இதை நான் செய்யாட்டி.. நடிகையாகவே இருப்பதில் அர்த்தம் இல்லை.. நெகிழ்ந்து போன வாணி போஜன்

Jun 01, 2024,03:43 PM IST

சென்னை:  இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன் என்று அஞ்சாமை பட நாயகி வாணி போஜன் கூறியுள்ளார்.


பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் படம் அஞ்சாமை. இதனை திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இதனை இயக்கியுள்ளார். 




விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு  கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். வரும் ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


இதுதொடர்பாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது நாயகி வாணி போஜன் நெகிழ்ச்சியாக பேசினார். அவரது பேச்சிலிருந்து:


அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களை பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்த படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். எந்த படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்த படம் பற்றிய ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கிறோம். இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். 




எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். எனக்கு நடிக்க தெரியும் என இயக்குநரிடம் கூறினாலும் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும் என நாங்கள் ஒரு ஆடிஷன் செய்து கொள்கிறோம் என இயக்குநர் கூறினார். அப்போதே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள்.. 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன். நம் பக்கத்து வீட்டு மனிதரைப் போலவே இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தும் வெகு சில நடிகர்களில் விதார்த்தும் ஒருவர்.


நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படங்கள் வெளியாகிறது என்றால் தவிர்க்காமல் பார்த்து விடுவேன். அந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எத்தனை டாக்டர்களுக்கு இப்படி ஒரு கதையை படமாக எடுக்க வேண்டும் என தோன்றி இருக்கும் என தெரியாது. இதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என எண்ணத்தில் படமாக தயாரித்த தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசுக்கு நன்றி. 




இயக்குநர் சுப்புராமன் மனதில் என்ன வலி இருக்கிறதோ, கஷ்டம் இருக்கிறதோ, அதை எத்தனை பேர் வெளியே சொல்வார்களோ தெரியாது. ஆனால் அவர் பட்ட கஷ்டத்தை வலியை நான் உணர்ந்தேன். (இந்த இடத்தில் கண்கலங்கினார்). ஒரு படம் எடுத்து ரிலீஸ் பண்ணுவது எவ்வளவு கஷ்டம் என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. காரணம் அடுத்தடுத்த படங்களில் நடித்து போய்க்கொண்டே இருப்போம். சம்பாதிப்போம்.. சம்பளத்தை உயர்த்துவோம்.. ஆனால் மொத்த உயிரையும் கொடுத்து கனவு ,ஆசை எல்லாவற்றையும் போட்டு ஒரு படத்தை மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். அவர் இதற்காக என்னென்ன கஷ்டங்கள் பட்டிருக்கிறார், எவ்வளவு துயரங்களை அனுபவித்து இருக்கிறார் என ஒவ்வொரு முறையும் நான் கேள்விப்படும்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. 


அவருடைய படத்தில் நானும் இருக்கிறேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. எத்தனையோ முறை இதை மேடையில் நான் இன்று பேசி இருந்தாலும் இந்த தருணம் எனக்கு ரொம்பவே மனநிறைவாக இருக்கிறது. அஞ்சாமை குழுவினரை இப்படி பார்ப்பதற்கு நான் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கிறேன். இந்த நாள் எனக்கு ரொம்பவே சந்தோஷமான நாள்” என்று கூறினார்.


கதையை கேட்டு அழுதுவிட்டேன் - விதார்த்




நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம்.


படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை நேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.




நடிகராக இருப்பதற்கு நான் ஏன் பெருமைப்படுகிறேன் என்றால் மன்னரிடம் மக்கள் தங்கள் குறையை முதன்முதலாக நடனம், நாடகத்தின் மூலமாக தான் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் நடிக்க துவங்கியதே கூத்துப்பட்டறையில் தான். மக்களின் பிரச்சனைகளை நாடகங்களாக போட ஆரம்பித்தோம். சிறுவயதில் அம்மாவுடன் சென்று சாமி படங்களை பார்க்கும் போது மக்கள் சிலர் சாமி வந்து ஆடுவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இசைக்காக ஆடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாடகத் துறைக்கு வந்ததும் தான் சினிமா மக்களை ஒருங்கிணைக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது. 


என்னுடன் நடித்திருக்கும் கிருத்திக்கை அடுத்த தலைமுறை நடிகராக பார்க்கிறேன். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாணி போஜன் சிறந்த நடிகை என்றாலும் இதுவரை பார்த்திராத அவரது நடிப்பை இதில் பார்க்கலாம். ரேவதிக்கு அடுத்ததாக அவரை சொல்லும் விதமாக தனது கதாபாத்திரத்தில் அப்படி ஒரு நடிப்பை கொடுத்துள்ளார்.


படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன் படத்தொகுப்பிலேயே சிம்பொனி செய்திருக்கிறார். பாலச்சந்திரன் ஐஏஎஸ் கோர்ட் காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் நடித்ததை எனது கடமையாக நினைக்கிறேன். பணம் வாங்கிக்கொண்டு தான் நடித்தேன் என்றாலும் இந்த படத்தில் அனைத்து வேலைகளையும் இறங்கி பார்த்தேன். பல படங்களை இதற்காக நான் விட்டிருக்கிறேன். நான் நடிக்க வந்ததற்கான அர்த்தம் இந்த படம் நடித்தபோது கிடைத்தது. பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று படங்களை எந்த அளவிற்கு நீங்கள் பாராட்டுகிறீர்களோ அதே போன்ற ஒரு படத்தை இப்போது கொடுத்து இருக்கிறோம் என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!

news

Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?

news

4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!

news

மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!

news

ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!

news

இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!

news

IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!

news

சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!

அதிகம் பார்க்கும் செய்திகள்