- சஹானா
கரூரில் நேற்றிரவு நடந்த த.வெ.க விஜயின் பிரசாரத்தில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டனர். இதில் 40 பேர் பலியானது, தமிழக அரசியலில் ஒரு கருப்பு நாளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்தில் யார் மீது தவறு என ஒவ்வொருவரும், மற்றவர்களை கைகாட்டிவிட்டு தன்னை பாதுகாத்து வருகின்றனர். உண்மையில் யார், யார் மீது தவறு, என்ன செய்திருக்கலாம் என்பதை தெளிவாக அலசலாம்.
தவெக மற்றும் விஜய்

* கடந்த பிரசாரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் போனதை உணர்ந்து முன்கூட்டியே கிளம்பியிருக்க வேண்டிய விஜய், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் தான், தன் வீட்டில் இருந்தே கிளம்பியிருக்கிறார். அதுவே ஆரம்பப் புள்ளியாக பார்க்கப்படுகிறது.
* தன் வீட்டில் இருந்தே தாமதமாக தான் கிளம்பியிருக்கிறார் என்ற தகவலையும், நாமக்கல் மற்றும் கரூருக்கு எப்போது வரக்கூடும் என்ற தகவலையும் அங்குள்ள கட்சி நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை கூறியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அவர்கள் கூட்டத்தினரிடம் மதியம் ஆகும், இரவு ஆகும், எனவே வீட்டிற்கு சென்று திரும்புங்கள் என அறிவுறுத்தியிருக்கலாம்.
* கூட்டத்தினர் வெயிலில் காத்துக்கொண்டிருப்பது அங்குள்ள மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும். முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி விநியோகித்திருக்கலாம்.
* காவல்துறை வழங்கிய பகுதியை தவிர்த்துவிட்டு, முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்ட வேலுசாமிபுரம் உழவர் சந்தை பகுதியில் தான் தங்களுக்கும் அனுமதி வேண்டும் என குறுகலான பகுதியை கேட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூட்டம் கூடும் என தெரிந்தும் குறுகலான பகுதியை தேர்ந்தெடுக்காமல் கட்சியினர் தவிர்த்திருக்கலாம்.
* அத்தனை பேர் பலியாகியுள்ளனர், பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிந்தும் விஜய், அவர்களை மருத்துவமனை சென்று பார்த்திருக்க வேண்டும்.
* குறைந்தபட்சம் செய்தியாளர்களை சந்தித்து தன் கவலையை தெரிவித்திருக்க வேண்டும்.
* அதுவும் இல்லாவிட்டால், சம்பவத்தின் தீவிரம் புரிந்து உடனடியாக அறிக்கையாவது விட்டிருக்கலாம்.
* கரூரில் இருந்தே, தன் அடுத்தக்கட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு, நிலைமையை உடனிருந்து வழிகாட்டியிருக்கலாம்.
காவல்துறை

* அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மிகவும் தாமதமாக வரும் பட்சத்தில் கூட்டத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என கண்டிப்பான கட்டுப்பாடையும் சேர்த்திருக்கலாம். அப்படி சேர்த்திருந்தால், கரூர் கூட்டத்தை காவல்துறையே ரத்து செய்திருக்கலாம்.
* தவெக., பிரசாரத்திற்கு 6 இடங்களை காவல்துறை கொடுத்ததாகவும், அதில் ஒரு இடத்தை தவெக முடிவு செய்ததாகவும் கூறுகின்றனர். ரசிகர்களின் செயல்பாடுகள், கூட்டம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பொது இடம் அல்லது அகலமான பகுதிகளின் பட்டியலை கொடுத்து அதில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லியிருக்கலாம்.
* முந்தைய கூட்டங்களில் நிகழ்ந்தவற்றை கண்கூடாக பார்த்துள்ள தமிழக அரசு, காவல்துறையும், கூட்டத்தை கட்டுப்படுத்த இன்னும் கூடுதல் போலீசாரை களமிறக்கி இருக்க வேண்டும்.
இனி என்ன செய்யலாம்?

