மும்பை: மும்பையில் கன மழை பெய்த சமயத்தில் அதைப் பயன்படுத்தி ஆட்டோக்கள், டாக்சிகள் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதைத் தொடர்ந்து அதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் அதிகாரிகள்.
கனமழையின் போது வாடகை வண்டிக் கட்டணங்கள் அதிகரிப்பது வழக்கம். சமீபத்தில் மும்பையில் பெய்த கனமழையின் போதும் அதே நிலைதான் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்ததால், வாடகை வண்டி நிறுவனங்கள் இயற்கைச் சீற்றத்தை பயன்படுத்தி பயணிகளின் பாக்கெட்டுகளை காலி செய்வதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டன.
கனமழை பெய்த சில நாட்களில், அதிக கட்டணங்களை விதித்து பல மடங்கு கட்டணங்களை உயர்த்திய ஆப் அடிப்படையிலான வாடகை வண்டிகள் மீது
மகாராஷ்டிரா அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தது. போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்னாயக் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
குறைந்தது 147 ஆப் அடிப்படையிலான வாடகை வண்டி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் 36 நிறுவனங்கள் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டது.
வார இறுதியில் மற்றும் இந்த வார தொடக்கத்தில் பெய்த கனமழையால்,
மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுப் போக்குவரத்து அமைப்புகள் முடங்கின. தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், நகரத்தின் உயிர்நாடியாக கருதப்படும் உள்ளூர் ரயில்கள் தாமதமாக ஓடின அல்லது ரத்து செய்யப்பட்டன.
போக்குவரத்து நெருக்கடியை பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்திய செயலி அடிப்படையிலான வாடகை வண்டி நிறுவனங்கள் மீது பல புகார்கள் எழுந்தன. சில சமயங்களில், வழக்கமாக ரூ. 200 ஆக இருக்கும் கட்டணம் பல மடங்கு உயர்ந்து ரூ. 600 முதல் ரூ. 800 வரை உயர்த்தப்பட்டதால் மக்கள் பெரும் அவதியடைந்தனர்.
புகார்களை அடுத்து, மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு இதுபோன்ற வாடகை வண்டி சேவைகள் மீது நடவடிக்கை எடுக்க சர்னாயக் உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களில், போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறையினரால் ஒரு திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 147 செயலி அடிப்படையிலான வாடகை வண்டி சேவைகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டது. இவற்றில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 36 வாடகை வண்டி நிறுவனங்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளது தெரியவந்தது.
மழைக்காலங்களில் இதுபோல மக்களிடமிருந்து கூடுதலாக கட்டணம் வசூலிப்பது எல்லா ஊர்களிலும் நடக்கிறது. மழைக்காலம் மட்டுமல்லாமல் பீக் ஹவர், விசேஷ தினங்கள் உள்ளிட்ட எந்த வாய்ப்பு கிடைத்தாலும் உள்ளே புகுந்து காசு பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நிரந்தரமாக கடிவாளம் போட வேண்டியது அவசியமாகும்.
{{comments.comment}}