மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

Jul 11, 2026,09:19 PM IST
மைசூர்: இந்தியத் திரையுலகின் பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியான எஸ். ஜானகி (88) சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். இத்தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அவரது மறைவுச் செய்தியை எஸ். ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான அறிக்கை ஒன்றின் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், மூத்த பாடகியான ஜானகி அம்மாள், தனது குடும்பத்தினரின் அன்பான அரவணைப்பிற்கு இடையே அமைதியான முறையில் உயிர் நீத்தார் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த துயரமான நேரத்தில் தங்களது குடும்பத்தின் தனிவுரிமையை மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடும்பத்தின் சார்பில் இந்த உருக்கமான குறிப்பைப் பகிர்ந்த அப்சரா எழுதியிருப்பதாவது:



"எனது அன்பிற்குரிய பாட்டியும், புகழ்பெற்ற பாடகியுமான திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவுச் செய்தியை மிகுந்த மனவருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர் தனது குடும்பத்தினரின் அன்பிற்கு மத்தியில் அமைதியாக எங்களை விட்டுப் பிரிந்தார். எங்கள் இதயங்கள் பாரமாக இருந்தாலும், அவர் வாழ்ந்த அசாதாரணமான வாழ்க்கைக்காகவும், தனது காலத்தால் அழியாத இசையின் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு அவர் தந்த அளவிட முடியாத மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் நன்றியுணர்வுடன் இருக்கிறோம்.

உலகிற்கு அவர் எண்ணற்ற நினைவுகளின் அங்கமாக மாறிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க குரல். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, அவர் ஒரு அன்பான பாட்டி. அவரது அரவணைப்பும், எளிமையும், கனிவும், நளினமும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவராகக் கருதப்படும் எஸ். ஜானகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அசாத்தியக் குரலால் திரையுலகை ஆட்சி செய்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உட்பட பல இந்திய மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதை 4 முறை வென்றுள்ளார். இதுமட்டுமின்றி 30க்கும் மேற்பட்ட பல்வேறு மாநில அரசுகளின் உயரிய விருதுகளையும், கௌரவங்களையும் அவர் பெற்றுள்ளார்.

அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னிந்தியாவின் இசைக் குயில்

தென்னிந்தியாவின் இசைக்குயில், பாடும் நிலவு என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் எஸ். ஜானகி. கர்நாடக இசையை முறையான வகுப்புகளுக்குச் சென்று நீண்ட காலம் கற்றவர் அல்லர். சிறு வயதில் ஒரு நாதஸ்வர வித்வானிடம் (பைடிசாமி) சில காலம் விளையாட்டாக இசை கற்றுக்கொண்டார். அவரது அபாரத் திறமையைப் பார்த்த குரு, "நீயே ஒரு சங்கீதம், உனக்கு நான் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை" என்று ஏழே மாதங்களில் அனுப்பிவிட்டாராம்!

80-களில் புகழின் உச்சத்தில் இருந்தபோது, ஜானகி ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட பாடல்களை வெவ்வேறு ஸ்டுடியோக்களுக்குச் சென்று பாடி சாதனை படைத்துள்ளார். அசுர வேகமும், அசாத்திய சுருதி சுத்தமும் கொண்டவர்களால் மட்டுமே இது சாத்தியம்.

குழந்தையின் மழலைக் குரல் (எ.கா: சின்னத் தாய் அவள் படத்தில் வரும் மழலை முனகல்), துள்ளலான இளம்பெண்ணின் குரல், முதியவளின் தழுதழுத்த குரல் என ஒரே பாடகியால் எப்படி இத்தனை குரல்களில் பாட முடிகிறது என்று வியக்க வைத்தவர். 

சிங்கார வேலனே தேவா` பாடலில் நாதஸ்வரத்திற்கு இணையாக அவர் பாடிய சங்கதிகள் இன்றும் ஒரு பாடகியின் உச்சக்கட்ட திறமைக்கான சான்று.



பல பாடகர்கள் பாடும்போது உணர்ச்சியால் கைகளை அசைப்பது, முகப்பாவனைகளை மாற்றுவது வழக்கம். ஆனால், ஜானகி அம்மா பாடும்போது மிக எளிமையாக, நேராக அமர்ந்து பாடுவார். உதடுகள் மட்டுமே அசையுமே தவிர, கைகளையோ உடலையோ அசைக்க மாட்டார். ஆனால், அந்த உணர்ச்சிகள் அனைத்தும் அப்படியே பாடலில் பதிவாகிவிடும். அதனாலேயே அவர் "Queen of Expressions" என்று அழைக்கப்படுகிறார்.

மத்திய அரசு 2013-ஆம் ஆண்டு அவருக்கு 'பத்ம பூஷண்' விருது அறிவித்தபோது, அதை அவர் பணிவோடு மறுத்துவிட்டார். "தென்னிந்தியக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் மிகவும் தாமதமாகவே கிடைக்கிறது" என்பதைச் சுட்டிக்காட்டவும், தென்னகக் கலைஞர்களின் உரிமைக் குரலாகவும் ஒலிக்கவே அவர் அந்த விருதை ஏற்க மறுத்தார்.

எஸ்.ஜானகி 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எஸ். ஜானகி அதிக அளவில் பாடல்கள் பாடிய மொழி கன்னடம், அதற்கு அடுத்தபடியாகத்தான் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம்.

தமிழ் திரையுலகின் மூன்று தலைமுறை முன்னணி இசையமைப்பாளர்களான எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் இசையிலும் மாநில அரசு விருதுகளை வென்ற ஒரே பாடகி இவர்தான். 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் குரலால் கோடிக்கணக்கான இதயங்களை வருடிய ஜானகி அம்மாவின் எளிமையும், அவரது அபாரக் குரல் வளமும் என்றும் அழியாத திரையிசை பொக்கிஷங்கள்

88 வயதாகும் எஸ். ஜானகி ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர்.  1957ம் ஆண்டு முதல் அவர் திரைப்படங்களில் பாட ஆரம்பித்தார். 4 தேசிய விருதுகள், 30 மாநில விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை அவர் அலங்கரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்