டெல்லி: ஏமன் நாட்டவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு அடுத்த வாரம், ஜூலை 16 ஆம் தேதி, மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை கடந்த ஆண்டு ஏமன் அதிபர் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தகவலால் நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் பெரும் கவலையும் வேதனையும் அடைந்துள்ளனர். மத்திய அரசும் இதுகுறித்துக் கவலை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடனும் அவரது குடும்ப உறுப்பினர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிமிஷா பிரியா தனது குடும்பச் சூழல் காரணமாக, 2008 இல் ஏமன் நாட்டில் வேலை பார்க்கச் சென்றார். பல மருத்துவமனைகளில் பணிபுரிந்த பிறகு, அவர் சொந்தமாக ஒரு கிளினிக்கைத் தொடங்கினார். ஏமனில் வணிகம் தொடங்க உள்ளூரைச் சேர்ந்த ஒருவருடன் பங்குதாரராக சேருவது கட்டாயம் என்பதால், 2014 இல் தலால் அப்துல் மஹ்தி என்பவருடன் இணைந்து தொடங்கினார்.
ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மஹ்திக்கு எதிராக புகார் கொடுத்தார் நிமிஷா. இதைத் தொடர்ந்து மஹ்தி கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் அவர் விடுதலையாகி விட்டார். அதன் பின்னர் நிமிஷாவை அவர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் அவர் பறித்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்து பாஸ்போர்ட்டைப் பெறுவதற்காக அவரை நைச்சியமாக தனது இடத்திற்கு வரவழைத்து அவருக்கு மயக்க மருந்து செலுத்தியுள்ளார் நிமிஷா. ஆனால் அவர் கொடுத்த மருந்தின் அளவு கூடியதால் மஹ்தி மரணமடைந்து விட்டார்.
இதையடுத்து நாட்டை விட்டு தப்ப முயன்றபோது நிமிஷா கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 2018 இல் அவருக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் அவரை ஏமன் நாட்டவரைக் கொன்றதாகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்த முடிவு 2023 நவம்பரில் நாட்டின் உச்ச நீதிமன்ற கவுன்சிலால் உறுதி செய்யப்பட்டது.
கொலை, போதைப்பொருள் கடத்தல், விபச்சாரம், வயது வந்தோருக்கிடையேயான ஒருமித்த ஒரே பாலின பாலியல் செயல்பாடு, இஸ்லாத்திலிருந்து விலகுதல் அல்லது அதை மறுத்தல், மற்றும் விபச்சாரத்திற்கு உதவுதல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
நிமிஷாவைக் காப்பாற்ற இரத்தப் பணம் எனப்படும் Blood Money என்ற நிதி அளிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. நிமிஷாவின் தாயார் பிரியா, கொச்சியில் உள்ள தனது வீட்டைக் கூட இதற்காக விற்று பணம் திரட்டினார். கேரளாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்கிய மன்றத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன், கொச்சியில் வீட்டு வேலை செய்யும் பிரியாவின் தாயார், இந்த வழக்கிற்காக தனது வீட்டை விற்றதாகத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் இரத்தப் பணம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது செப்டம்பர் 2024 இல் திடீரென நின்றுபோனது. இந்திய தூதரகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்துல்லா அமீர், பேச்சுவார்த்தைக்கு முன் கட்டணமாக 20,000 டாலர் அதாவது சுமார் ரூ 16.6 லட்சம் கேட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூலையில் அமீருக்கு $19,871 வழங்கியது. ஆனால் அவர் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முன், இரண்டு தவணைகளில் மொத்தம் $40,000 கட்டணம் கோரினார். "சேவ் நிமிஷா பிரியா சர்வதேச நடவடிக்கை கவுன்சில்" கூட்டத்தின் மூலம் அமீரின் முதல் தவணை கட்டணத்தை திரட்டுவதில் வெற்றி பெற்றது. இருப்பினும், பின்னர் நிதியானது எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து நன்கொடையாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதில் சவால்களை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அவருக்குத் தண்டனை நிறைவேற்றப்படப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து நிமிஷாவின் தாயார் பிரியா கூறுகையில், எனது மகளைக் காப்பாற்ற இதுவரை வழங்கப்பட்ட அனைத்து ஆதரவிற்கும் இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அதற்காக அமைக்கப்பட்ட குழுவிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள் - தயவுசெய்து அவளது உயிரைக் காப்பாற்ற எங்களுக்கு உதவுங்கள். நேரம் விரைந்து கொண்டிருக்கிறது என்று அவர் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
திருப்பூரில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம்!
Are you Ok?.. கேட்டதுமே அழுது விட்ட ஜனனி பொற்கொடி.. ஒரு நெகிழ்ச்சிக் கதை... say bye to STRESS!
குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கொத்தவரங்காய் துவையல்.. ஈஸியா பண்ணலாம்.. சூப்பர் டேஸ்ட்டியா இருக்கும்!
அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
{{comments.comment}}