மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு

Apr 19, 2025,04:30 PM IST

சென்னை: தன்னைக் குறை சொல்லியே ஒருவர் செயல்பட்டு வருவதாகவும், அவருக்கு மத்தியில், தன்னால் பொறுப்பு வகிக்க முடியாது என்றும் எனவே, மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக திருச்சி எம்.பி. துரை வைகோ அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன்தான் துரை வைகோ. நீண்ட காலமாக அரசியல் பக்கமே வராமல் இருந்தவர் துரை வைகோ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை கட்சியில் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கவே கட்சியின் முதன்மைச் செயலாளராக நியமித்தார் வைகோ.


இதையடுத்து கடந்த லோக்சபா தேர்தலில் திருச்சி தொகுதியை திமுக, மதிமுகவுக்கு ஒதுக்கியது. அதில் துரை வைகோ தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வைகோ ராஜ்யசபா எம்.பியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் துரை வைகோ.



தாமரை இலை தண்ணீர் போல இருந்தேன்


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு இயக்கத் தந்தை வைகோ அவர்கள் திடீரென உடல் நலம் குன்றி இதய பாதிப்புக்கு உள்ளானார். அந்த நேரத்தில் கனடா நாட்டில் எனது குழந்தைகள் படிப்புக்காக சென்று தங்கி இருந்த நான் உடனடியாக நாடு திரும்பினேன். தலைவருக்கு இதய சிகிச்சை அளிக்கப்பட்டு பேஸ் மேக்கர்,ஸ்டன்ட் வைக்கப்பட்டது. இதனால் எப்போதும் சுற்றுப் பயணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த எனது தந்தை வைகோ அவர்கள் வழக்கம் போல செயல்பட முடியாத நிலை உருவானது. 


தலைவர் என்பதை தாண்டி என் தந்தை உடல் நலத்தை பாதுகாக்க அவரை கண்ணை இமை காப்பது போல் பாதுகாக்க முடிவு எடுத்து அவருக்கு கடமையாற்றி வந்தேன். சென்னையில் நடந்த மாநாட்டிலும் தலைவருடன் இருந்து கவனித்துக் கொண்டேன். இந்த சூழ்நிலையில் தான் கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் தலைவர் உடல்நலமின்றி இருப்பதால் தங்கள் இல்லத் திருமண நிகழ்ச்சிகளில் என்னை கலந்து கொள்ள அன்போடு அழைத்தனர். அதைப்போல கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பங்களின் துக்க நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு ஆறுதல் கூறினேன். 


என் தந்தை தலைவர் வைகோ அவர்களுக்காக இத்தனை ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை தாங்கிக் கொண்டு தங்கள் கைப் பொருளை  செலவிட்டு கட்சிக்காக உழைத்து வரும் மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கட்சியை காப்பாற்றி வருகிறார்களே, அவர்களின் சுக துக்கங்களில் பங்கேற்பது என்னுடைய கடமை என்பதை உணர்ந்தேன். அப்படி செல்லுகிற தருணங்களில் அவர்களின் நிபந்தனையற்ற அன்பு என்னை நெகிழ்ச்சி அடையச் செய்தது. தலைவர் மீது வைத்துள்ள பாசத்தால் கட்சியினர் என் மீது காட்டுகிற நேசம் வளர்ந்தது. இந்த சூழ்நிலையில் தான் கொரோனா காலத்தில் மீண்டும் இயக்கத் தந்தை வைகோ அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டார். ஏழு எட்டு மாதங்களுக்கு மேலாக வெளியே போக முடியாத அளவுக்கு வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்தார். 


அதன் பிறகும் முன்பு போல பயணங்கள் மேற்கொள்ளவோ, கூட்டங்களில் வீர முழக்கம் செய்யவோ முடியாத நிலை  தலைவருக்கு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தல் வந்தது. எந்த குருவிகுளம் ஒன்றிய சேர்மனாக என் தந்தை வைகோ அவர்கள் பொறுப்பு வகித்தாரோ அதே குருவிகுளம் ஒன்றியக் குழுத் தலைவர் பொறுப்பில் மறுமலர்ச்சி திமுகவை சேர்ந்த ஒருவரை அமர வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொண்டேன். அதைக் களத்தில் நிறைவேற்றிக் காட்டி தமிழ்நாட்டில்  திமுகவை தவிர பிற கட்சிகள் ஒன்றியத் தலைவர் பதவியை ஒரு இடத்திலே கூட பிடிக்க முடியாத நிலைமையில் மதிமுக குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனைக் கைப்பற்றியது. 


