சென்னை: விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கி, மர்ம உறுப்பைத் தாக்கி கொடூரமாக நடந்து கொண்டதாக ஏஎஸ்பி பல்வீர் சிங் உள்ளிட்டோர் மீது எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை நடத்துவார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கோட்ட ஏஎஸ்பியாக இருந்தவர் பல்வீர் சிங். இவர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகளிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியும், மர்ம உறுப்பில் தாக்குதல் நடத்தியும்அவர் மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின, வீடியோக்களும் வலம் வந்தன. இதையடுத்து துணை ஆட்சித் தலைவர் விசாரணைக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் சேரன்மாதேவி சப் கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். அதன் பின்னர் பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். சர்ச்சைக்குரிய காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன், பூமன், ராஜகுமாரி, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், பெருமாள், என் சக்தி நடராஜன்,சப் இன்ஸ்பெக்டர் சந்தான குமார் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் பல்வீர் சிங் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை, தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. அவர் ஒரு மாதத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
{{comments.comment}}