உலக சுகாதார தினம் .. ஆரோக்கியமே உண்மையான செல்வம்!

Apr 07, 2026,02:48 PM IST
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி மோகன்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினம் ( World Health Day) உலகம் முழுவதும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு மனிதனின் வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது அவனது உடல் நலம் தான்.

1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையினால் உலக சுகாதார அமைப்பு (WHO ) தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் நிறுவன நாளைக் கொண்டாடும் விதமாகவும், உலகளாவிய சுகாதாரப் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் 1950 ஆம் ஆண்டு முதல் " உலக சுகாதார தினம்" அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மையக் கருத்தை முன்வைத்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமாக ஒன்றுபடுங்கள், அறிவியலுடன் நில்லுங்கள்.( Unite for Health, Stand with Science)என்பது  இந்த 2026 ஆம் ஆண்டின் முக்கிய கொள்கையாக இருக்கிறது. அறிவியல் ரீதியான மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும், உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் வலியுறுத்துகிறது.

சுகாதார தினத்தின் முக்கிய நோக்கங்கள்.

விழிப்புணர்வு.

எளிதில் பரவும் தொற்று நோய்கள், மற்றும் பரவாத சர்க்கரை மற்றும் இதயநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

சமத்துவம் 

ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்தல்.

முன்னெச்சரிக்கை.

" வருமுன் காப்போம்" என்ற அடிப்படையில் முறையான தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனைகளை ஊக்குவித்தல்.



உயிர் காப்பு 

தாய், மற்றும் சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

நாம் எடுக்க வேண்டிய உறுதி மொழிகள்.

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க தனிமனித ஒழுக்கம் மிக மிக முக்கியமானது. அதற்கு நாம் செய்ய வேண்டியவை.

இயற்கை உணவு - ரசாயனம் கலந்த உணவுகளைத் தவிர்த்து சிறு தானியங்கள் மற்றும் இயற்கை விவசாய விளை பொருட்களுக்கு முன்னுரிமை அளித்தல்.

நெகிழி அல்லது பிளாஸ்டிக் இல்லாத உலகம் - பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் புற்றுநோய் போன்ற பாதிப்புகளைத் தடுத்தல். மற்றும் காற்று மாசுபாட்டினைத் தவிர்த்தல்.

நீர் பாதுகாப்பு - சுத்தமான குடிநீர் ஆரோக்கியத்தின் முதல் படி.எனவே நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல்.

டிஜிட்டல் டிடாக்ஸ் (Digital Detax) - வாரத்தில் ஒரு நாளாவது மின்னணு சாதனங்களைத் தவிர்த்து  இயற்கையோடு நேரத்தைச் செலவிடுதல்.

தவறான பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல் - புகைபிடித்தல் மது அருந்துதல் போதை போன்ற உயிர்க் கொல்லி பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல்.

உடல் உழைப்பு, மனநலம் காத்தல்- தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மற்றும் யோகா செய்து உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்.

தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாகாமல் போதிய உறக்கம் மற்றும் தியானம் செய்து மன அழுத்தம் வராது தவிர்த்தல். மேலும் இறைவன் தந்த உடம்பை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருத்தல்.

முடிவாக ஆரோக்கியம் என்பது ஒரு இலக்கு அல்ல.அது ஒரு அழகான பயணம்.நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, சிந்திக்கும் எண்ணம் இவை மூன்றையும் தூய்மையாக வைத்திருந்தால் மருந்து மாத்திரைகள் இல்லாத வாழ்க்கையை நாம் வாழ முடியும்.எனவே வரும் தலைமுறைக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து ஆரோக்கியமான சுற்றுச்சூழல் மற்றும் திடமான உடல் மட்டுமே.

"உடம்பார் அழியில் உயிரார் அழிவார்" என்றார் திருமூலர். " நல்லுடல் அறியும் நயந்திடச் செய்தாய்" என்றார் பாரதி.

" பசித்து புசி , தனித்து விழி, இசித்து நட" என்ற நம் முன்னோர்கள் நமக்குத் தந்த எளிய சுகாதார சூத்திரத்தைப் பின் பற்றி இன்று மட்டுமல்ல என்றென்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம் . உலக மக்கள்  அனைவருக்கும்  உலக சுகாதார தினம் நல் வாழ்த்துக்கள்.நன்றி.

(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர்.  பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தினசரி 2 முறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.. செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்

news

"வீட்டிலிருந்தபடியே ஓபி சீட்": அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு

news

TET ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை: ஐகோர்ட் அதிரடி!

news

ஆரோக்கியா பால் மற்றும் தயிர் விலை திடீர் உயர்வு - நாளை முதல் அமல்!

news

அனைத்து தகுதியான பயனாளிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் : முதல்வர் விஜய் உத்தரவு

news

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை...அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

news

Wayanad: வயநாடு நிலச்சரிவிற்கு இது தான் காரணம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

news

கிரீடம் அணிந்த மொட்டுகள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

இமயமலையில் அவதரித்த.. தனித்துவ மலர்.. பிரம்ம கமலம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்