- சஹானா
கரூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பிரசாரத்திற்கு சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். இது அனைவரும் அறிந்த, அதிர்ந்த செய்தியாகவே பார்க்கப்பட்டாலும், இந்த துயர சம்பவம் நடந்தேறாமலும் தடுத்திருக்கலாம் என்றே பலரும் சொல்லும் விஷயம்.
நாமக்கல், கரூரில் இந்த வார சனிக்கிழமை பிரசாரம் என அனுமதிப்பெற்று, அதிலும் காலை 8:45 மணிக்கு நாமக்கலிலும், மதியம் 12 மணிக்கு கரூரிலும் பேசுவதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அனுமதியும் வாங்கியுள்ளனர் த.வெ.க.,வினர். அப்படியிருக்கையில், காலை 8:45 மணிக்கு தான் சென்னை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து கிளம்புகிறார் நடிகர் விஜய். அங்கிருந்து சென்னை விமான நிலையம் சென்று, தனி விமானத்தில் திருச்சி வந்து, அதன்பின்னர் சாலை மார்க்கமாக நாமக்கல் வர வேண்டும். இதையெல்லாம் முன்கூட்டியே கணக்கிடாமல், பிரசாரத்திற்கு அனுமதி வாங்கிய நேரத்தில் தான் வீட்டில் இருந்தே கிளம்பியிருக்கிறார் விஜய்.
பின்னர் நாமக்கலில் சுமார் 2:30 மணியளவில் பேசத்துவங்கியுள்ளார். அங்கும் கூட்டம் அலைமோதியுள்ளது. பிரசாரத்தை முடித்து கரூர் கிளம்பிய விஜய், 12 மணிக்கு அனுமதி கேட்டுவிட்டு இரவு 7 மணிக்கே அந்த இடத்திற்கு வந்துள்ளார். அவர் 12 மணிக்கு வருவார் என காலை 10, 11 மணிக்கே கூடிய கட்சியினர், ரசிகர்கள், மக்கள் எல்லாம் வெயிலில் காத்துக்கொண்டிருக்க, நாமக்கலுக்கே 12 மணிவரை வரவில்லை. அப்படியிருக்கையில் கூட்டத்தில் இருந்த மக்களும் குடிநீர், உணவு இன்றி தவித்துள்ளனர். அவர்கள் கூட்டத்தின் நடுவே இருந்து வெளியே வந்தால், மீண்டும் உள்ளே செல்ல முடியாதோ என நினைத்து தொடர்ந்து காத்திருந்திருக்கலாம்.
இரவு 7 மணி ஆனது, விஜயும் கரூரில் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தாகிவிட்டது. விஜய் வந்ததும் கூட்டத்தினர், பிரசார வாகனத்தை நெருங்க முற்படவே, நெரிசல் அதிகமாகி ஒருசிலர் மயங்கினர். இதனை விஜய்யும் பார்த்து, தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசினார். அடுத்த சில நிமிடங்களில் நிலைமை தலைகீழானது; மோசமானவையாக மாறியது. இவையெல்லாம் தொலைக்காட்சி நேரலையிலேயே அனைவரும் பார்த்தவை.
அரசியல் தலைவர்கள் செல்வது போன்று, ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வரிசையாக மருத்துவமனை சென்று திரும்புவது நிலைமையின் தீவிரத்தை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கே உணர்த்தியது. களத்தில் நேரடியாக இருந்த விஜய்க்கும் அது தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அப்படியிருக்க காயமடைந்தவர்கள், பலியானவர்களின் குடும்பத்தார்களை மருத்துவமனை சென்று விஜய் பார்த்திருக்க வேண்டாமா?
குறைந்தபட்சம் தனது கட்சியாளர்களான புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆகோத்தியசாமி, ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் உள்ளிட்டோரில் யாராவது ஒருவரையாவது மருத்துவமனை அனுப்பியிருக்கலாம்.. அதுவும் செய்யவில்லை. ஏன்?
தகவல் அறிந்து திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்று உதவியுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நேற்றிரவே கரூர் கிளம்பினார். ஆனால், விஜய் உடனடியாக தனி விமானத்தில் சென்னை திரும்பியதற்கான காரணம் என்ன?
