- ஆனந்தி சத்யராஜ்
சர்வதேச மகளிர் தினத்திற்காக குறுஞ்செய்திகளையும், படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கும் பெண்களாகிய நாம் சிலவற்றை நம்முள்ளே கேள்வி கேட்டு அசை போட வேண்டும்.
பிரபஞ்சத்தின் சக்தி, உயிர்களின் ஆதி, உந்துதலின் மூலம் இவையெல்லாம் பெண்தான்.
பெண் மலர் போன்றவள் என்பது சரிதான், ஆனால் மணமும் அழகும் மட்டும் உடைய மென்மையான மல்லிகை மலர் அல்ல அவள். தான் இருக்கும் நீரின் அளவிற்கு ஏற்ப தன் தண்டை உயர்த்தி, தானும் உயர்ந்து அழகாய் மலர்ந்திருக்கும் தாமரை மலர் போன்றவள்.
இந்த இருபதாம் நூற்றாண்டில், விஞ்ஞான பரணின் மேலேறி நிலவின் முதுகில் பயணித்து வெற்றி உலா செல்லும் பல பெண்கள் ஒரு பக்கம் இருக்க....

மறுபக்கம் அலைபேசி, நாடகத் தொடர்கள், திரைப்படங்கள், அழகு சாதனங்கள், சமூக ஊடகங்கள் இவை அனைத்தும் நம்முள் இருக்கும் பல சீதைகளை சிறைபிடித்து வைத்திருக்கும் ராவண மாய மான்களாக இருக்கின்றன.
இதில் சிக்கியவர்கள் கனவிற்கும், கவிதைக்கும், காதலுக்கு அடிமையாகாமல், வண்ணத் திரைக்கும், சின்னத்திரைக்கும் வடிகாலாகாமல், விளம்பரத்திற்கும், மோகத்திற்கும் போதை பொருட்களாகாமல், அழகு, சுதந்திரம், உரிமை என்றெல்லாம் கூறி கலாச்சார சீரழிவுக்கு கள்ளத் தோணிகள் ஆகாமல் மீள்வது ஒரு பெரும் போராட்டமாய் இருக்கின்றது.
ஆண்டாண்டு காலமாக பெண் சுதந்திரம் என்று போராடிக் கொண்டே இருக்கும் நம்மிடம் எத்தனை எத்தனை அவலங்கள் இன்னும். நிர்பயா, சுவாதி, அனிதா, பொள்ளாச்சி கதறல்கள், பாலியல் வன்கொடுமைகள் இன்னும் அடங்கவில்லை. இனி இவை எல்லாம் நடக்காமல் இருக்க பிறரை குறை சொல்லி பிழை இல்லை. பெண்கள் தன்னைத்தானே காத்துக் கொள்ளும் மகா சக்திகளாக மாற வேண்டும்.

உடற்பயிற்சியையும், அறிவு பெருக்கத்தையும் முன்னோக்கி.... நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் உடைய செம்மை மாந்தர்களாய் வாழ்வோம்.
உயிரை காக்கும், உயிரினை சேர்க்கும், உயிரினும் மேலான இந்த பெண்மையை ஊது கோள்களும், ஆடு கோள்களும், அடுப்படியும் கொண்டு மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைத்தனை கொளுத்தி, எட்டு அறிவினில் ஆணுக்கு பெண் இளைப்பில்லை என்பதை காட்டி, பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதுமாய் நம்மை ஒரு பக்கம் செதுக்கிக் கொண்டு, மறுபக்கம் பெண்மைக்கே உரிய தாய்மையையும், சுய ஒழுக்கத்தையும் எங்கும் எதற்கும் பணயம் வைக்காமல், அதை மனதிலும் உணர்விலும் சுமந்து வாழ்வோம்.
வலியது மட்டுமே பிழைத்திருக்கும், இது என் விதி என்று எதற்கும் தேங்கி விடாமல், வீரம் கொண்ட வெளியே வந்தால் பெருமை மிக்க மாதர்களாய் இப்பிறப்பை நாம் இன்பமாய் வாழ்ந்து வெல்வது உறுதி.
உங்களில் ஒருவளாக மங்கையர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}