நதியில் மிதக்கும் இலைகளின் பயணம்!

Nov 14, 2026,12:20 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


'ஏ..தே..தோ.. எண்ணம் வளர்த்தேன்...'  என்று பாடல் பாண்டியன் பேருந்தில் மெல்லியதாக ஒலித்ததுக்கொண்டு இருந்தது. 


ஜன்னல் ஓர இருக்கையில் கவி என்ற கவிதாவும் பவித்ரா என்ற பவியும் காந்தி மியூசியம் செல்ல பயணித்துக்கொண்டு இருந்தனர். பஸ் நிறுத்தம் இறங்கி, ராஜாஜி பூங்காவில் உள்ளே நுழைந்தனர். டுப்.. டுப்.. என்ற சப்தத்துடன் வந்து இறங்கினான் பிரதிவ்.


பிரதிவ் பவியின் நண்பர். அருகில் இருந்த கௌரியில் சுவையான தேநீர் பருகிவிட்டு, தங்களை அறிமுகம் செய்து கொண்டு சற்று நேரம் பேசிவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். 


மறுநாள் பயிற்சி முடித்து ஊருக்குச் செல்ல, ஜெய் விலாஸ் ஏறி அமர்ந்தாள் கவி. அருகில் அன்று பார்த்த தோழியின் 

நண்பர் 'ஹாய்!' என்று சொல்லிவிட்டு அருகில் வந்து நின்றான். பொதுவாக கவி அமைதிப் புறா. இரண்டு வார்த்தை பேசிவிட்டு பேருந்தில் ஒலித்த, 'நானொரு சிந்து' பாடலில் மனம் லயித்து போனாள். ஆனால் விதி வேறுவிதமாக இயங்கியது. 




காலப்போக்கில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். மாதங்கள் ஓடியது. கவி படிப்பு முடிந்ததும், வேலைக்குச் சென்றாள். பாசமிகு நண்பர் அங்கு தேடி வந்தார். வியந்து போனாள். 


பருவ காலம் மட்டும்தான் மாறுமா? 


பலநாட்கள் கடந்து சென்றதால், பிரிவு... பாசமாகி காதலாகக் கசிந்து உருகியது. கைபிடித்துச் செல்ல பேருந்து உதவியது. தோள் பிடித்து செல்ல ஹோண்டா உதவியது. 


செடி மரமாகியது. 'பூப்பூக்கும் மாசம் தை மாசம்' என்று நிலை வந்தது. பிரதிவ் கவி வீட்டில் சென்று பெற்றோரிடம் பேசினார். மறுத்துவிட்டார்கள்.

  

இதனால் வாழ்க்கை வேறு தடத்தில் சென்றது. அவனைப் பிரிந்த நேரம், அரசு வேலை கிடைத்தது. தலைநகருக்குச் சென்றாள். பல மாதங்கள் கழித்து அங்கு வந்து சேர்ந்தான். சீதையைப் பிரிந்த ராமன் போல இருவர் நெஞ்சமும் இணைந்தது. 'இனி பிரிவு இல்லை' என்று முடிவு செய்தனர். ஆனால் மேலே வட்டமிட்டுக் கழுகுகள் பறந்தன.


தூரத்தில் டீ கடையில், 'போனால் போகட்டும் போடா...' என்று பாடல் ஒலித்தது. கவி தன்வீடு போய்விட்டாள். 


காலை எழுந்தவுடன் அவளுக்கு எதோ செய்தது. கொஞ்சம் இஞ்சி தட்டிப் போட்டு தேநீர் பருகிவிட்டு, கொஞ்ச தூரம் 

மல்லிகைச் செடி நடுவில் நடந்து சென்றாள். மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சி அவளை சுற்றிப் பறந்தது. தூரத்தில் மாடு ஒன்று 'மா...'  என்று கத்தியது. 


வீடு வந்து சேர்ந்தவுடன் மெயில் பார்த்து நடுங்கியது நெஞ்சம். 


'ஓ..'வென்று அழுதாள். வந்தது இறப்புச் செய்தி. விபத்தில் இறந்து போனதாகத் தகவல் வந்தது. பித்து பிடித்தது போல் 

இருந்தாள். காலங்கள் மாறியது. மனசும் தேறியது. புதிய வாழ்க்கை தேடி, அனந்தபுரி ரயிலில் ஏறி அமர்ந்தாள். 

இரு கட்டைகளை அடித்துக் கொண்டு கண் தெரியாத முதியவர், 'அம்மம்மா... தம்பி என்றும் நம்பி' என்ற பாடலைப் 

பாடிக்கொண்டே சென்றார்.


பிரதிவ் சொல்வான், "நான் இருந்தாலும் இல்லை என்றாலும் அழக்கூடாது" என்று. கண்களின் ஓரம் நீர் வழிந்தது. ரயில், குப்..குப்.. என்று ஓடியது. வானத்தில் பறவைகள் 'வி' வடிவத்தில் பறந்து சென்றன. தூரத்தில் நதி ஒன்று ஓடியது. 


நம் வாழ்க்கையும் நதி போலத்தான். நாம் இலைகள். நதி ஓடும் திசையில் நாமும் பயணிப்போம்!


(த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்