* அனைத்து கட்சிகளுக்கும் அரசியல் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்களுக்கு இந்தியா முழுவதும் அல்லது தமிழ்நாடு முழுதும் ஒரே வகையிலான கட்டுப்பாடுகள், கெடுபிடிகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு இதுதொடர்பாக தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம்.
* கூட்டம் கூட்டுவதையே தங்களின் ‛மாஸாக’ கருதும் கட்சியினர் எண்ணங்களை மாற்ற முடியாது. எனவே, பிரசாரம், பொதுக்கூட்டம் என வந்துவிட்டாலே போக்குவரத்து மற்றும் மக்கள் சென்று வர நெரிசல் இல்லாத பொதுவான ஒரு இடத்தையே அனுமதியாக வழங்க வேண்டும்.
* நகருக்குள் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனி பொதுக் கூட்டம், இதுபோன்ற பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதியே தரக் கூடாது. எதுவாக இருந்தாலும் ஊருக்கு வெளியே சென்று நடத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை கொண்டு வர வேண்டும்.
* நேர கட்டுப்பாடை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அனுமதி பெற்ற நேரத்தில் துவங்கி, பிரசாரத்தை முடிக்க வேண்டும். மீறும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து, அடுத்த முறை அக்கட்சிக்கு அனுமதி மறுக்க வேண்டும்.
* கூட்டத்தினருக்கு தேவையான முதலுதவி, அத்தியாவசிய தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் பிரசாரத்தை ஏற்பாடு செய்த கட்சியினர் கண்டிப்புடன் செய்ய உத்தரவிட வேண்டும்.
* சிறார்கள், கர்ப்பிணி பெண்கள், மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் நிலப் பிரச்னைகள் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள் இவ்வகையான பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு வர தடை விதிக்க வேண்டும். மீறி செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
* இவை அனைத்தும் அனைத்து கட்சிகளுக்கும் கட்டாயம் உத்தரவிட்டு பின்பற்ற பட வேண்டிய நிலைக்கு இந்த சம்பவம் தள்ளப்பட்டுள்ளது. இதுவே இப்போதைய மற்றும் இனிவரும் காலத்திற்கான தேவையும் கூட. மக்களை அரசியல்படுத்துவது ஒவ்வொரு கட்சிக்கும் எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு மக்களின் உயிரை காப்பதும் ஜனநாயகத்தின் கடமை. அதற்காக சில கடுமையான உத்தரவுகள், கட்டுப்பாடுகளை அரசியல் செய்யாமல் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
எல்லாவற்றையும் விட பொதுமக்களுக்குத்தான் அதிக அளவில் விழிப்புணர்வு தேவை. பெரும் கூட்ட நெரிசல் ஏற்படும் என்று தெரிந்தால் அங்கே போகாதீர்கள். அப்படியே போக நேரிட்டாலும் நிதானத்துடன் நடந்து கொள்ள முயற்சியுங்கள். ஆர்வத்தில் தாறுமாறாக நடந்து கொள்வது உங்களுக்குத்தான் ஆபத்து.. விஜய்யாக இருந்தாலும் சரி, வேறு எந்த நடிகராக இருந்தாலும் சரி.. அவர்களைப் பார்த்து குதூகலப்படுவது, எக்ஸைட் ஆவது அவசியமற்றது. அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தான். உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகப் பார்க்கப் பழகுங்கள்.. மக்களே நல்லா நினைவில் வச்சுக்கங்க.. அரசியல்வாதிகள் நம்மைக் காக்க மாட்டார்கள், நாம்தான் நம்மைத் காத்துக் கொள்ள வேண்டும். நமது உயிர், நமது பொறுப்பு. இனிமேலாவது உணர்ச்சிவசப்படாமல் இருக்கப் பழகுங்க.
9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!
திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!
சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்
நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!
கோவை வரும் பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி!
சார் படிவத்தை நிரப்புவதில் குழப்பமா.. கவலைப்படாதீங்க.. சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு
வாட்ஸ் ஆப்புக்கு வந்துருச்சு ஆப்பு.. எலான் மஸ்கின் X-சாட் தான் டாப்பாமே.. மக்கா!
SIR பணிகளைப் புறக்கணித்து.. போராட்டத்தில் குதித்த வருவாய்த்துறை ஊழியர்கள்
{{comments.comment}}