இளவரசன் மதிமாறன்..!

Nov 12, 2025,05:00 PM IST

- எம்.கே.திருப்பதி, திருப்பூர்


வானம் மப்பும் மந்தாரமுமாய் காணப்பட்டது. கொண்டல் குழாம் கருஞ்சட்டை கட்டிக்கொண்டு, எந்தக் கணமும் கலவரம் வெடித்து, கனமழை கொட்டுவேன் என கங்கணம் கட்டி கட்டியம் கூறுவது போல் இருந்தது முகில் கூட்டங்களின் செயல்பாடுகள்... 


வானில் மழை மேகங்கள் சூழ்ந்ததைப் போல் நாட்டில் போர் சூழல் புகைந்து கொண்டிருந்தது. பிரம்மதேசம் ஒரு சிற்றரசு. மாமல்லன் சிற்றரசின் சிறந்த அரசு. சண்டைகளும் சச்சரவுகளும் சதா சந்தித்துக் கொள்ளும் தேசம்.


முடிந்த அளவு மூர்க்கம் கொண்டு தாய் மண்ணைக் காக்க முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் வீரம்.


பெரிய படைபலம் இல்லை.கோட்டை கொத்தளங்கள் இல்லை. அகழி, அரண் என்று சொல்லிக் கொள்ளும் சூழலும் கிடையாது. இருப்பினும் வளம் குன்றா நாடு. அதன் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் விளைச்சல் செழிக்கும், விவசாயம் கொழிக்கும்.


மண்வளம்,மலைவளம், நீர்வளம் நிறைய உண்டு.பலமே பலவீனமாகவும் போனது. மாற்றார் பிரம்மதேசத்தை கண்கொத்தி அரவாய் கண்வைக்க காரணி ஆகிப்போனது. 


அண்மையில் தான் கிழக்கிலிருந்து ஒரு அக்கப்போர் ஆரம்பித்து, வெற்றி என்றாலும் அதில் வாங்கிய அடி இன்னும் ஆறிப்போய் இருக்கவில்லை. பொறுக்குதட்டிய புண்ணாய் கிடைக்கிறது.அந்த குறும்போர் வலது கையை ஊனமாக்கியது. அதாவது ஏகப்பட்ட படை, படைக்கலம், பொருட்களம் என இழந்தது ஏராளம்.நாடு பிழைத்தது ஒரு நல்லூழ் என ஓரலாம்.




அண்மை தேசம் ரத்தினபுரி ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். பிரம்மதேசம் ரத்தினபுரிக்கு கண்ணில் விழுந்த தூசி. நாளும் பொழுதும் உறுத்திக் கொண்டே இருக்கும். அச்சுறுத்தல் இருந்தாலும், இதுவரை எந்த முட்டலும் மோதலும் ஏற்படவிட்டதில்லை...


ரத்தினபுரி ராஜா ராஜேந்திர மல்லன் ரவுத்திரம் பழகியவன். வார்த்தையில் பேசாது வாளால் பேசுபவன். ராஜேந்திர மல்லன் பிரம்ம தேசத்தை நோக்கி படை நகர்த்த இருப்பதாக உளவுத்துறை தகவல் ஒன்று உறுதிப்படுத்தி விட்டு சென்றிருந்தது.


பிரம்மதேசம் பரபரப்பை அப்பிக்கொண்டது. மந்திர ஆலோசனை மண்டபம் அவசரம் அவசரமாக கூடி, அடுத்தடுத்து வரும் நிலை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தது.


அந்த அழகான ஆலோசனை மண்டபம் அன்று அமைதி காத்து கிடந்தது. காற்று கூட காவலாளியின் அனுமதி பெற்று உள்ளே போவதும் வருவதுமாய் பூச்சாண்டி காட்டியது.


மன்னர்,மந்திரிமார்கள், தளபதியார்களை தாங்கி இருந்த அந்த மண்டபம்... மௌனம் கலைத்தது.


"மன்னா மலையோடு மோதுவது நிச்சயம் என்ற நிலையில் மலைப்பு எதற்கு? இயன்றவரை தற்காப்பு தாக்குதல் நடத்துவோம். தலை போதும் நிலை வந்தால் தற்கொலை தாக்குதல் நடத்துவோம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது அரசே...பிரம்மதேச படைக்கன்றுகள் ஒவ்வொன்றும் கல் குன்றுகள்.யாருக்கும் இழைத்தவர்கள் அல்லவே.விசனம் வேண்டாம் வேந்தே! நமக்கு கொற்றவையின் நற்றுணை நாளும் உண்டு!"


தரைப்படை தளபதி குணசீலன்,மன்னர் அமைதி கலைத்து ஆறுதல் ஊட்டினார்.


