சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரபல நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தனது அரசியல் வருகை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி போட்டி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, வரும் ஜூன் 11 ஆம் தேதி ஒரு முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை 27,416 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தோற்கடித்தார். எனினும், தேர்தல் விதிகளின்படி ஒரு நபர் ஒரு தொகுதியை மட்டுமே தன்வசம் வைத்திருக்க முடியும் என்பதால், முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்தத் தொகுதியில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் களம் இறக்கப்படலாம் என ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வந்தது.
ராகவா லாரன்ஸ் விளக்கம்:

இந்த அரசியல் ஊகங்கள் குறித்துப் பேசியுள்ள ராகவா லாரன்ஸ், "ஊடக நண்பர்கள் பலர் தொடர்ந்து என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இது குறித்து விளக்கம் கேட்டு வருகின்றனர். இந்த வதந்திகள் மற்றும் விவாதங்கள் தற்பொழுது மிக உச்சியைத் தொட்டுள்ளதால், இதற்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் தற்போது 'பென்ஸ்' (Benz) திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். இந்தப் படப்பிடிப்பு ஜூன் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து, எனது தாயாரின் ஆசீர்வாதத்துடன், எனது வாழ்க்கை குறித்த ஒரு மிக முக்கியமான முடிவை வரும் ஜூன் 11ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யுடன் நீண்டகால நட்பு:
முதலமைச்சர் விஜய்யுடன் ராகவா லாரன்ஸ் நீண்டகாலமாக நெருங்கிய நட்பில் இருந்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'திருமலை' திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு லாரன்ஸ் நடனமாடியது முதல் இவர்களது நட்பு தொடர்ந்து வருகிறது. சமீபகாலமாக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் முடிவுகளுக்கு ராகவா லாரன்ஸ் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முந்தைய நாள், அவருடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்த லாரன்ஸ், மக்கள் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், திரைப்படத் தொழில்நுட்ப அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டபோது எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த லாரன்ஸ், முதலமைச்சர் விஜய் சிந்தித்துதான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றும், புதிய அமைச்சருக்கு நாம் அவகாசம் தந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் தவெக-விற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருந்தார்.
லாரன்ஸின் இந்தத் திடீர் எக்ஸ் பதிவு, அவர் தவெக கட்சியில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவாரா அல்லது அவரது அறக்கட்டளை சார்ந்த வேறு ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடுவாரா என்ற பெரும் விவாதத்தையும் சுவாரசியத்தையும் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது. அனைவரின் பார்வையும் தற்போது ஜூன் 11 செய்தியாளர் சந்திப்பை நோக்கியே உள்ளது.
ஒரு மிடறு!
Tamil Poem: செல்லக்குட்டி வெல்லக்கட்டி!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா.. என்ன திட்டத்தில் இருக்கிறார் நடிகர் லாரன்ஸ்?
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
{{comments.comment}}