உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!

Dec 27, 2025,01:02 PM IST

சகோ. வினோத்குமார்


உலக தொற்றுநோய் தயார்நிலை நாள் வருடம்தோறும் டிசம்பர் 27ஆம் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  இந்த தினம் தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், ஐக்கிய நாடுகள் சபை மூலம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பெயரில் கோவிட்19 ( கொரோனா தொற்று) காலத்தில்  ஆரம்பிக்கப்பட்டது.


நோய்களில் தொற்று நோய்கள், தொற்றா நோய்கள், குறைபாட்டு நோய்கள், பரம்பரை நோய்கள் என பல வகைகள் உள்ளது. மக்களில் பெரும்பாலானோர்  தொற்று மற்றும் தொற்று நோய்கள் மூலமாகவே பாதிக்கப்படுகின்றனர். இதில் தொற்று நோய்கள் என்பது வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோயாகும். இந்த நோய் மனிதர்கள் இடமிருந்து மனிதர்களுக்கோ அல்லது விலங்குகள் மற்றும் பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கோ பரவக்கூடியதாகும். உதாரணமாக சளி, காய்ச்சல், கோவிட்19 போன்ற நோய்கள் ஆகும்.

 



தொற்றாநோய் என்பது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாது. ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்ற காரணங்களால் ஏற்படக்கூடியது. உதாரணமாக புற்றுநோய் , நீரிழிவு போன்ற நோய்களாகும். 


1918 ஆம் ஆண்டிலேயே கொரோனா தொற்றுப் போல இன்ஃபுளுயன்சா வைரஸ் ( ஸ்பானிஷ் காய்ச்சல் ) உலகம் முழுவதும் பரவி மூன்றில் ஒரு நபருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 500 மில்லியன் மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதில் இறப்பு விகிதம் 17 மில்லியன் முதல் 50 மில்லியன் வரை இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து உலகம் முழுவதும் பெரியம்மை நோய் 1975 ஆம் ஆண்டு கால கட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. 1980 ஆம் ஆண்டு இந்த நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.


1992 ஆம் ஆண்டு பெருநாட்டில் காலரா பெருந்தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க, மெக்சிகோ போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இதில் ஆறு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 5000 பேருக்கு மேல் உயிர் இழப்பு ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பரவல் அதிகரிக்க ஆரம்பித்து உலகத்திற்கே அச்சத்தை உருவாக்கும் அளவிற்கு பாதிப்புகளை கொடுத்தது. இதில் பத்தாயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்தனர்.


சீனாவில் 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கியது. இது யாரும் எதிர்பாக்காத வகையில் பெருகி பாதிப்படைவோரின் எண்ணிக்கையை பல மடங்கு அதிகரித்தது. உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மக்கள் வெளியே வர தடைவிதித்து. நோயின் தீவிரத்தை குறைக்க கடுமையான முயற்சிகள் மேற்கொண்டனர். இந்தியாவிலும் இதன் பாதிப்பு கடுமையாக இருந்தது. மருத்துவ ஊழியர்களும் செவிலியர்களும் தங்கள் உயிர்களை துச்சமாக நினைத்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து செய்த சேவையினால் இந்த பேரிடரில் இருந்து மக்கள் மீண்டனர். 


உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐநா சபை இந்த பேரிடர் காலத்திற்குப் பின்னர் தான் தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்தது.  2020 ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி உலக தொற்றுநோய் தயார்நிலை நாள் என அறிவித்தது. இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் தொற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதாகும்.


தொற்றா நோய்கள் வருவதை கூட நம் வாழ்க்கை முறை மாற்றம் செய்வதன் மூலமாகவும் உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடிப்பதன் மூலமாகவும் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். ஆனால் தொற்று நோய்கள் என்பது நாம் அதிக  விழிப்புணர்வுடன் செயல்படும் போது தான் பாதிப்படையாமல் இருக்க முடியும். இதற்கு மிக அடிப்படையான விஷயமாக நாம் அலுவலகம், கடைகள், கோவில்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்றுவிட்டு வரும் போது கை, கால் மற்றும் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மற்றும் முதியோர் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். காய்ச்சல், ஜலதோஷம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதன் தீவிரத்தன்மையை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக இந்த பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும். 


தொற்று நோய்களை குறித்து அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மக்களாகிய நாமும் இதை மனதில் நிறுத்தி கடைப்பிடிப்பதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமல்லாமல் நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும். இதுவும் ஒரு வகையில் சமூக சேவையில் சேர்ந்ததே.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்