பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!

Jan 15, 2026,01:01 PM IST

- வனஜா


தீமையைப் போக்கி 

தூய்மையைத் தேக்கி

வன்மையைப் போக்கி

நன்மையைத் தேக்கி

சுயநலம் போக்கி

பொதுநலம் ஆக்கி

மன அன்பினை தேக்கி

இன வம்பினை போக்கி

செல் போனை சுருக்கி

சொந்தங்கள் பெருக்கி

மனித மனங்களின்

மாசினை எல்லாம் தூசு போல் போக்கிட வந்த

போக்கி திருநாளே

போக்கி என்பதே எதிர்மறை என்று

போக்கில் உள்ள க் 

கினைப் போக்கி

போகியாய்

ஆகிய இத்திருநாளில்

இன்று புதிதாய் பிறந்தோமடா

என்று இனிதாய்

மொழிவாயடா


இது என் ஊரென

உவகை கொண்டு

புது மண் பானையில்

தண்ணீர் கொண்டு

பாலுடன் அரிசியைப் பாங்குடன் இட்டு

உள்ளம் சிலிர்க்க வெல்லம் கலந்து

ஒதுங்கிக் கிடந்த

உறவுகள் கூடிட 

பொங்கலோ

பொங்கல் என்றுரத்துக் கூவிட 

கிண்டிடக் கிண்டிடக்

குலவையிட்டு கண் 

கண்டிடக் கண்டிடக்

களிப்பினைத் தருமே.

தை திருநாளாம் தமிழர் பொங்கல்.




எட்டுப் பட்டியும் 

முட்டிட அதிரும்

துள்ளி குதிக்கும்

ஜல்லிக் கட்டிணைத்

தள்ளி தள்ளி நின்று பாராது

கொம்பிடைப் பட்டும் குருதி வழியினும்

நெஞ்சிடை அச்சம்

ஏதுமின்றியே

எம் படைத் தமிழன்

பாய்ந்து ஓடிடும்

மாட்டுப்பொங்கல் 

எனும் மகத்தான திருநாள்

எம் தமிழருக்கே

உரிய தனித் திருநாள்

முத்தான இம்மூன்று திருநாளும் தை 

மாதத்து சொத்தாம் 

எமக்கு.

உணவுக்கு வித்தான இவ்வுழவர் திருநாளை

புத்தாடை கட்டி குலவையிட்டு

குதூகலிப்போம்

பொங்கலோ

பொங்கல்

பொங்கலோ

பொங்கல்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்