- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
ஜனவரி 30, தியாகிகள் தினத்தை கொண்டாடுவதோடு வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்களையும் நினைவுகூர்ந்து பார்ப்போம்.
இராமலிங்க அடிகளார் அக்டோபர் 5, 1823 பிறந்து ஜனவரி 30,1874 உயிர் நீத்தார். வள்ளலாரின் நினைவு நாளில் அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
இந்திய நாட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சைவ சமய ஆன்மீகவாதி ஆவார். "எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே" என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு "சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்" என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரைப் பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

இவரின் தமையனார் சிதம்பரம் சபாபதி பிள்ளை, தன் தம்பி இராமலிங்க சுவாமிகள் பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்கவேண்டும் என்று விரும்பினார். ஆனால், இராமலிங்க சுவாமிகள் அவர்களுக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை .நல்வழிப்படுத்துவதற்காகச் சிதம்பரம் சபாபதி பிள்ளை தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் .
இராமலிங்க சுவாமிகள் அங்கும் சரியாகப் படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் இராமலிங்க சுவாமிகளைக் கவனிப்பதற்காகக் கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார். முருகன் சந்நதி முன்பு அமர்ந்திருந்த இராமலிங்க சுவாமிகள், “ ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் ” என்று மனமுருகப் பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை இராமலிங்க சுவாமிகள் பாடுவதைக் கண்ட காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார்.
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், சிதம்பரம் சபாபதி பிள்ளையிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்குச் சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்குக் கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு இராமலிங்க அடிகளார் தன் இறைபணியில் ஆழ்ந்து பயணிக்கத் தொடங்கி விட்டார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலார், 1867-இல் கடலூர் மாவட்டம் வடலூரில் "சத்திய தருமச்சாலையை" நிறுவினார். இங்கு மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்றுத் தருமசாலையை தொடங்கினார். இந்தத் தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. தற்போது தருமசாலைக்கான உணவுப்பொருட்களை தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது என்பது பாராட்டுக்கு உரியதாகும்.
மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.
வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்தத் தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், தருமச்சாலைக்கான பொருட்களை மக்களிடம் உபயமாகப் பெற்றே பசிப்பிணியைப் போக்கி வருகிறது.
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும். இவ்வாறு பல கொள்கைகளைக் கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாகக் 'கொல்லாமை' கொள்கை ஆன உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர். "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க" என்று கூறியவர்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே 'திருவருட்பா' என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007-ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
வள்ளலார் குழந்தைகளுக்கு கூறிய அறிவுரைகள் :

நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதே.
தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.
ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.
பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே.
பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்னாதே.
குருவை வணங்கக் கூசி நிற்காதே.
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே.
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
வள்ளலாரின் நினைவு நாளில் நாம் அனைவரும் அவர் கூறிய அறிவுரைகளை பின்பற்றி வாழ முயற்சி செய்வோம்.
தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வயலா எலுமிச்சை.. எங்கள் ஊரின் பசுமை பொக்கிஷம்!
'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு
தேசத் தந்தை தேசத்தின் விந்தை .. நற்குணம்விற்ற நாட்டுச் சந்தை.. அகிம்சை தலைவன்!
சக்தி வாய்ந்த அகிம்சை போராளி.....!
கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்...யார் அவர்கள்? பரபரக்கும் அரசியல் களம்
விண்ணமுதம்!
தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி
என்ன சொல்ல...!
{{comments.comment}}