காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?

Sep 16, 2025,11:21 AM IST

சென்னை : தமிழக அரசியல் வரலாற்றில் மிகச்சிறந்த பெண் ஆளுமையாக தன்னை நிலை நிறுத்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு முன்பும் சரி, அவரது மறைவிற்கு பிறகும் சரி அவரை போன்ற ஒரு பெண் ஆளுமையை தமிழக அரசியல் களம் இதுவரை காணவில்லை. தமிழக அரசியலில் அனைத்து கட்சிகளிலும் பல பெண் தலைவர்கள் இருந்தாலும் அவர்களில் ஒருவரால் கூட ஜெயலலிதா இடத்தை நிரப்ப முடியவில்லை என்பதை விட, ஜெயலலிதா அளவிற்கு அறியப்படும் முகமாக கூட எவரும் வரவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை.


2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆட்சி காலத்திற்கு பிறகு இது மிகப் பெரிய திருப்புமுனையை தமிழகத்தில் ஏற்படுத்த போகும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை, திமுக- அதிமுக இடையே வாழ்வா? சாவா? என்ற நிலையில் இருக்கும் மிக கடுமையான போட்டி, பாஜக.,விற்கு தமிழகத்தில் காலூன்ற கிடைத்துள்ள மிக முக்கியமான வாய்ப்பு என பல அனைத்து அரசியல் கட்சிகளின் கோணத்திலும் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. 


இந்த தேர்தலில் தமிழக அரசியல் களத்தில் போட்டியிடுவதற்கு பெண் தலைவர்களில் யாருக்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய ஆளுமையாக அவர்கள் அரசியலில் காலூன்றுவதற்கு கை கொடுக்கும் என்பதை அலசி ஆராயலாம்.


திமுக  :




தேசிய அரசியலில் திமுக.,வின் முகமாக பார்க்கப்படுபவர் கனிமொழி. திமுக தலைவர் கருணாநிதியிடமே அரசியல் பயின்றவர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர். கடந்த 15 ஆண்டுகளில் பார்லிமென்ட்டில் தமிழகத்திற்காக அதிகம் ஒலித்த குரல் என்றால் அது கனிமொழி உடையது தான். 


தமிழக அரசியலிலும் எதிர்கட்சிகளின் தாக்குதல்களை சரியாக கையாண்டு, அவற்றிற்கு கவுன்ட்டர் கொடுத்த தெரிந்தவர். அது மட்டுமல்ல பாஜக.,வின் பிரச்சாரங்களுக்கு சரியாக பதிலடிக்க தெரிந்தவர்.  காட்டமான விமர்சனங்களையும் கூட நாகரீகமாக எதிர்கொண்டு களமாடுவதில் கில்லாடி கனிமொழி. ஆனால் அவரை மாநில அரசியலில் அதிகம் பயன்படுத்தாமல் மத்திய அரசியலில் தொடர்ந்து திமுக பயன்படுத்தி வருகிறது.


தேசிய அரசியலில் தன்னை நிரூபித்த கனிமொழிக்கு இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தால் நிச்சயம் தன்னுடைய அரசியல் ஆளுமை திறனை காட்டுவதுடன், பெண்களின் ஓட்டுக்களை அள்ளுவதற்கு திமுக.,விற்கு கை கொடுப்பார்.


அதிமுக :




தமிழக அரசியலில் பெண்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஜெயலலிதா வளர்த்த அதிமுக.,வில் அவருக்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் பெண் தலைவர் யாரும் உருவாகாதது மிகவம் வேதனைக்குரிய விஷயமாகும். கோகுல இந்திரா, வளர்மதி உள்ளிட்ட சிலர் அமைச்சர்களாக இருந்த அனுபவம் கொண்டவர்கள் என்றாலும் தங்களுக்கு என்று தனித்துவமான பலம் வாய்ந்த தொண்டர்கள், கட்சியில் செல்வாக்கு, பலம் என எதையும் இவர்கள் எவரும் பெறவில்லை. அதிமுக.,வில் பெண் தலைவர் என ஜெயலலிதாவிற்கு பிறகு எவரும் இல்லாத ஒரு மைனசாகவே பார்க்கப்படுகிறது.


பெண் தலைவர்களை உருவாக்காத கட்சியாகவும் அதிமுக மட்டுமே திகழ்வும் வேடிக்கையான ஆச்சரியமான ஒன்று. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிமுகவில் கண்ணுக்கு எட்டிய வரையில் ஆளுமையான பெண் தலைவர்கள் யாருமே இல்லை.


