- எம்.கே. திருப்பதி
இரும்புப் பெண் இந்திரா காந்தி, அரசு குடும்பத்தில் அவதரித்ததால் என்னவோ,அரச மரபின் அடிநாதமான அதிரடிகளுக்கும் பெயர் போனவர். அவரின் காதல் மணம் கூட அவ்வகை சார்ந்தது தான்.
பெரோஸ் கான் ஒரு இந்திய, இரானிய பார்சி. அதாவது கொடை வள்ளல் ரத்தன் டாட்டா குடும்பம் மாதிரி. அவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியும் என பன்முகத்தவர்.
நாட்டுக்கு ராஜா ஆனாலும் வீட்டுக்கு கணவன் தானே? என்பது போல், நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு மனைவி தானே? இந்தக் கணிதம் தான் அந்த அரச குடும்பத்தில் பிசகி, கசப்பை உண்டாக்கி, நீண்ட பிரிவில் இருவரையும் தள்ளியது. அம்மையாரின் தனி வாழ்வு அவ்வளவு ருசிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இல்லறத்தின் சாட்சியாய் இரண்டு குழந்தைகள். திருமண பந்தத்தின் பிடிமானம் பரிணாமம் எல்லாம் இந்த எல்லைக்கோட்டை தாண்டாமல் பார்த்துக் கொண்டது காலம்.
தந்தை நேரு இறப்பிற்குப் பின், அரியணை அமர்ந்த அம்மையார், காங்கிரஸ் காரர்களால் கொண்டாடப்பட்டவர்களில் முக்கியமானவர். அவ்வளவு ஏன் இந்திய மக்கள் அனைவரும் அவரை, தன் அடுத்த வீட்டு அம்மணி என்றே அறிந்தனர்.

அக்காலகட்டம், நீண்ட வறுமையின் வலியால் நிரம்பிக் கிடந்தது. போதாமைக்கு வழமை போல், சீனாவும் பாகிஸ்தானும் இடர் இழைத்துக் கொண்டிருந்த இக்கட்டான நிலைமைகள். அந்நிய சக்திகளை ஒருவாறு சமாளித்துக் கொள்ளலாம். அவர்களாலும் அதிகம் வாலாட்ட முடியாது. கிள்ளிப் பார்ப்பார்கள். சர்வதேச சமூகம் ஒன்று உண்டு அல்லவா?
ஆனால் உள்நாட்டு தீவிரவாதம் என்பது அப்படி அல்ல. அது புரையோடிப்போன புண் போன்றது. வளரவிட்டால் உடல் முழுதும் வியாபித்து, ஒரு நாள் உயிரைக் குடிக்கும். அதன் ஆக்டோபஸ் கரங்கள் தேசத்தை கபளிகரம் செய்து விடும். சீக்கிய தீவிரவாதம் அந்த வரிசையில் ஒன்று.
பிளவு பட்ட பாரதத்தை மீண்டும் பங்கு போடத் துடித்தனர் பஞ்சாபி பயங்கரவாதிகள். வளர்ந்த பிள்ளையை அடிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஊதாரி பிள்ளையை உதைக்கலாம் அல்லவா? காலிஸ்தான் என்ற தனிநாடு கோரிய பிந்தரன் வாலே பெரும் தலைவலி ஆகிப் போனான். அவனுக்கு பாகிஸ்தான் உட்பட சில சர்வதேச ஆதரவும் உண்டு. இந்தியாவை மீண்டும் மீண்டும் பிளப்பதில் சர்வதேச சமூகத்திற்கு... ஒரு தனி அஜெண்டாவே உண்டு, இன்று வரை.
இந்த இயக்கத்தின் விட்ட குறை தொட்டகுறை இப்பொழுதும் கனடாவில் உயிரோடு உலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் கனடாவில் இரண்டு முக்கிய காலிஸ்தான் வேட்டையாடப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என கனடாவின் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ரூடோ அங்கலாய்த்து, அழுது புலம்பியது தனிக்கதை.