"இத்தனை காலம் அவன் நம்மை விட்டு வைத்ததே வியப்பிற்குரிய செயலாகும். மெலியனை வலியன் வெல்வதும்... வல்லானை எளியன் வீழ்த்துவதும் வரலாறு தோறும் வழக்கமாக நாம் காணும் ஒன்றுதான். நடப்பது நடக்கட்டும்... சேனைகளை ஆயத்தப்படுத்துங்கள்!"


"ஊது உலைகளில் உமி போட்டு,களம் காணும் வாளை காய்ச்சி எடுங்கள். தேர்ப் படையும் போர்ப்படையும் தீயை கக்கட்டும்!"


"இளவட்டங்கள், தேச இஷ்டங்கள் அனைவரும் போர் தம்பட்டம் கொட்டட்டும். தனிநபர் தானிய கிடங்குகள் பொதுநலம் பேசட்டும்.மக்கள் எல்லோரும் மறலியாகட்டும்.தளபதி நாம் தயார் என்ற தகவலை ரத்தினபுரி தலைவனுக்கு ரத்தின சுருக்கமாக தெரியப்படுத்து!"


"வென்றால் பிரம்ம தேசம். ஆகாவிடில் சொர்க்கத்தின் வாசம். சத்துருக்களின் நெஞ்சை கூறு போடுவோம். நடக்காவில் கூற்றுக்கு இரையாகுவோம்!"


மன்னரின் அக்கறை பேச்சு மற்றவருக்கு ஊக்கத்தை தந்தது. அரசரின் கூற்றை ஆமோதித்து அனைவரும் அவரவர் மொழிகளில் வீர உரையாற்றியதும்... மீண்டும் ஆலோசனை மண்டபம் அமைதி பூசிக் கொண்டது. பெரிய சாரளங்களின் திரைச்சீலைகள் வீசிய குளிர்காற்றில் வெட வெடப்பது போல் படபடத்தன. வெளியில் கருமேகக் கூட்டத்தின் கருமை மண்டபத்தை மேலும் இருட்டாக்கியது


மாமல்லன் வெளிப்படையாக வீர உரை ஆற்றினாலும் அவர் உள்ளம் முழுதும் அந்தக் கொண்டல் கூட்டம் மாதிரி இருண்டு தான் கிடந்தது. விண்ணின் இருள் மறையக்கூடும். மன்னன் இருள் மறையுமா? 


நிசப்தம் நிலை கொண்ட மண்டபத்தின் வெளியே குதிரைகளின் குளம்படி ஒலியைப் போல்,டக் டக் என்ற காலடி ஓசை காற்றைக் கிழித்துக்கொண்டு காதுகளை குத்தியது. திரும்பி நோக்க மன்னர் மைந்தன் மதிமாறன் நின்று கொண்டிருந்தான்.


மதிமாறனுக்கு தேகம் தேக்கில் கிடந்தது. மதி என்னும் அறிவும் மாறன் என்னும் மன்மதனும்,இந்த இரண்டும் கலந்த இரட்டைப் பிரதி அவன். மதிநுட்பம் மலிந்து கிடக்கும் மனிதன் அவன்.


"மைந்தா தக்க தருணத்தில் தலை காட்டுகிறாய்... நிலைமையை நீ ஊகித்திருப்பாய் என கருதுகிறேன்.நல்லவோ அல்லவோ வரும் நாட்களில் வளரும் சமரில் நீ சாமர்த்தியம் காட்ட வேண்டும். பேச்சை வளர்ப்பதில் பிரயோஜனம் இல்லை. செயலில் இறங்குங்கள் சீயங்களே.மகனே யுத்தத்திற்கு மனம் கொள். சித்தத்தில் திடம் கொள்!"


மாமல்லன் சிந்தையில் வெந்தாலும் கருத்தில் கடுமை காட்ட நினைத்தார். வார்த்தைகள் வலிய வந்து விழுந்தாலும், வதன வதக்கம் மனவாட்டத்தை வட்டம் போட்டு குறித்தது.


நிழலை பார்த்தே நிஜத்தை அறியும் மதிமாறன்,தந்தையின் தவிப்பை உணர தவறுவானா?


"தந்தையே தவிப்பு எதற்கு?ராஜாக்களின் அகராதியில் பல ரகசியங்கள் உண்டு . கோல் பிடிக்க,வாள் பிடிப்பது அல்லது கால் பிடிப்பது இரட்டை வாய்ப்புகள் உள்ளது.சில வேளைகளில் நமக்கான தேவைகள் நம் தேடல்களில் கிடைக்கும்.சில நேரங்களில் நம் தேடல்களில் நமக்கான தேவைகள் கிடைக்கும்."


