சென்னை: பெண்களுக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு அடியுமே போராட்டம்தான்.. ஆணாதிக்க உலகில், பெண்களுக்கு என்று எந்த சவுகரியமும் கிடையாது, கொடுக்கப்படவும் மாட்டாது.. அவர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுக் கேட்டோ அல்லது போராடியோதான் அவர்கள் பெற வேண்டியுள்ளது. இந்த காலகட்டம் வரை அது தொடர் கதையாக தொடர்வதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது.
இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத்தில் தொடர்ந்து போராட்டங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனுஷியை சந்திக்க நேரிட்டது. அவர் கூறிய கதையைக் கேட்டபோது இப்படிப்பட்ட அற்புதமான பெண்கள்தான் இப்போது நமது சமுதாயத்திற்குத் தேவை என்ற ஆச்சரியமும் தொற்றிக் கொண்டது. அவரது கதை கண்ணீரை வரவழைக்கிறது.. அதேசமயம், அவரது மனஉறுதி பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
அவரது பெயர் பிரியா, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசித்து வருகிறார்.. அவரது கதையை அவர் வார்த்தைகளிலேயே கேளுங்கள்..
என் பெயர் பிரியா. எனக்கு தாய் , தந்தை, தம்பி இருந்தனர். என் தாய் தன் தாய்மாமாவை 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். என் தாயாருக்கு தன் வாழ்க்கையை எதிர்கொள்ள தைரியம் இல்லை. என் தந்தை மிகவும் கோபமானவர். மனைவியை அன்பால் கையாள வேண்டும் என்று தெரியாமல், அவர் நினைத்தபடி என் தாயார் வாழ வேண்டும் என நினைத்தார். இதனால் என் தாயார் ஒரு விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
அப்போதும் தன் பிள்ளைகள் கஷ்டப்பட்டு விட கூடாது என நினைத்து எங்களையும் சேர்த்து தன்னுடன் கொண்டு செல்ல நினைத்தார். அப்போது எனக்கு 7 வயது. என் தாயாரை காப்பாற்ற வேண்டும் என நினைத்து நான் மட்டும் உயிர் பிழைத்து விட்டேன். என் தாயாரையும் என் சிறிய தம்பியையும் இழந்து விட்டேன்.
அதன் பிறகு என் அப்பாவுடன் வாழ்ந்து வந்த எனக்கு அம்மாவின் ஏக்கம் வந்தது. அந்த வயதில் என் அப்பாவின் குணம் அறியாமல் எனக்கு இன்னொரு தாய் வேண்டுமென்று கேட்டது தான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பாவம். என் தந்தை அந்த தாயையும் (சித்தி) இன்று வரை கொடுமைப்படுத்தி வருகிறார். இந்த தாய்க்கு ஒரு மகன் உள்ளார். அவனையும் என் தாய்க்கு எதிராக மாற்றி விட்டார் என் தந்தை. இதனால் என் உறவினர்கள் அனைவரும் எனக்கு திருமணம் செய்து வைக்க என் தந்தையிடம் கூறினார்கள். என் தந்தை என்னை வேலைக்கு செல்ல கூறியதால் என் தாய்மாமா என்னை அழைத்து வந்து நல்ல வரனாக பார்த்து திருமணம் செய்து வைத்தார்.
என் தாய் போல் இல்லாமல் என் திருமண வாழ்வை நன்றாக வாழ வேண்டும் என நினைத்தேன். இப்போது எனக்கு ஒரு ஆண் பிள்ளை , ஒரு பெண் பிள்ளை இருக்கிறார்கள். நான் பிஏ ஆங்கிலம் படித்துள்ளேன். எனது படிப்பை நான் உபயோகமாக மாற்ற விரும்பினேன். நான் கற்றதை அனைத்து குழந்தைகளுக்கும் கற்றுத் தருகிறேன்.மேலும் படிக்க வேண்டும் என ஆசை இருந்தாலும் , குழந்தைகளை வைத்து கொண்டு இயலவில்லை. யார் படிப்பு தொடர்பாக என்ன சந்தேகம் கேட்டாலும் அவர்களுக்கு கற்று கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பேன்.