திருச்சி விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்கள், துயர சம்பவத்தை பற்றியும், பலியானவர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சொன்னபோதும், ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுள்ளார். ஏன்?
சம்பவம் நடந்து முதலமைச்சர் முதல் பிரதமர், மத்திய அமைச்சர்கள் வரை அனைவரும் இரங்கல் தெரிவித்த பின்பு, 4 மணிநேரம் கழித்து இரவு 11:15 மணிக்கு இரங்கல் செய்தியாக ‛எக்ஸ்’ தளத்தில் இரு வரிகளில் பதிவிடுகிறார் விஜய். இந்த இரங்கல் செய்தியோ, அறிக்கையோ வெளியிட 4 மணிநேர தாமதம் ஏன்?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் விஜய்யை பார்த்து கேட்கலாம்.. ஆனால், விஜய் செய்திருக்க வேண்டிய சிலவற்றையும் சொல்லியாக வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியை துவக்கியுள்ள விஜய்க்கு 2026 சட்டமன்ற தேர்தலே முதல் பரீட்சை. அதற்குள் இந்த கரும்புள்ளி நிகழ்ந்திருக்கிறது.
* அனுமதி கேட்ட நேரத்தில் சரியாக பிரசார இடத்திற்கு செல்ல வேண்டியது விஜயின் கடமை. நேரம் தவறாமை முக்கியமான பண்பாக பார்க்கப்படும் நிலையில், அந்த நேரத்தில் தான் வீட்டில் இருந்தே கிளம்பியது அரசியல் தலைவராக விஜய்க்கு அழகல்ல.
* தன் ரசிகர்கள், இன்னும் ரசிக மனநிலையிலேயே இருப்பதையும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதையும் தெரிந்திருக்கும் விஜய், வெறும் அறிக்கையில் பெயரளவிற்கு அறிவுறுத்துவதை விட்டுவிட்டு, கண்டிப்பான கட்டளையோடு தன் ரசிகர்களை ‛அரசியல்படுத்துவது’ ஒரு தலைவராக விஜய்க்கு முக்கியம்.
* தன்னை பார்க்க வந்தவர்களுக்கு ஒரு பாதிப்பு என தெரிந்தும் அவர்களுக்கு உதவவோ, நேரில் சென்று ஆறுதல் சொல்வதோ அடிப்படை கடமை. அதுவும் அரசியல் கட்சி தலைவராக இருந்து தன்னுடைய ரசிகர்களே இப்படியான நிலைக்கு ஆளானது தெரிந்தும் ஒருவார்த்தை கூட பேசாமல் சென்றது அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.
* காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள், தங்களை கண்டு பயப்படுவதாகவோ, தங்களை கட்டுப்படுத்த நினைப்பதாகவோ மடைமாற்றாமல், மக்களின் நலனுக்காகவும், தன் ரசிகர்களின் நலனுக்காகவும் தான் என்பதை உணர்ந்து அரசியல் செய்வது விஜயின் எதிர்காலத்திற்கு ஒரு பாடமாக அமையும்.
Karur Tragedy: கரூர் கண்ணீருக்கு யார் காரணம்? .. இந்தக் கொடுமையெல்லாம் இனியாவது மாறுமா?
கரூர் துயரம்.. விஜய்க்கு இது பெரும் பாடம்.. இனியும் சுதாரிக்காவிட்டால் எல்லாமே கஷ்டம்!
சினிமாக்களை ஆதரியுங்கள்.. ஆனால் வாழ்க்கையிலிருந்து தள்ளி வையுங்கள்.. வினோதினி
கரூர் சம்பவம் எதிர்பாராத விபத்து அல்ல.. தவெக முறையீடு.. நாளை மதுரை ஹைகோர்ட் பெஞ்சில் விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. மக்களை உலுக்கியுள்ளது.. பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் இரங்கல்
கரூர் துயரம்.. பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
Karur Stampede: புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. உள்பட 4 பேர் மீது வழக்கு!
கரூர் துயரத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 20 லட்சம்.. விஜய் அறிவிப்பு
விஜய்யிடம் கேள்வி கேளுங்கள்.. கூட்டத்துக்கு டைமுக்கு அவர் வர வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின்
{{comments.comment}}