கட்சிப் பொறுப்புக்கு வந்தேன்


மதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவி ஏற்றதும் இயக்கத் தந்தை வைகோ அவர்களை அந்த அலுவலகத்தில் சேர்மன் இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்த போது நானும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் அடைந்த நெகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கழகத் தொண்டர்கள் நிர்வாகிகள் என்னை கட்சியில் ஈடுபடுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்து அழைத்த வண்ணம் இருந்தனர். கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முன்வந்த தலைவர் நிர்வாக  குழு கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டார். நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 106 பேரில் 104 பேர் கழகத்தில் நான் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வாக்குகளை அளித்தனர். இப்படியாகத்தான் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக, அதன் பின்னர் பொதுக்குழுவில் முதன்மைச் செயலாளராக கட்சியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.


நான் ஒருபோதும் எந்த பொறுப்பையும் தலைமை பதவியையும் விரும்பியதில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கத்தில் நான் ஒரு முன்னணி தொண்டனாக இருந்து இயக்கத்திற்கும், தொண்டர்களுக்கும், இயக்கத் தந்தை வைகோ அவர்களுக்கும் பணியாற்ற வேண்டும், அது என் கடமை என்று மனதில் உறுதி ஏற்றுக் கொண்டேன். 


சட்டமன்றத் தேர்தல் வந்த போது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு இடங்களில் சாத்தூர் தொகுதியும் ஒன்றாகும். அத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்களும் சாத்தூர் தொகுதி மக்களும்  , அதைவிட மேலாக கூட்டணி தலைமையும்  விரும்பிய நிலையில் நான் போட்டியிடாமல் அந்த வாய்ப்பு கட்சியில் மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் டாக்டர் ரகுராமனுக்கு கிடைக்கச் செய்தேன். அதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வந்ததும் எல்லா மாநகராட்சிகளிலும் கழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவும் பேரூராட்சி நகராட்சிகளில் கழகத்தினர் உறுப்பினர்களாக  பதவிக்குச் செல்லவும் நான் என்னால் முடிந்தவரை முயற்சிகளை மேற்கொண்டேன். அதற்காக கூட்டணி தலைமையுடன் பல நேரங்களில் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றி இருக்கிறேன். 


தமிழகத்தில்  நகராட்சி தலைவராக மாங்காடு முருகன் அவர்களின் மனைவி சுமதி முருகன் பொறுப்பு ஏற்கவும், ஆவடி மாநகராட்சி துணை மேயர் பொறுப்பை சூர்யகுமார் ஏற்கவும், பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் துணைத் தலைவர்களாக நமது இயக்கத் தோழர்கள் இடம் பெற செய்யவும் என்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றோம் என்பதை கழக தோழர்கள் நன்கு  அறிவார்கள். தமிழ்நாட்டு அரசியலில் மறுமலர்ச்சி திமுக நம்பிக்கை தரக்கூடிய வகையில் வெற்றி நடை போடத் தொடங்கியதும் இயக்கத்திற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள தொடங்கினேன். இயக்கத் தோழர்களுக்கு தொண்டர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும் தலைவருக்கு துணையாகவும் செயல்பட்டு வரும் எனக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் ஊக்கமளித்தனர்.


திருச்சியில் போட்டியிட்டது ஏன்?


நாடாளுமன்றத் தேர்தல் நிதி திரட்டும் பணிகளில் நமது கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு கனிசமான நிதியையும் திரட்டித் தந்து தலைவரை மகிழ்வித்தனர். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து  நிர்வாகக் குழுவில் கருத்துப் பரிமாற்றம் நடந்த போது கிடைக்கிற ஒரு சீட்டை கட்சியில் சீனியராக இருக்கிற சிறப்பாக செயல்படுகிற  விசுவாசம் மிக்க ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தினேன். ஆனால் நூற்றுக்கு நூறு விழுக்காடு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நான்தான் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கூட்டத்தில் வலியுறுத்தினார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு புதிய சின்னமாகத் தீப்பட்டி சின்னத்தை தேர்வு செய்து 15 நாட்களில் மக்களிடையே எடுத்துச் சென்று  திருச்சி தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவோடு வியக்கத்தக்க வெற்றியை  நாம்  பெற்றோம். எனக்கு வாய்ப்பினை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் தான் நாடாளுமன்றத்தில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்துகிறேன்.