"கை நழுவி போகும் அதிர்ஷ்டம் சில பொழுதுகளில் நம் வாசல் கதவை வழிய வந்து தட்டும் "


"மதிமாறா உன் மதி கெட்டதா? பேசும் பேச்சில் தரம் குறைந்து விட்டதே!பிதற்றலை நிறுத்து. வெட்டிப் பேச்சை பேசுகிறாய். வெந்த புண்ணில் வெந்நீரை வீசுகிறாய்.பூடகம் ஏதும் இருப்பின் புரியும் படி  புகல்!"


"மன்னரே இது பூடகமும் இல்லை நாடகமும் இல்லை. இதுவரை நம் சிற்றரசு மீது பாயாத ரத்தினபுரி இப்போது ஏன் பாய்கிறது? அவர்களோடு மோத நம் சைனியம் என்ன சமபலம் கொண்டதா? போரிடும் படைகள் இணைப்பலம் பெற்றிருந்தால், அதன் வெற்றி தோல்வியின் இடைவெளி ஒரு மெல்லிய கோடு.இங்கு தலைகீழ்  பலம் என்றால் நினைத்துப் பாருங்கள் பேரழிவின் கேடு!"


மன்னர் மாமல்லன் முகம் கடுகடுத்து மைந்தனை நோக்கி சிங்கமாய் சீறினார்.


"நீ என் பிள்ளை அல்ல. பிள்ளை பூச்சி. உன்னை ஆண்களின் அடையாளம் என எண்ணியிருந்தேன். அதுவல்ல நிஜம்.நீ ஒரு பெட்டை.கடல் என்று கனா கண்டேன். நீ கலங்கிய குட்டை. எடக்கு முடக்கான வாதம் வளர்க்கிறாய். நீ விரும்பினால் மாற்று மன்னர்களின் கால்கழுவி, அதன் கசடை மடக்கு மடக்கு என்று குடி.நான் நபும் சகன் அல்ல, நரசிம்மமூர்த்தி..!"


"அத்தனே அவசரம் வேண்டாம். ஐந்து இடங்களில் பொய்கள் புகலலாம் என வேதம் கூறுகிறது. கூற்றை மடை மாற்றி வேறு செயலில் காட்டலாம் என்பது என் கருத்து. அரச நீதியில் சில பல சாணக்கியத்தனம் உண்டு..!"




"மகாராஜா திருதராஷ்டிரன், பண்பாளன் பாண்டு, விதுர நீதி வரைந்த விதுரன் இவர்கள் பிறப்பின் ரகசியம் அறிந்தவர் தாங்கள் அன்றோ?மேலும் தர்மராஜன் கூட ஒரு பொய் கூறித்தான் அளப்பெரும் ஆற்றலன் ஆசிரியரை அமரராக்கினார்..!"


"விரிவாக விளக்குகிறேன் தந்தையே... நான் போருக்கு அஞ்சவில்லை. சமரென்று வந்து விட்டால் தலை எடுப்போம்.அல்லது தலை கொடுப்போம். வீரனின் சாவு சீக்கில் வராது, எதிரியின் தாக்கில் வந்தால்.. அதுதான் தகுதியான மரணம்."


"ரத்தினபுரி ராஜாவின் இனிய இளவரசன் மகேந்திர மன்னனுக்கு திருமண அகவை எட்டிவிட்டது. தங்கள் அன்பு மகள் ஆதிரையின் மேல் அவர்களுக்கு மாளாத பிரியம். அதாவது என் உயிர் தமக்கையின் பால்...!"


மதிமாறன் விவரித்துக் கொண்டிருக்கும் போதே மன்னர் அவசரமாய் குறிக்கிட்டார்!


"உன் கூற்று உண்மை என்றால் முறைப்படி மணம் பேசலாமே!நாம் என்ன மறுக்கவா போகிறோம்? "


"தந்தையே இந்த இடத்தில் தான் சிக்கல் ஆரம்பிக்கிறது... ரத்தினபுரி என்பது ஒரு மாபெரும் சாம்ராஜ்யம். அவர்கள் நம்மிடம் கையேந்த விரும்ப மாட்டார்கள். நெருப்பை ஊதி அணைப்பது போல் நம்மை அணைத்துவிட்டு, அன்பு தங்கையை அள்ளிக் கொண்டு போய் மணத்தை மாளிகையில் நடத்த விரும்புகிறார்கள். ஒருபுறம் போரில் வென்று பிரம்ம தேசத்தை பிடிப்பது, மறுபுறம் மங்கையின் மணத்தை முடிப்பது!"


"இது அனைத்தும் நீ எப்படி அறிவாய் மகனே? "


"அத்தனே அறிந்து கொண்டேன் ஒற்றர்கள் மூலம். ஒற்றர்கள் தானே நாட்டுக்கு மூலம்? "


"அவர்கள் நடத்த நினைப்பது ராக்கத மணம்.அதாவது பெண்ணை தூக்கிச் சென்று மணம் புரிவது. அல்லது கடத்திச் சென்று மணம் புரிவது. அதையே அவர்களின் கௌரவமாக கருதுகிறார்கள்."


