- சகோ. வினோத்குமார்
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும் என்று அவரது மகன் காசிம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் 1996 ஆம் ஆண்டு தெஹ்ரிக்-இ-இன்சாப் ( பி டி ஐ ) கட்சியை தொடங்கினார். 2012 வரை அந்த கட்சியின் புகழ் மற்றும் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் வெளிவரவில்லை. இருந்தாலும் படிப்படியாக வளர்ந்து வந்தது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் இம்ரான் கானின் கட்சி தேசிய அளவில் அதிக வாக்குகள் பெற்ற இரண்டாவது கட்சியாகவும் அதே சமயத்தில் அதிக இடங்களை வென்ற மூன்றாவது கட்சியாகவும் மலர்ந்திருந்தது.
2013ஆம் ஆண்டு தேர்தலுக்கு பின் இம்ரான் கானின் பி டி ஐ கட்சி பாகிஸ்தான் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேசிய சட்ட சபை தேர்தலில் 31% வாக்குகளைப் பெற்றது. இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இம்ரான் கான் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 வது பிரதமராக பதவியேற்றார்.
இம்ரான் கான் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கோவிட் பெருந்தொற்று காலக்கட்டங்களில் மிக சாமர்த்தியமாக செயல்பட்டார். 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் தோல்வி அடைந்து பதவியில் இருந்து விலகினார்.
பிரதமராக பதவியில் இருந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு பயணங்களின் போது 140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இம்ரான் கான் மறுத்து வந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சிறைத்தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து மாநில ரகசியங்களை கசிய விட்டது, இத்தாத் திருமண வழக்கு போன்ற வழக்குகளிலும் அவருக்கு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கானை சமீப காலங்களில் அவரது குடும்பத்தினரால் பார்க்க முடியவில்லை. அவரைப் பார்க்க அவரது சகோதரிகள் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறை வாசலில் அவரது சகோதரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரம் இம்ரான் கான் சிறையில் இறந்து விட்டதாகவும், அவரை அடித்துக் கொன்று விட்டதாகவும் செய்திகள் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கட்சித் தொண்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் அரசு தரப்பில் இருந்து இந்த செய்தி தவறானது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் இம்ரான் கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் டிசம்பர் 2 ஆம் தேதி இம்ரான் கானை அவரது குடும்பத்தினர் சந்திக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும் விவகாரம் இன்னும் முடியவில்லை. தனது தந்தை உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று அவரது மகன் காசிம் கான் கூறியுள்ளது புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அப்படி அவர் உயிருடன் இருந்தால் அதற்கான ஆதாரத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
எங்களது குடும்பத்தினர் யாரையும் சிறைக்குள் போய் இம்ரான் கானை பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள்.. அவர் உயிருடன் இருப்பது உண்மையானால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும்.. அதற்கும் மறுக்கப்படுகிறது. அப்படியானால் என்ன அர்த்தம்.. உலக நாடுகள், இந்த மனிதாபிமானமற்ற, ஈவு இரக்கமற்ற அரசுக்கு நெருக்குதல் தர முன்வர வேண்டும் என்று காசிம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
காசிம் கான், இம்ரான் கானின் இளைய மகன் ஆவார். இவர் பாகிஸ்தானுக்கு வெளியில்தான் பெரும்பாலும் வசித்து வந்துள்ளார். அரசியலிலும் இவர் தீவிரமாக ஆர்வம் காட்டியதில்லை. தனது தந்தையின் நிலை குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவையும் போட்டுள்ளார்.
(சகோ. வினோத் குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' கட்டாயம்.. அரசு உத்தரவு.. மாணவர்கள் ஹேப்பி!
இம்ரான் கான் உயிரோடு இருப்பதற்கு என்ன ஆதாரம்?.. கேட்கிறார் மகன் காசிம் கான்
ஓசூர் விமான நிலையம்.. TIDCOவின் புதிய டெண்டர்.. தமிழக - கர்நாடக எல்லையில் ஒரு கேம் சேஞ்சர்!
மியாமி ஜி 20 மாநாடு.. தென் ஆப்பிரிக்க அழைக்கப்படாது.. அமெரிக்கா முடிவு!
ஜனவரி + தேர்தல் வரப் போகுது.. பொங்கல் பரிசு என்ன கிடைக்கும்.?.. எதிர்பார்ப்பில் மக்கள்!
ரூ. 95,000த்திற்கு உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.560 உயர்வு
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார்.. திருவண்ணாமலை கோவில் சிறப்புகள்!
அந்த மழைத் துளிகளின் சத்தம் முழுவதும்...!
{{comments.comment}}