சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கும் 19,484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டது. 12ம் தேதி இரவிலிருந்தே மக்கள் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் செல்வதற்காக ஆயத்தமாகி வருகின்றனர். இதையடுத்து சிறப்புப் பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று காலை அதிகாரிகளுடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு சிறப்புப் பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியானது.
அதன்படி சென்னையிலிருந்து ஜனவரி 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மொத்தம் 19484 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இதில் சென்னையிலிருந்து மட்டும் 11,006 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் 11 முன்பதிவு மையங்கள் செயல்படும். இதில் கிளாம்பாக்கத்தில் மட்டும் 5 முன்பதிவு மையங்கள் இருக்கும்.
கிளாம்பாக்கம், கே.கே.நகர், பூந்தமல்லி, தாம்பரம், மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும். கோயம்பேடு வருவோர், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு எந்தத் விதமான தடையும் இல்லாத வகையில் இணைப்புப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை, தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலிருந்தும் மொத்தம் 17,589 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.