திருச்சி தொகுதியில் மக்கள் கழகத்திற்கு பேராதரவு தரும் வகையிலும் ,தொகுதி பிரச்சனைகளுக்கு வேண்டிய தீர்வு கிடைக்கும் வகையிலும் பணியாற்றுகிறேன். ஒன்றிய அமைச்சர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களுக்கு    இயக்கத்தந்தையை அழைத்துக் கொண்டு நேரடியாக போய் சந்தித்து அவற்றை நிறைவேற்றுவதற்கு முனைந்து வருகிறேன். அதைப்போல மாநில அரசுக்கும் மக்கள் கோரிக்கைகளை நேரடியாக எடுத்துச் சென்று தீர்வு காணுவதற்கு பெரு முயற்சி மேற்கொள்கிறேன். இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுமலர்ச்சி திமுகவுக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்பதால் தளராத ஊக்கத்துடன் மக்கள் பணியை செய்து வருகிறேன். இயக்க தந்தையை நேசிப்பதை போல என்னையும் கழகத் தோழர்கள் பாராட்டி வருவது எனக்கு பொறுப்பை அதிகரிப்பதாக இருக்கிறதே என்ற கவலையுடன் தான் தினம்தோறும் என் பணிகளை மிகுந்த கவனத்தோடு செய்கிறேன். தலைவர் உருவாக்கிய மறுமலர்ச்சி திமுக என்கிற இந்த திராவிட இயக்கம் தமிழ்நாட்டு அரசியலில் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் நினைப்பதை போல நானும் அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன்.


என் அப்பா இழந்ததுதான் அதிகம்


நம்முடைய இயக்கத் தந்தை அரசியலுக்கு வந்து இழந்தது தான் அதிகம். அவர் பெற்றது தமிழ்நாட்டின் உரிமைக்கு போராடி வரும்" வாழ்நாள் போராளி"என்கிற விருது மட்டும்தான். மதுவிலக்கு போராட்டத்தில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட எனது பாட்டி மாரியம்மாள் அதனாலயே உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள். தலைவர் வைகோ மீது பழிச்சொல்லை வீசியதை தாங்க முடியாமல் தான்  எங்கள் உறவினர் ஒருவர் உயிர் தியாகம் செய்தார். சிவகாசி இரவி தீக்குளித்த போது எழுந்த மன வேதனையில் இருந்து தலைவர் மீள்வதற்குள் எங்கள் குடும்பத்தில் இந்த துயரமும் நிகழ்ந்தது. அரசியல் பொது வாழ்வில் எங்கள் குடும்பம் ஒரு உயிரையே தந்திருக்கிறது. அதை கூட நாங்கள் தாங்கிக் கொண்டோம். தலைவருக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற  வேலையை  மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.


நான்  தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி  கட்சிக்கும்  தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். 


முதல் தொண்டனாக நீடிப்பேன்


ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 


திருச்சி  தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


யார் அவர்?


கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் துரை வைகோ.


துரை வைகோ குறிப்பிடும் நபர் யார், அவருக்காக ஏன் துரை வைகோ தனது பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. சமீபத்தில் துரை வைகோ பங்கேற்ற கூட்டத்தில் ஜாதி ரீதியாக பொறுப்புகள் வழங்கப்படுவதாக பெரும் பரபரப்பும் சலசலப்பும் எழுந்தது என்பது நினைவிருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

Gold rate: எந்த மாற்றமும் இல்லை.. நேற்றைய நிலையிலேயே.. இன்றைய தங்கம் விலை!

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

Box office: தமிழ்நாட்டில் குட் பேட் திரைப்படத்தின் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..?

news

பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பாதுகாக்க.. புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.. மெட்டா நிறுவனம்

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

காஷ்மீர் beautiful காஷ்மீர்.. தீவிரவாதிகள் சீரழிக்க நினைக்கும் காஷ்மீரின் பேரெழிலும் இயற்கை அழகும்!

news

ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

அதிகம் பார்க்கும் செய்திகள்