ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் அரங்கில் இடம் பெற்றிருந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் முகம்மது அசாருதீன் பெயரை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கேலரியின் ஒரு பகுதிக்கு விவிஎஸ் லட்சுமண் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்தப் பெயரை நீக்கி விட்டுத்தான் அசாருதீன் பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயரைத்தான் தற்போது ஒழுங்கு நடவடிக்கைக் குழு நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் மீண்டும் விவிஎஸ் லட்சுமண் பெயரே அந்த கேலரிக்கு சூட்டப்படவுள்ளது.
ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த ஸ்டேடியத்தின் வடக்கு பகுதி கேலரிக்கு விவிஎஸ் லட்சுமண் ஸ்டாண்ட் என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2019ம் ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக முகம்மது அசாருதீன் பதவி வகித்த சமயத்தில், லட்சுமண் பெயரை நீக்கி விட்டு அசாருதீன் பெயரை சூட்ட முடிவெடுக்கப்பட்டு அதன்படி அசாருதீன் பெயர் சூட்டப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப், கடந்த பிப்ரவரி மாதம் இந்த பெயர் மாற்றம் சட்ட விரோதமானது, விதிகளுக்குப் புறம்பானது. எனவே அசாருதீன் பெயரை நீக்கி விட்டு மீண்டும் லட்சுமண் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரி ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் புகார் அளித்தது.
அந்தப் புகாரை விசாரித்த ஒழுங்கு நடவடிக்கை குழு நிர்வாகியும், முன்னாள் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுமான ஈஸ்வரய்யா, அசாருதீன் பெயர் மாற்றம் விதிகளுக்குப் புறம்பானது என்பதால் பெயரை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி அசாருதீனின் பெயர் பொறிக்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
விதி 38ன்படி, நிர்வாகக் குழு உறுப்பினர் தமக்குச் சாதகமாக முடிவெடுக்கக் கூடாது என்று லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் தனது புகாரில் சுட்டிக்காட்டியிருந்தது. ஈஸ்வரய்யா தனது தீர்ப்பில், பொதுக்குழு இந்த முடிவை அங்கீகரிக்காதது, அசாருதீன் தனது அதிகாரத்தை மீறியுள்ளார் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அசாருதீன் பெயர் நீக்கப்பட்டு மீண்டும் வடக்கு கேலரிக்கு விவிஎஸ் லட்சுமண் பெயர் சூட்டப்படவுள்ளது.
அஸார் என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் அசாருதீன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஆவார். கபில் தேவுக்குப் பிறகு வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். அதிரடியான பேட்ஸ்மேனும் கூட, சிறந்த பீல்டராகவும் திகழ்ந்தவர். 99 டெஸ்ட் போட்டிகள், 334 ஒரு நாள் போட்டிகளில் அசாருதீன் விளையாடியுள்ளார். கேப்டனாக 1990-91, 1995 ஆசியா கோப்பைகளை வென்றுள்ளார். 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை அணியை கொண்டு சென்றவர் அசாருதீன்.
தனது காலத்தில், மிகச் சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் அசாருதீன். 3 உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களுக்கு இந்தியாவின் கேப்டனாக இருந்த சாதனையாளர். அதேபோல 1985ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா வென்றபோது அதில் ஒரு வீரராக இடம் பெற்றிருந்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு ஹீரோவாக வலம் வந்த அசாருதீன் 2000மாவது ஆண்டு கிளம்பிய சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தனது பெயரை இழந்தார். பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது. இருப்பினும் 2012ம் ஆண்டு ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் அவர் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து 2019ம் ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அசாருதீன்.
கிரிக்கெட் வீரராக வலம் வந்த அசாருதீன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அரசியல்வாதியாகவும் மாறினார். 2009ம் ஆண்டு அவர் மொராதாபாத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018ம் ஆண்டு தெலங்கானா காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?
பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!
ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்
கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
தினமும் உடற்பயிற்சி.. ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அட்வைஸ்!
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்!
{{comments.comment}}