அபரா ஏகாதசி விரதம்.. அளவில்லாமல் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும்!

May 13, 2026,04:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


பராபவ வருடம் 2026, மே மாதம் 13-ஆம் தேதி புதன்கிழமையான இன்று 'அபரா ஏகாதசி' விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அளவில்லாத புண்ணிய பலன்களைத் தரும் இந்த ஏகாதசி விரதம், சித்திரை மாத தேய்பிறையில் வருகிறது. இந்த அபரா ஏகாதசி நாளில் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் பாவங்கள் நீங்கப் பெற்று, செல்வம் மற்றும் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். "அபரா" என்றால் "அளவில்லாத" என்று பொருள்.


நேரம்:


ஏகாதசி திதி தொடக்கம்: மே 12, செவ்வாய்க்கிழமை மதியம் 02:52 மணி.

ஏகாதசி திதி முடிவு: மே 13, புதன்கிழமை மதியம் 01:29 மணி.


விரதம் முடிக்கும் நேரம்: மே 14, காலை 05:31 முதல் 08:14 மணி வரை.


ஏகாதசி விரதம்:




ஒரு வருடத்தில் மொத்தம் வரும் ஏகாதசிகள் 24. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு ஏகாதசி விரதங்கள் வரும். இன்றும் பல வீடுகளில் ஏகாதசி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அனைவராலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டாலும், சில குறிப்பிட்ட ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட அளவில்லாத புண்ணிய பலனைப் பெறுவது உறுதி.


அபரா ஏகாதசி என்பது அளவில்லாத புண்ணிய பலன்களைத் தரக்கூடிய விரதமாகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆன்மீகத்தில் உயர்வு பெறுவர். மக்கள் தங்கள் வாழ்நாளில் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களில் இருந்தும் விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வைப் பெற இயலும். இந்த அபரா ஏகாதசி விரதத்தைப் பக்தி சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும் கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் நலங்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.


அபரா ஏகாதசி விரத முறை:


ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்கள் முந்தைய நாள் இரவு விரதத்தைத் தொடங்கிவிடுவர். அந்த வகையில், இந்த மாதம் வரும் அபரா ஏகாதசிக்கு மே 12-ஆம் தேதியே விரதம் மேற்கொண்டு, இரவு உணவைத் தவிர்த்து பால், பழம் எடுத்துக்கொள்வர். வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சமையலில் பயன்படுத்த மாட்டார்கள்.


பெருமாள் கோவிலுக்குச் செல்பவர்கள் துளசி மாலை வாங்கிச் செல்வது சிறப்பு. துளசியை முதல் நாளே பறித்து மாலையாகத் தொடுப்பர். ஏகாதசி அன்று துளசி இலைகளைப் பறிப்பதால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது ஐதீகம்.


பூஜையறையில் பெருமாள் படத்திற்குத் துளசி மாலை சாற்றி, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து, நெய்வேத்தியம் (தயிர் சாதம், பொங்கல், புளியோதரை - இதில் அவரவர்களால் இயன்றவை) படைத்து, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதோ அல்லது ஒலிக்கக் கேட்டு மனதாரப் பெருமாளை வழிபாடு செய்வதோ சிறப்பு.


அபரா ஏகாதசியான இன்று, உலகை ஆளும் பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள் 'தென் தமிழுடன்'. எழுதியவர்: உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்