"விசனம் வேண்டாம் தந்தையே.ஒரு வாசல் மூடினால் இறைவன் மறுவாசல் திறப்பான். அந்த வாசலையும் அவர்களே திறந்து வைத்திருக்கிறார்கள்!"


"என்ன கூறுகிறாய் மகனே?அந்தப் பக்கம் போர் முஸ்தீப்புகளில் இறங்கி இருக்கும் அவர்களிடம் இப்போது உன் கதையெல்லாம் எந்த அளவு எடுபடும்? "


மதிமாறன் நக்கலாய் ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு செப்பினான்.


"நாம் இங்கு இப்போது கதைத்துக் கொண்டிருப்பதை கூட அவர்கள் அங்கு கேட்டுக் கொண்டு இருப்பார்கள் அப்பா. அவர்களின் கணக்கு ஒன்றுதான்...போர் பிரகடனத்தை கசிய விட்டால் பிரம்மதேசம் பம்மிவிடும் என்பது.. மெய்தானே  மன்னரே? "


"எதிரியின் எதிரியை நண்பனாக்குவது மட்டும் தந்திரம் அல்ல தந்தையே... எதிரியை உறவாக்குவதும் ராஜா தந்திரம் தான்!துரியன் சல்லியனை வளைத்துப் போடவில்லையா?"


"அங்கு திண் பண்டம். இங்கு பெண் பண்டம்! வேறுபாடு அவ்வளவு!"


" எவ்வளவு பெரிய ராஜாங்கங்களும் சாம, பேத,தான, தண்டம் இவை நான்கையும் பிரயோகித்து தான் வெற்றியை பெறுகிறார்கள். அந்த முறையில் நோக்கினால்,இதில் நமக்கும் வெற்றி ரத்தினபுரிக்கும் வெற்றி!"


"ஆகட்டும் புதல்வனே! ரத்தினபுரி உன் கணக்குக்கு எவ்வளவு உகந்ததாகும் என்று விளங்கவில்லை. உன் திடச்சொல் என்னை திகைக்க செய்கிறது "


"புழுக்கம் வேண்டாம் மன்னரே.நாம் அவர்களிடம் சென்று பெண் கொடுப்பதாய் நின்றாலே போதும்.. அதை அவர்கள் போரின் வெற்றியாய் தான் பார்ப்பார்கள். அதுதான் அவர்கள் பக்கத்தின் அளவீடு!"


"புதிதாய் ஒன்றையும் கூறுகிறேன் வேந்தே... நான் நவின்ற படி அனைத்தும் நடந்தேறினால், ராஜேந்திர மன்னரின் அன்பு மகள் அன்னக்கொடி என் அன்புக்கொடி ஆகுமாம்."


"இப்படி ஒரு நம்பத் தகுந்த உளவு தகவல் ஒன்று உலவுகிறது மன்னா!"


"மைந்தா உன்னை பாலகன் என்று நினைத்திருந்தேன். நீ என் வயிற்றில் பால் வார்த்து விட்டாய்..!"


"மகிழட்டும் உங்கள் மனம். நான் தக்கணமே ரத்தினபுரி கிளம்புகிறேன். மனச்சடங்கை நான் கவனித்துக் கொள்கிறேன். நாட்டின் தினச் சடங்கை தாங்கள் தலையில் தாங்கிக் கொள்ளுங்கள்..!"


இயம்பி விட்டு புரவியில் ஏறியவனை நோக்கி மன்னர் செப்பினார்..


" நம்  மங்கை மன்றல் முடிக்கும் அன்றே,என் அன்பு மகன் மதிமாறனின் மணிமுடிச் சடங்கும் நடக்கும்..!".


மதிமாறன் புன்முறுவலோடு குதிரை கடிவாளத்தைச் சுண்ட,அது கனைத்துக் கொண்டு கிளம்பியது. குதிரையின் குளம்புச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் காற்றில் கரைந்து கொண்டிருக்க...!


கருவானம் தூறல் ஆரம்பித்திருந்தது...!


( இந்தக் கதை எந்த ஒரு வரலாற்று நிகழ்வுடனும் சம்பந்தப்பட்டது அல்ல. முழுதும் கற்பனை புனைவு அவ்வளவே )


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

டெல்லி கார் குண்டு வெடிப்பு... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!

news

தமிழக மீனவர்கள் கைது... மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

உயிர் காக்கும் மருத்துவதுறையை சாகடிப்பது தான் திமுகவின் சாதனை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. விஜய் ரசிகர்கள் + தொண்டர்கள் விரும்புவது இதைத்தானா?

news

அறிவுத் திருவிழா இல்லாமல்.. அவதூறுத் திருவிழா: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!

news

கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

news

தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?

news

2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்