சென்னை : அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேட்டி அளித்து வருகிறார்கள். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உள்ளன என இப்போது வரை தெளிவு இல்லாத நிலை தான் உள்ளது. மற்றொரு புறம் அதிமுகவுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஒரு பக்கம் ஓபிஎஸ் அதிமுக ஒன்று சேர வேண்டும் என்கிறார். மற்றொரு புறம் சசிகலா, தன்னை கட்சியின் பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிடுகிறார். மற்றொரு புறம் செங்கோட்டையன், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒன்று சேர்க்க 10 நாட்கள் இபிஎஸ்.,க்கு கெடு விதிக்கிறார். அதிமுக தலைமையும் செங்கோட்டையனின் கட்சி பொறுப்புக்களை பறித்துள்ளது.
இப்போது தான் அதிமுக.,வில் இருக்கும் பிரச்சனைகள், குழப்பங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, இபிஎஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். போகும் இடமெல்லாம் கூட்டமும் அலை மோதுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி பலமாகி வருவதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக தினமும் புதிது புதிதாக அதிமுக.,வில் பிரச்சனை கிளம்பி வருகிறது.
அதிமுக.,வில் நடக்கும் இந்த குழப்பங்களுக்கு பின்னால் திமுக இருப்பதாக ஆரம்பத்தில் சில பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் தற்போது பாஜக.,விற்குள் நடக்கும் உட்கட்சி பூசலின் எதிரொலியால் தான் அதிமுக.,விலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தமிழக பாஜக.,விற்குள் உட்கட்சி பூசல் இருப்பதாக சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா.,வும் தெரிவித்திருப்பதாக சொல்லப்பட்டது. தமிழக பாஜக.,வில் தலைமை மாற்றி உடனேயே அதிமுக உடன் கூட்டணி என அறிவித்ததை பாஜக.,வில் இருக்கும் சிலர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. அதே போல் அதிமுக.,வுடன் மீண்டும் கூட்டணி வைத்ததையும் பாஜக.,வில் உள்ள சில தலைவர்கள் இதுவரை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளாமல் அதிருப்தியிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதிமுக உடனான கூட்டணியில் இருந்து பாஜக., விலகியதால், அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் எதிர்பாராமல் கட்சி மேலிடம், அதிமுக.,வுடன் கூட்டணி வைத்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டது. சரி முதல்வர் பதவிக்கு தான் வாய்ப்பு இல்லை. குறைந்தபட்சம் அமைச்சர் பதவிக்காவது வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக., சார்பில் கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு என்ற ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் அதிமுக அதை ஏற்க மறுத்து விட்டது.
அதிமுக உடன் கூட்டணி வைக்காமல் இந்த முறையும் தனித்து போட்டி என்று முடிவு செய்தால் 2021 தமிழக சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட நிலைமை தான் இரண்டு கட்சிகளுக்கும் மீண்டும் 2026லும் வரும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக கூடி பேசி அதிமுக-பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக கட்சியில் உள்ள ஒரு சிலர் இதை விரும்பவில்லை. தங்களின் முதல்வர், அமைச்சர் ஆசைகளில் மண் விழுந்ததால், அதிமுக.,வில் அதிருப்தியாளர்களுடன் பேசி, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல பாஜக.,விற்குள்ளாகவே, தங்களுக்கு வேண்டாதவர்களுக்கு எதிராக சிலர் உள்குத்து வேலைகளையும் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் கட்சி, கூட்டணி என இரண்டிலும் பல முரண்பாடுகளை பாஜக, அதிமுக இரு கட்சிகளுமே சந்தித்து வருகின்றன.
இரு கட்களின் தலைவர்களும் உடனடியாக இதை சரி செய்யாவிட்டால் தொண்டர்கள் அளவில் பல்வேறு விதமான பிரிவுகள் வந்து விடும். அது தேர்தலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று இக்கட்சிகளின் கீழ் மட்ட நிர்வாகிகள் கருதுகிறார்கள், கவலை தெரிவிக்கிறார்கள்.
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து கிராம் 10,000த்தை கடந்தது!
{{comments.comment}}