செல்வமா? செல்வாக்கா?

Sep 04, 2026,04:00 PM IST

- அ. தாமஸ்


செல்வம் இருக்கும் பலரிடம் செல்வாக்கு இருப்பதுமில்லை; இருந்தாலும், அது நிலைப்பது இல்லை. 


நேற்று மாலை, ஒரு நகரின் மத்திய பகுதியில், சாலையின் ஓரத்தில் சிறிய ரக கனரக வாகனத்தில் அமர்ந்த நிலையில், அருகிலிருந்த கடையில் பொருள் ஒன்று வாங்க உதவி கோரிக் கொண்டிருந்தேன். அப்பொழுது எதிர்த்திசையில் இருந்த ஒரு மகிழுந்தில் இருந்து இறங்கி வந்த "செல்வச் செழிப்பு" மிக்க ஒருவர் என்னிடம் வந்து, "மைத்துனரே! நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உறவுகள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?" என்று நலம் விசாரித்தார். 


அவர் நினைத்திருந்தால், அவரின் செல்வச் செழிப்பை நினைத்து, என்னைக் காணாமல் கடந்திருக்கலாம். அவர் ஒரு மிகப்பெரிய கட்டிடப் பொறியாளர். கோயம்புத்தூர், காளையார்கோவில் போன்ற இடங்களில் சொந்த வீட்டையும் பல்வேறு ஆலயக் கட்டுமானப் பணிகளையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கக்கூடிய மிகப் பெருமைக்குரியவர். அத்தகையவர், தன் செல்வத்தையும் பெருமையையும் மறந்துவிட்டு, எளிமை ஒன்றையே தன் ஆடையாய் அணிந்து, என்னிடம் வந்து நலம் விசாரித்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவரிடமும் என் மகிழ்ச்சியை உள்ள உவகையோடு பகிர்ந்தேன். 




என்னால் நான் இயக்கி வந்த வாகனத்தை விட்டு இறங்கக் கூட முடியவில்லை. அந்நிலையிலேயே நான் இருந்தபடி அவரிடம் நலம் விசாரித்தேன். ஆனால், அவரோ அவருடைய வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, என்னிடம் நலம் விசாரித்து விட்டு, மீண்டும் சென்று தன் வாகனத்தில் ஏறி, தன் பயணத்தைத் தொடர்ந்தார். இந்நிகழ்வு, அவரின் செல்வத்தைவிட அவரின் எளிமை, அவரின் செல்வாக்கை என்னிடத்தில் பல மடங்கு உயர்த்தியது. 


ஆம், அன்பு உறவுகளே! செல்வம் மதிப்புப் பெறுவது நம் எளிமையான செயலால்தான். எனவேதான், செல்வத்திலும் மேலானது செல்வாக்கு என்பதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன். இனிவரும் காலங்களில், நாம் ஒவ்வொருவருமே, நாம் வறுமையில் வாழ்ந்தாலும், வளமையில் வாழ்ந்தாலும், செல்வத்தைவிட செல்வாக்கைச் சேர்ப்பதில் முனைப்பு காட்டுவோம்.


செல்வம் ஒருநாள் அழிந்துபோகும்; ஆனால் நல்ல செல்வாக்கு எந்நிலையிலும் அழியாது. செல்வம் உள்ளவரை, அவரிடம் இருக்கும் செல்வம் மட்டுமே அவரை மதிப்புக்குரியவராகக் காட்டும். ஆனால், செல்வாக்கு உடையவரிடம் இருக்கும் செல்வம் குறைந்தாலும், அவரின் செல்வாக்கு ஒருகாலும் குறையாது. 


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்