அங்கு அவரது ஆட்சிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவு தேவை. எனவே முடிந்த அளவு முட்டுக்கொடுத்து பார்த்தார். இன்றைய பாரதத்திடம் அது எடுபடவில்லை. உறவுகள்தான் சீர்கெட்டது. தங்கத் தாரகையின் தங்க கோயில் தாக்குதல் வெற்றிகரமாக முடித்து வைக்கப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதமும் துடைத்து எறியப்பட்டது.
Operation blue star என பெயரிடப்பட்டு புறந்தள்ளப்பட்ட அந்த குள்ளநரிகள், சூத்திரதாரியை காத்திருந்து கருவறுத்ததுதான் ஒரு இந்திய சோகம். இன்னும் ஆழமான வார்த்தையில் மொழியப் போனால் இந்திய துணை கண்டத்தின் துயரம்.
நரிகளை புறங்கண்ட சிங்கத்தால், அவைகளின் துரோகங்களை இனங்கான முடியாமல் ஏமாந்தது இந்திரா அல்ல... இந்தியா!
அணு வெடிப்பு சோதனை நடத்தி,பாரத தேவிக்கு ஒரு உயர் பாதுகாப்பு வளையத்தை, உருவாக்கிய அந்த அக்கினி, தீவிரவாதத்தின் இரையாகி போனது.
பாரதம் பந்தாடப்பட்டது. தேடித் தேடி சீக்கியர்கள் அடையாளம் கண்டு, உடல் பொருள் உடமை என உருக்குழைக்கப்பட்டனர். உக்கிரத்தின் உச்சமாக டெல்லி வெறியாட்டம் கண்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ராஜீவ், "ஒரு பெரிய ஆலமரம் மண்ணில் சாயும் போது, அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்" என்றார்! இது பெரும் சர்சையாவும் பேசு பொருளாகவும் மாறியது. தேசப்பிதா காந்தியின் மரணம் கூட,அத்தனை கலவரத்தின் காட்சிகளை கண்டதில்லை.
அம்மையாரின் வாழ்க்கையிலும் உலக வரலாற்றிலும் மறக்க முடியாத ஒரு செயல் உண்டு. அதுதான் வங்கப் பிரிவினை. வங்க மொழி, உருது மொழி சிக்கலில் வங்க புரட்சி பற்றிய போது, அதை அணைக்க பாகிஸ்தான் படைகள் வங்கத்தை சூறையாடத் தொடங்கின.
அடுத்த வீட்டு பங்காளி பகைச்சலை வாய் மௌனித்து விரல் சூப்பி வேடிக்கை பார்க்க, இந்திரா ஒன்றும் வெறும் பெண்ணல்ல. பெரும் சக்தி. வெறும் 13 நாட்கள் நடந்த அந்தப் போர், டிசம்பர் 16, 1971ல், சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் துருப்புகளோடு பாரதத்திடம் சரண் அடைந்தது.
அப்போதைய அமெரிக்க அதிபர் வழக்கமாய் பாகிஸ்தானுக்கு பாசம் காட்டினார். இந்த அன்பு அன்றிலிருந்து இன்று வரை காய்ச்சிய பாலாய் அப்படியே கலர் மாறாமல் உள்ளது. தப்பி தவறி கூட எந்த இடத்திலும் திரிந்து விடவில்லை. நல்லதொரு நாகரிகமான வரலாற்று உறவு (!).
பாரத தேசம் இன்று போல் அன்று இல்லை என்றாலும் ஆண்டது சிங்கமில்லையா? அமெரிக்க ஏகாதிபத்திய கழுகுகளின் கத்தல்களுக்கு காது கொடுக்கவில்லை. நண்பன் சோவியத் யூனியனின் கூட்டமைப்பு அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு எதிர்க்கப்பல் அனுப்ப... மூக்கு உடைபட்டு போனார் அமெரிக்க அதிபர். அமெரிக்க கப்பல் வந்த வழியே, வட அட்லாண்டிக் கடலை நோக்கி மீன் பிடிக்கப் போய்விட்டது. அந்த மீன்கள் நிச்சயம் அமெரிக்க அதிபருக்கு சுவை கொடுக்காது.
பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்துக் கொடுத்தார் அன்னை இந்திரா. வினோதம் என்னவென்றால், பாரதத்திலிருந்து பாகிஸ்தானை கொடுத்ததும் பாரதம் தான்.. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷை பிரித்துக் கொடுத்ததும் பாரதம்தான்!
வங்கத்தை பிரித்துக் கொடுத்த சிங்கத்தை நோக்கி... பாரத முன்னாள் பிரதமர்,பண்பாளர், கவிஞர்,மனிதநேயர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், " சக்தி தேவியே வருக வருக" என வாய்மலர வாழ்த்தினார். இந்திய உயர் ராணுவ அதிகாரிகள் சிலர், சுளையாக ஒரு லட்சம் துருப்புகள் சிக்கியதை பயன்படுத்தி, ஆக்கிரமிப்பு காஷ்மீரை கை கொள்ளலாம் என அறிவுறுத்திய கருத்து, அம்மையாரிடம் அமுங்கிப் போனது காலத்தின் கட்டாயம்!
அது அன்றைய சர்வதேச சூழல்.அது வேறு ஒரு நாளில் வேறு ஒரு ஆளுமையால் நிறைவேற்றப்படும். அதுதான் கர்மா.
இரும்புப் பெண்மணியின் உடும்பு பிடிக்கு, தெற்கு வாசலில் செயல் தீரர் அய்யா கல்விக்கடவுள் காமராஜரும், வீட்டு வாசலில் P. N. HAKSAR ம் ஆதரவுக் கரமும் அறிவுக் கரமும் நீட்டினர். காலடியில் கிடக்கும் இராவண தேசம் ராமதேசத்துக்கு எப்போதும் ஒரு நெருடல். எனில், இலங்கையின் பௌத்தம் எப்போதும் நம்புவது சீனத்தை. பௌத்தத்தின் கொட்டத்தை அடக்க எண்ணிய அம்மையார், அங்கு இனப் புரட்சியில் அனல் கக்கிக் கொண்டிருந்த புலிகளுக்கு கொம்பு சீவினார். ஆம் விடுதலை புலிகளுக்கு பாரதத்தின் டேராடூனில் ராணுவ பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பக்கம் தமிழ்நாட்டில் புரட்சித் தலைவரும், கொள்ளிடம் ஆற்றுப்பக்கமும் பாலாற்று பக்கமும் புலிகளின் பயிற்சிகளை ஊக்குவித்தார். ஆனால் விதி வேறுவிதம் காட்டியது. அந்தக் குடும்பம் தன் விரலைக் கொண்டு தன்னைக் குத்திக் கொண்டது,என்ன மாதிரியான எதிர்வினை?
ப்ளூ ஸ்டாரின் பின் விளைவு அன்னை இந்திராவை துளைத்தது! இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் ராஜீவை சிதறடித்தது! நோக்கம் நல்ல மாதிரி இருந்தும் பூமராங் போல திரும்ப தாக்கியது ஏக்கம் தான் கொடுத்தது. அந்த அரச குடும்பத்தில் இந்திராவும் ராஜீவும் இரட்டை முத்துக்கள் மாதிரி. இரண்டு முத்துக்களையும் இழந்துநிற்கிறோம்.
அவரது நினைவு நாளில் ஒன்றை உறுதியாய் கூறலாம். அந்தப் பாரத தேவி இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் பாரதத்தை பரிபாலனம் பண்ணி இருந்தால்...அந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இந்தியாவை அவர் வல்லரசு நிலைக்கு வளர்த்திருப்பார்.அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால், இன்றைய பாரதம் இன்னும் வலிய வல்லரசாய் இடம் மாறி இருந்திருக்கும். அந்த அன்னையின் இடத்தை அடுத்தடுத்து வரும் ஆட்சியாளர்கள் நிரப்பிக் கொள்வார்கள்.
இரும்பு தேவிக்கு இதய வணக்கம்!
(முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று. 1984ம் ஆண்டு இதே நாளில் தனது இல்லத்தில் வைத்து தீவிரவாதிகளால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்)
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}