பெண்களுக்கு படிப்புதான் மிகப் பெரிய ஆயுதம். கணவனே சரியில்லை என்றாலும் பெண்களுக்கு கல்வி கைகொடுக்கும். என் தாய் செய்தது போன்ற கோழைத்தனம் எந்த பெண்ணின் வாழ்விலும் நிகழக் கூடாது. படித்த பெண்ணிற்கு தன் குழந்தைகளை ஏதாவது பணி செய்து அவர்களை வளர்க்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருக்கும். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாயாரை என் தம்பியின் திருமணத்திற்கு பிறகு என் வீட்டிற்கு அழைத்து வந்து அவரை நன்றாக கவனித்து கொள்வேன். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்கனவே மணம் முடித்தவரை இரண்டாம் திருமணம் செய்து, அந்த முதல் குழந்தையாகிய என்னை வளர்த்து ஆளாக்கிய என் தாய் தெய்வத்திற்கு சமம்.
எனக்கு என்னோட கல்வி தான் என்னை வாழ வைக்கிறது. பெண்கள் நினைத்தால் சாதித்து விடுவார்கள். வயது அதிகரிக்க அதிகரிக்க பெண்களிடம் மன வலிமை அதிகரிக்கும்.
நான் எல்லாப் பெண்களுக்கும் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்.. பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். படித்து கொண்டிருக்கும் போதே தையல் போன்ற கைத்தொழில் கற்றுக் கொடுங்கள். கூடவே தைரியத்தையும் ஊட்டி வளருங்கள். ஒரு பெண் படித்தால், அவளது வீட்டை மட்டுமல்ல, நாட்டையும் உயர்த்துவாள். நாம் ரோல் மாடலாக திகழ வேண்டும்.. நம்மைப் போல பலருக்கும் நமது கல்வியை ஊட்ட வேண்டும்.. அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும் எனது வாழ்க்கையை இதன் மூலம் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார் பிரியா.
பிரியாவுக்கு மேல் படிப்பு படிக்க வேண்டும், நிறைய பேருக்கு உதவ வேண்டும். தன்னைப் போல எல்லோரும் தைரியம், கல்வியறிவுடன், உதவும் மனப்பான்மையுடன் வளர வேண்டும் என்று அதிக கனவுகள் உள்ளன. தற்போது மேல் படிப்பு படிக்க வசதியில்லாத நிலையில் வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். அதிலும் கூட பல பிள்ளைகளுக்கு தனி அக்கறையுடன் போதிப்பதோடு அவர்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். திருவண்ணாமலை, தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளிலும் கூட அவர் பங்கேற்றுள்ளார்.
பெண்களைப் பொறுத்தவரை தடைகள்தான் அதிகம்.. அந்தத் தடைகளை உடைத்து அவற்றை தடங்களாக மாற்றி நடை போட வேண்டியது மட்டுமே அந்த தடைகளை அவர்கள் தகர்த்து முன்னேற முக்கியம். அதற்கு மன தைரியம், மன உறுதி மற்றும் கல்வி ஆகியவை மிக மிக முக்கியம்.. பிரியாவிடம் இது அபரிமிதமாக இருக்கிறது.. அவர் ஜெயித்தால், 100 பிரியாக்களின் வெற்றியாக அது அமையும்.. அவரும் ஜெயிக்கட்டும்.. அவரைப் போன்ற மற்ற பிரியாக்களுக்கும் அவர் வெற்றிப் பாதையைக் காட்டட்டும். வாழ்த்துவோம்.
24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
சென்னையில் எப்ப Rain சீன் தெரியுமா.. 23 டூ 30.. செம மழை இருக்காம்.. என்ஜாய் பண்ண ரெடியாகுங்க!
கச்சத்தீவை மீட்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
கரூர் உயிரிழப்பு சம்பவம்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது: சீமான்!
அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. கேன்சல்லேஷன் கட்டணம் இல்லாமலேயே டிக்கெட்டை மாத்திக்கலாம்!
புதிய உச்சத்தில் தங்கம் விலை...ஒரு கிராம் ரூ.12,000 ஐ நெருங்கியது... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம்.. பிரதமர் மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தகவல்.. ராகுல் காந்தி கண்டனம்
{{comments.comment}}