்காது என்று கூறியிருந்தார் அண்ணாமலை. ஆனால் வடக்கிலேயே பாஜகவை மக்கள் பெரிய அளவில் நிராகரித்துள்ளனர். குறிப்பாக உ.பி, ராஜஸ்தானில் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதீத நம்பிக்கையால் அண்ணாமலை போன்றோர் மக்களின் மனதை கணிக்கத் தவறி விட்டனர் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.


பாஜக.,வின் தமிழக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது பல தொகுதிகள் கண்டிப்பாக பாஜக.,விற்கு தான் என பலரும் கூறி வந்தனர். ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக நிலைமை மாறி உள்ளது. பாஜக., செய்த மற்றொரு மிகப் பெரிய தவறு காங்கிரசில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ விஜயதாரணிக்கு சீட் கொடுக்காமல் ஓரங்கட்டியது. விளவங்கோடு தொகுதியில் செல்வாக்குமிக்க விஜயதாரணி போட்டியிடாததால் அந்த தொகுதி தற்போது பாஜக.,வின் கை நழுவி சென்றுள்ளது.


இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பாஜகவுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பாடம், தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய சக்தியாக இருந்த அதிமுகவை வலுவாக  கட்டுக்கோப்புடன் ஒருங்கிணைத்து அதன் தலைமையில் தேர்தலை சந்தித்திருக்க வேண்டும் என்பதுதான்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்