தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?

Oct 31, 2026,09:56 AM IST

- சு.தா.அறிவழகன்


"சோறு கிடைக்காதா என்ற நிலையில் பசியில் இருக்கிறோம். அப்போது பிரியாணி தருகிறேன் என்று சொன்னால், வேண்டாம் என்றா கூறுவோம்?"


அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய இந்த ஒற்றை வாசகம், தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவைத் தேர்தல் மேடைகளில் கடுமையாக விமர்சித்து, "நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும்; கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாது" என்று தொடர்ந்து கூறிவந்தவர் சீமான். தேமுதிகவை ஆரம்பித்தபோது விஜயகாந்த் கூட இதே மாதிரிதான் பேசினார். ஆனால் பின்னர் தடம் மாறிப் போய் விட்டார். ஆனால் சீமான் தொடர்ந்து தனது அறச்சீற்றத்தைக் கைவிடாமல் சிங்கமென சீறியபடியே இருந்தார். தனித்தே களம் கண்டு வந்தார். 


அவருடைய அயராத உழைப்பு காரணமாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியக்க வைத்தது. ஆனால் தற்போது சீமான் முற்றிலும் மாறிப் போய் விட்டரா என்ற ஆச்சரியத்தை அவரது சமீப காலப் பேச்சுக்கள் கேள்வி எழுப்புகின்றன.




சீமானின் இன்றையக் குரல், அவருடைய கொள்கைப் பாதையில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பமா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


நாம் தமிழர் கட்சி உருவான காலம் தொட்டு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளையும் தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றும், தமிழ் தேசியத்தின் எதிரிகள் என்றும் சீமான் சித்தரித்து வந்தார். "தேர்தல் வெற்றி அல்லது தோல்விக்காக கொள்கையை அடகு வைக்க மாட்டேன்; கூட்டணி வைக்காமல் தனித்து நிற்பதே எங்கள் கம்பீரம்" என்பதுதான் அவரது பிரதான அரசியல் அடையாளமாக இருந்தது.


ஆனால், தற்போது இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் அதை ஏற்பேன் என்று கூறியதோடு, அதை பசியில் இருக்கும்போது கிடைக்கும் பிரியாணியோடு ஒப்பிட்டுப் பேசியிருப்பது அவருடைய தொண்டர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


"இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதை அரசியல் கூட்டணியாகப் பார்க்கக் கூடாது. அரசியல் ரீதியாக ஸ்டாலின், பழனிசாமியை விமர்சிப்பது வேறு, கொள்கை நிலைப்பாடு வேறு. அவர்கள் பெருந்தன்மையுடன் ஆதரவு கொடுத்தால் வேண்டாம் என்று எப்படி கூறுவேன்?" என்று தனது கருத்தை சீமான் நியாயப்படுத்தியுள்ளார்.


இன்றைக்குத் திமுகவின் ஆதரவை ஏற்கும் மனநிலைக்கு வந்துள்ள சீமான், கடந்த காலத்தில் அதே திமுகவை எந்த அளவுக்குக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் என்பதை நினைவுகூர்வதும் அவசியம்.


"திராவிட மாடல் என்பது ஏமாற்று மாடல்; அது தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சி."


"நாற்பதாண்டு காலமாக இந்த மண்ணை மாற்றி மாற்றி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளும்தான் தமிழ்நாட்டின் சீரழிவுக்குக் காரணம். திமுக தமிழ் தேசியத்திற்கு எதிரான பெருஞ்சுவர்."


"தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைச் சுரண்டி, கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதில் திமுக அரசுதான் முதன்மையாக இருக்கிறது."


இப்படி திமுகவை முதன்மை எதிரியாகச் சித்தரித்து  "திமுக ஒழிக" என்ற முழக்கத்துடன் அரசியல் செய்தவர் சீமான். ஆனால், சமீபகாலமாக திமுக மீதான அவருடைய கூர்மையான விமர்சனங்கள் குறைந்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) எதிர்ப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.


திமுகவை விமர்சிப்பதைக் குறைத்துக்கொண்டதும், இடைத்தேர்தலில் திராவிடக் கட்சிகளின் ஆதரவை வரவேற்பதாக அவர் கூறுவதும் பல கேள்விகளை எழுப்புகின்றன:


"சீமானின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்; என்னை ஒருமுறையாவது சட்டசபைக்கு அனுப்பிப் பாருங்கள்" என சீமான் கூறியதன் மூலம், எப்படியாவது சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்ற அரசியல் தேவையை உணர்ந்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.


கம்யூனிஸ்டுகளும், திமுகவும் தங்களது சித்தாந்தத்தில் உறுதியாக இருப்பது போலத் தானும் சமரசமின்றி பயணிப்பதாகக் கூறிக்கொண்ட சீமான், இப்போது நடைமுறை அரசியலுக்கு (Practical Politics) மாறத் தொடங்கிவிட்டாரா?


சீமானின் இந்த 'பிரியாணி' பேச்சைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு அளிப்பது குறித்து "தேர்தல் தேதி அறிவிக்கப்படட்டும்; அதன்பிறகு பேசலாம்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதன் மூலம் திமுகவும், விஜய்க்கு எதிராக சீமானை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த வாய்ப்புகளைத் திறந்தே வைத்துள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.


கொள்கை பிடிப்பு, தனித்துப் போட்டி என்ற பிம்பத்தைக் கட்டமைத்து வந்த சீமான், இப்போது "பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி வேண்டாம் என்பானா?" என்று கேட்டிருப்பது, நாம் தமிழர் கட்சியின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.


இது தேர்தலுக்கான தற்காலிக வியூகமா அல்லது சீமானின் இரும்புக் கரம் தளர்ந்து திராவிடச் சூழலுக்குள் அவர் ஐக்கியமாகத் தொடங்குவதன் அறிகுறியா என்பதை வரும் இடைத்தேர்தலின் முடிவுகளும், எதிர்கால அரசியல் நகர்வுகளுமே தீர்மானிக்கும்!


முந்தைய தலையங்கங்கள்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விலங்குகள் பேசினால்!

news

"புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று" - இதோட உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

news

சென்னை, தேனியை தொடர்ந்து கோவை சிறையில் இருந்தும் கைதி தப்பியோட்டம்

news

வங்கக்கடலில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்கிறது!

news

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்!

news

தென்தமிழ் தலையங்கம்: திராவிட எதிர்ப்பு நிலையிலிருந்து முழுமையாக விலகுகிறாரா சீமான்?

news

பிரியாணி கொடுத்தால் வேணாம்னா சொல்லுவேன்? பொது வேட்பாளர் கேள்விக்கு சீமான் கொடுத்த பதில்

news

"சிறையில் என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை" - நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் பரபரப்பு வாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: அதிகரிக்கும் சிறார் கடத்தல்.. அதிரடி அவசர நடவடிக்கை தேவை!

அதிகம் பார்க்கும் செய்திகள்