பாஜக :




தேசிய கட்சியான பாஜக.,வுக்கு தமிழ்நாட்டில் மிகவும் வலிமை வாய்ந்த பெண் தலைவர்கள் உள்ளனர். தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் என இந்த வரிசையில் பலரும் உள்ளனர். தமிழ்நாட்டில் பிறந்தவரான, அதேசமயம் கர்நாடகத்திலிருந்து எம்.பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான நிர்மா சீதாராமனையும் இந்த லிஸ்ட்டில் சேர்க்க முடியும். அதேசமயம், நிர்மலா சீதாராமனை விட தமிழிசைக்கும், வானதிக்கும் தான் தமிழ்நாட்டில் அதிக மக்கள் அபிமானம் இருக்கிறது. அதிலும் தமிழிசைக்கு இருக்கும் பிரியர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கமானது. அக்கா அக்கா என்று அன்போடு அழைக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திலும் பிரிக்க முடியாத பாசப் பிணைப்புடன் தமிழிசை இருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.


தமிழிசை செளந்தர்ராஜன் ஏற்கனவே மாநில கவர்னராக இருந்த அனுபவமும், தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த அனுபவமும், லோக்சபா தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அனுபவமும் உடையவர். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஒரு புதிய முகம் கிடைக்க காரணமாக இருந்தவர். அவரது கடுமையான உழைப்பையும், எதிரிகளுக்கு அவர் கொடுக்கும் அதிரடியான பதிலடியும் மறக்க முடியாதது.


அதே போல் வானதி சீனிவாசன், கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை நேருக்கு நேராக எதிர்கொண்ட, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கடைசிய நிமிடத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏ., ஆனவர். வருகிற சட்டசபை தேர்தலில் டாக்டர் தமிழிசைக்கு சீட் கொடுத்து அவரை எம்எல்ஏ ஆக்கி சட்டசபைக்கு அனுப்பினால் நிச்சயம் பாஜகவின் அதிரடியான பெர்பார்மென்ஸை சட்டசபையில் பார்க்க முடியும் என்பது பலரின் கருத்தாகும்.


பெண் ஆளுமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி என்பதை மீண்டும் பாஜகவால் நிரூபிக்கவும் முடியும்.


தேமுதிக 




தமிழ்நாட்டில் இப்போதைக்கு பெண் தலைவர் ஒருவர் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார் என்றால் அது தேமுதிகதான். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சி நடை போட்டு வருகிறது. ஆனால் ஜெயலலிதா அளவிலான ஆளுமையுடன் அவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. காரணம், அவரது தலைமையில் தேமுதிக இதுவரை எந்த எழுச்சியையும் பெறவில்லை, வெற்றியையும் பெறவில்லை. ஒருவேளை வருகிற சட்டசபைத் தேர்தலில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால் கட்சிக்கு கணிசமான வெற்றியைத் தேடிக் கொடுத்தால் ஆளுமையானவராக உருவெடுக்க வாய்ப்புண்டு.


காங்கிரஸ்




காங்கிரஸ் கட்சியிலும் பல பெண் தலைவர்கள் உள்ளனர். ஜோதிமணியை அதில் முதல் வரிசையில் சேர்க்க முடியும். ஆனால் மூத்த தலைவர்களைத் தாண்டி அவரால் ஒரு அளவுக்கு மேல் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலையே உள்ளது. காங்கிரஸ் கட்சியில் பெண் மாநிலத் தலைவர் ஒருவர் வந்து பல காலமாகிறது. எனவே இந்தக் குறையை காங்கிரஸ் எப்போது தீர்க்கும் என்பது எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உள்ளது.


நிதர்சனத்தில், ஜெயலலிதாவுக்கு அடுத்து வேறு எந்தப் பெண் ஆளுமையும் ஒரு கட்சியை நிர்வகிக்கும் சூழலோ அல்லது வாய்ப்போ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதிமுக உள்பட எந்தக் கட்சியிலும் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வொர்க் பிரம் ஹோம் தலைவராக இருந்த விஜய்.. வீக்கெண்டு தலைவராக மாறி இருக்கிறார் : தமிழிசை செளந்தரராஜன்

news

பின் தொடராதீர்கள்.. போலீஸ் விதித்த புதிய கட்டுப்பாடு.. பிரச்சார திட்டத்தில் மாற்றம் செய்த விஜய்

news

Nano Banana மோகம்.. புயலைக் கிளப்பிய கூகுள்.. ஆபத்தானது.. எச்சரிக்கும் நிபுணர்கள்!

news

மீண்டும் அதன் சுயரூபத்தை காண்பித்த தங்கம் விலை... இன்றும் புதிய உச்சம் தொட்டது!

news

இமாச்சலப் பிரதேசத்தை உலுக்கி எடுக்கும் கனமழை.. நிலச்சரிவில் மூன்று பேர் பலி

news

கைக்கூலிகள்.. யாரை சொல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. அதிமுகவில் அடுத்து நடக்க போவது என்ன?

news

காலியாக இருக்கும் ஜெயலலிதாவின் இடம்.. நிரப்புவதற்கு ஏற்ற சரியான பெண் தலைவர் யார்?

news

மனக்காயங்களும் துன்பங்களும் (Hurt & Suffering)

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 16, 2025... இன்று பணம் தாராளமாக வரும்

அதிகம் பார்க்கும் செய்திகள்