சென்னை: செருப்பு அணியால் இருக்கும் விரதத்தை முடித்துக் கொள்வோம். அனைவரும் செருப்புகளை அணிந்து கொள்ளுங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவரும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக செருப்பு போடாமல் இருந்து வந்தார் அண்ணாமலை . திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை செருப்பு போட மாட்டேன் என்றும் அவர் செய்தியாளர்கள் முன்னிலையில் சபதமும் செய்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்ளும் போராட்டத்தையும் அவர் நடத்தி பரபரப்பைக் கூட்டியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலையின் ஆசை நிறைவேறாமலேய அவர் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். நேற்று புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட கையோடு புதிதாக ஒரு ஜோடி செருப்பை வாங்கி அண்ணாமலையிடம் கொடுத்து போட்டுக்கொள்ளச் சொல்லி உத்தரவிட்டார். அவரது அன்புக் கட்டளையைத் தட்ட முடியாமல் அண்ணாமலையும் செருப்பு போட ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற உறுதியோடு, கடந்த சுமார் நான்கு மாதங்களாக, நான் உட்பட
தமிழ்நாடு பாஜக சகோதர சகோதரிகள் பலரும், காலணி அணியாமல் விரதத்தை மேற்கொண்டு வருகிறோம்.
நேற்றைய தினம், மாநிலத் தலைவர், அன்பு அண்ணன் நயினார் நாகேந்திரன், அவர்களின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, தமிழகத்தில், வரும் சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக ஆட்சியை நிச்சயம் அகற்றும் என்ற உறுதியுடன், காலணி அணியத் தொடங்கியிருக்கிறேன்.
என்னுடன் விரதம் மேற்கொண்டு வந்த பாஜக சகோதர சகோதரிகள், வரும் நாட்களில், தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கல்லையும் முள்ளையும் கடந்து பயணப்பட்டு, தங்கள் கடின உழைப்பை வழங்க வேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே, அண்ணன் திரு
நயினார் நாகேந்திரன் அவர்களின் அன்பு அறிவுறுத்தலை ஏற்று, அனைவரும் தங்கள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று, உங்கள் அன்பு சகோதரனாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
{{comments.comment}}