ராமனும்‌, கிருஷ்ணனும்!

Feb 28, 2026,11:08 AM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


பிப்ரவரி 28 , டிசம்பர் 4 இரண்டிற்கும்‌ ஒரு தொடர்பு உண்டு உங்களுக்குத் தெரியுமா?


திருச்சிக்கும் வத்ராயிருப்பிற்கும் ஒரு தொடர்பு உண்டு. அது தெரியுமா?


ராமனுக்கும்‌ கிருஷ்ணனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. உங்களுக்குத் தெரியுமா?


தெரிந்து கொள்ளுங்கள்.


தேசிய அறிவியல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஏன் கொண்டாடப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும்.  சர் சி.வி.ராமன் இராமன் விளைவை உலகுக்கு உணர்த்திய நாள் பிப்ரவரி 28.வருடம் 1928. 


இராமன் விளைவு என்றால் என்ன?




ஒளி ஓர் ஒளி புகும் ஊடகத்தின் வழியே செல்லும்போது சிதறடிக்கப்பட்டு அதன் அலை நீளத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் அல்லது ராமன் விளைவு எனப்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் இரண்டு துறைகளிலும் இராமன் விளைவு பல்வேறு இடங்களில் பயன்படுகிறது.


இந்தக் கண்டுபிடிப்புக்காக 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசும்‌ சர் சி வி இராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆராய்ச்சியில்‌ திருச்சியில் பிறந்த இராமன்‌ அவர்களுக்கு மிகவும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்து முக்கிய பங்காற்றியவர் தான் வத்திராயிருப்பில் பிறந்த கே.எஸ்.கிருஷ்ணன். 


இவர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் உள்ள விழுப்பனூர் என்ற‌ ஒரு குக்கிராமத்தில் 1898 ல் டிசம்பர் 4 ஆம் தேதி பிறந்தவர்.


இவர் வத்திராயிருப்பில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார். அங்கு படிக்கும் போதே இவரின் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் இரவில் ஒளிரும் விண்மீன்களைக் காட்டி இவரின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டினார்.


ஆரம்பக் கல்வி முடித்த பின்‌ திருவில்லிபுத்தூர் குரு ஞானசம்பந்தர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். அதன் பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும்  மேற்படிப்பை முடித்தார். 




அதன் பிறகு வத்திராயிருப்பில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் சில காலம் பணிபுரிந்தார். அவர் நினைவாக அந்தப் பள்ளியில் அவரது ஒரு உருவச் சிலையும் அறிவியல் ஆய்வகமும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.


பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் துறையில் பணிபுரிந்தார். இயற்பியல் பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் வேதியல் துறையிலும் அவர் சளைத்தவர் அல்ல.


சிக்கலான அறிவியல் கருத்துக்களையும் தமிழில் அழகாக எடுத்துரைக்க முடியும் என்று நம்பினார்.அதனை நடத்தியும் காட்டினார் இதற்கு முன்னோடியாக இருந்தவர் அவர் பள்ளி ஆசிரியர் திருமலைக் கொழுந்து என்பவர் என்பதை அவர் தான் எழுதிய கட்டுரைகளில் தெரிவித்துள்ளார்.


அவர் ஒரு விளையாட்டு வீரரும் கூட டென்னிஸ் கால்பந்து விளையாட்டுகளை மிகச் சிறப்பாக விளையாடுவார்.தமிழ் ஆங்கிலம் சமஸ்கிருதம் மூன்று மொழிகளிலும் வல்லமை பெற்றவர்.


1920 இல் கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இணைந்தார். அப்பொழுதுதான் அவருக்கு சர் சிவி ராமனுடன் தொடர்பு ஏற்பட்டது. ஒளிச்சிதறல் விளைவில் கிருஷ்ணன் மிகவும் ஆர்வம் காட்டினார். எப்போது விடியும் என்று காத்திருந்து ஆராய்ச்சி கூடத்திற்கு ஓடி விடுவாராம்.


ஒளிச்சிதறல் பற்றிய 20க்கும் மேற்பட்ட கட்டுரைகளை சர் சிவி ராமனுடன் இணைந்து நேச்சர் என்ற இதழில் எழுதியுள்ளார். சர் சிவி ராமனே, ராமன் விளைவை கண்டறிந்ததில் கிருஷ்ணனுக்கு அளப்பரிய பங்கு உண்டு என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

அதேபோன்று கிருஷ்ணனும் தான் ராமனுடன் இருந்த நாட்கள் மிகுந்த மகிழ்ச்சிகரமான நாட்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்கள் அவருக்கு மன நிம்மதியை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


கிருஷ்ணன் அற்புதமான பேச்சாற்றலும் கொண்டவர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது அடிக்கடி ஜவஹர்லால் நேரு அவர்கள் அவரை வந்து சந்திப்பாராம். நேரு அவர்கள் கிருஷ்ணன் அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது கிருஷ்ணன்  ஒரு நல்ல அறிவியல் அறிஞர் மட்டுமல்ல.


அவர் சிறந்த குடிமகன். நற்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சூரிய சக்தி, பூமியின் வயது என்ன, நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்ட விதம் போன்ற கட்டுரைகளையும் கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ளார். நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்ட விதம் கட்டுரையைப் படிப்பவர்க்கு அறிவியல் ஆர்வம் வராமல் இருக்க வாய்ப்பே இல்லை.அவ்வளவு அருமையான கட்டுரை. சுதந்திர இந்தியாவில் பிரதமரின் முதல் அறிவியல் ஆலோசராகப் பதவி வகித்தார். இந்தியாவின் பத்மபூஷன் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குனராகவும் பணிபுரிந்தார்.


கிருஷ்ணன் அவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டதோடு அங்கு அவரது  சிலையும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இயற்பியலின் இமயம் என்று போற்றப்பட்டகே எஸ் கிருஷ்ணனைப் போன்ற மாபெரும் அறிவியலாளர் வெளிச்சத்துக்கு வர வேண்டும் .மாணவச் செல்வங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். கே.எஸ்.கிருஷ்ணனின் கட்டுரைகளையும் மாணவச் செல்வங்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.


இந்த வருடம் முதல் இராமனோடு சேர்ந்து கிருஷ்ணனையும் தேசிய அறிவியல் தினத்தில் கொண்டாடச் செய்வோம்.

தமிழ்நாட்டு அறிவியல் அறிஞர்களைப் போற்றுவோம். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு பல சாதனைகள் படைப்போம்.


தேசிய அறிவியல் தின நல்வாழ்த்துக்கள்.


தகவல்:

எஸ்.ராஜசேகரன்

தலைமை ஆசிரியர் 

இந்து மேல்நிலைப் பள்ளி 

வத்திராயிருப்பு


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து

news

கேரளாவில் ஜூன் 4ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: வானிலை மையம் அறிவிப்பு

news

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டணத்தை தகவல் பலகையில் வெளியிட உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்