"கானுறு மலர்"..  காய்த்த மரமே கல்லடி படும் .. சவிதாவுக்கு சபாஷ் போட்ட எழுத்தாளர் இந்துமதி!

Jul 28, 2023,01:50 PM IST
சென்னை: எழுத்தாளர் - கவிஞர் சவிதா, குமுதம் இதழில் வெளியாகியுள்ள கானுறு மலர் என்ற சிறுகதை விவாதங்களையும் சலசலப்புகளையும் எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக பழம்பெரும் எழுத்தாளர் இந்துமதி தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் எழுத்தாளர் இந்துமதி பதிவிட்டுள்ள அவரது கருத்து:

இந்த வாரக் குமுதம் மீண்டும் பேசப் பட்டது. நிறையப் பேரின் விமரிசனத்திற்கு ஆளானது. என்னைக் கூப்பிட்டு கோபப் பட்டார்கள். என்னவோ குமுதத்திற்கு நான் ஆசிரியர் போலவும்,  அல்லது பேசு பொருளான அந்தக் கதையை நான் எழுதியது போலவும் என்னிடம் ஏன் கோபப்படுகிறார்கள் என்பதே எனக்குப் புரியவில்லை. போர்னோ என்றார்கள். நீலப் படம் என்றார்கள். நம் கலாச்சாரம் என்றார்கள். நீங்கள் எழுதவில்லையா, சிவசங்கரி எழுதவில்லையா, தி.ஜா வை விடவா.. என்றார்கள். உங்களிடமெல்லாம் இருந்த கண்ணியம் ஏன் இந்தக் கதையில் இல்லை என்றார்கள்.



அது வரை நான் அந்த சிறுகதையைப் படிக்கவில்லை. இத்தனை சொல்லும்படி அந்தக் கதையில் என்ன இருக்கிறது...?

குமுதத்தைப் புரட்டினேன். வழக்கப்படி ஷ்யாமின் அற்புதமான ஓவியத்தோடு "கானுறு மலர்"..

அசத்தல் ஆரம்பம்..12 லிருந்து 4 அசாதாரணமான நேரம் தான்.அமானுஷ்யம் நிறைந்தது தான். சாடின் துணி மாதிரி வழுக்கிக் கொண்டு போகும் நடை. அதன் பளபளப்பு மினுமினுப்பு எல்லாம் கொண்ட தமிழ். ஒரு பெண்ணின் உளவியல் மிக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தேவைகள் ஆளாளுக்கு வேறுபடும். அவளின் தேவை அவளுக்கு. அவனின் தேவை அவனுக்கு. இருவரும் உடலோடு ஒத்துப் போகிறார்கள்.. அந்த அளவிலேயே அவன் அவளுக்கு. சற்று மீறி மொபைல் எடுத்துப் பார்க்கிற ஆளுமை அவளுக்குப் பிடிக்கவில்லை. அல்சேஷன் மாதிரி பாய்கிறாள். நகங்களால் கீறி ரணப்படுத்துகிறாள். அந்த ஆக்ரோஷம் எதற்கு என்று புரிந்து கொள்கிறான். மீண்டும் திருப்தி படுத்துகிறான்...

எனக்கு " அவள் அப்படித்தான் "  மஞ்சு ஞாபகம் வந்தது. இதிலும் அவள் பெயர் மஞ்சு தான். இந்த மஞ்சு என்கின்ற பெயர் குறியீடாக மாறிவிட்டதோ என்று தோன்றுகிறது. மறக்க முடியுமா பாத்ரூமில் ஸ்ரீப்ரியா கமல்ஹாசன் காட்சியை..



"அவள் ஒரு திருப்தியுராத பெண்."-- இது ரஜினி மஞ்சு பற்றி சொல்லும் விமரிசனம்.

இந்த மஞ்சுவும் அந்த மஞ்சுதான்.. எந்த வித குற்ற உணர்வும் அற்றவள். எதற்காக குற்ற உணர்வு என்பதுதான் கேள்வி.

எனக்கு மிகப் பிடித்த விஷயம் அவளது கணவன் பற்றி ஒரு வார்த்தை இல்லாதது. அது அவசியமற்றதும் கூட. அவன் குழந்தையுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். குழந்தை அவனுடையதாகவும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். 

கடைசியாக செல்வி என்கிற அவனது மனைவியின் போன்கால். பேசி முடித்து விட்டுச் சொல்கிறான்

" இனி நான் வரும் போது கொலுசைக் கழற்றி வைத்து விடு."

கொலுசு சத்தம் மனைவிக்குக் கேட்டு விடக் கூடாது.. ஆணாதிக்கம் இதில் கூட இருப்பதை அழகாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அந்த ஆதிக்கத்தை வெறுக்கின்ற பெண்ணே மஞ்சு..

சவிதாவின் எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். வித்தியாசமானதாக இருக்கும். ஆழ்ந்த அழுத்தமான எழுத்து. வழுக்கிக் கொண்டு ஓடும் நடை. கவிதைத் தமிழ்.. 

காய்த்த மரமே கல்லடி படும்  என்பதுதான் நினைவுக்கு வந்தது.
வாழ்த்துக்கள் சவீ..
நல்ல எழுத்துக்களையும், எழுத்தாளர்களையும் குமுதம் விடாது.

சமீபத்திய செய்திகள்

news

ஓபிஎஸ்.,க்கு இடமில்லை...ஸ்டாலினுக்கு அனுபவமில்லை...விஜய் தலைவரே அல்ல...வெளுத்து வாங்கிய இபிஎஸ்

news

நான் ரெடி.. அருமை அண்ணன் இபிஎஸ்ஸுடன் பேச டிடிவி தினகரன் தயாரா.. ஓ.பி.எஸ். அதிரடி சவால்!

news

பிப்ரவரி 3ம் தேதி கூட்டணியை அறிவிக்கும் தேமுதிக.. யாருடன் இணைகிறது?

news

தமிழக வாக்காளர் பட்டியல் 2026...பெயர் சேர்க்க 10 நாட்கள் கால அவகாசம் நீட்டிப்பு

news

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்... பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

news

முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்...தைப்பூசத்திற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்

news

அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு... வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும்: எடப்பாடி பழனிச்சாமி

news

நெல்லை தொகுதியையும், என்னையும் பிரித்து பார்க்க முடியாது: நயினார் நாகேந்திரன்

news

டி20 உலகக் கோப்பை: இந்தியாவைப் புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் தீவிரம்?

அதிகம் பார்க்கும் செய்திகள்