- ஆ.வ. உமாதேவி
விளையாட்டு என்பது நாம் பிறந்ததிலிருந்தே நம்மிடம் ஆரம்பமாகி விடுகிறது. பிறந்த உடனே, கை கால்களை ஆட்டி விளையாட ஆரம்பித்து விடுகிறோம். கைகளை ஆட்டுவதை பார்த்தால், குத்துச்சண்டை செய்வது போலவும் கால்களை ஆட்டுவதை பார்த்தால் மிதிவண்டி மிதிப்பது போலவும் தோன்றும். மாங்கனியை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ? என்பர். அதுபோல, விளையாட்டை விரும்பாத குழந்தைகளும் உண்டோ?
ஒருவேளை, விளையாட்டில் சற்று ஆர்வம் குறைவாக உள்ள குழந்தையாக இருந்தால் வீட்டில் பெற்றோரும் பள்ளியில் ஆசிரியரும் விளையாட்டில் விரும்பி ஈடுபட, ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு ஊக்கு விக்கப்படும் போது தான், அவனது தனித்திறனை கண்டறிந்து அந்த விளையாட்டில் அவனதுதனித் திறன்களை வளர்த்து, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடியும்.
உடம்பை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். அவ்வாறு உடம்பை வளர்க்க சிறந்த வழி விளையாட்டு தான். இத்தகைய விளையாட்டுகளால், குழந்தைகள் பல நன்மைகளை அடைகின்றனர்.

உடல் உறுப்புகள் வலுப்பெறும். நல்ல சுகாதார பழக்க வழக்கங்கள் வளரும்.
நோயற்ற வாழ்வு வாழ முடியும்.
குழு மனப்பான்மை வளரும்.
கூட்டு முயற்சியின் அவசியம், பயனை அறிவர்.
தலைமை பண்பை வளர்த்துக் கொள்வர்.
தற்காப்பு விழிப்புணர்வு ஏற்படும்.
உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஒவ்வொரு விளையாட்டின் மூலம் ஒவ்வொரு நுட்பத்தை அறிதல்.
உடல் நலத்தோடு மனநலமும் பாதுகாக்கப்படுதல்.
உடல், உள்ளம், அறிவு ஆகியவற்றில் சீரான ஆளுமை வளர்ச்சி அடைதல்.
விதிகளுக்கு கட்டுப்படுதல்.
நன்னெறிப் பண்புகளை பெறுதல்.
ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளருதல்.
ஓய்வு நேரத்தை பயனுள்ள வழியில் கழித்தல்.
வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பான்மை பெறுதல்.
தன்னம்பிக்கை பெறுதல்.
மன அழுத்தத்திற்கான வடிகாலாக அமைதல்.
சமூகப் பொறுப்புள்ள மனிதனாக வளர்தல்.
இவ்வாறாக விளையாட்டினால் பல நன்மைகள் பெறலாம்.
பாரம்பரிய விளையாட்டுகள்.
பாரம்பரிய விளையாட்டுகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். கண்ணாமூச்சி, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், நொண்டி, கிச்சு கிச்சு தாம்பூலம், பூப்பறிக்க வருகிறோம், கில்லி, கோலி, பம்பரம், கயிறு இழுத்தல், கபடி, பாண்டி ஆட்டம், பச்சை குதிரை, கள்ளன் போலீஸ், குலைகுலையாய் முந்திரிக்காய், தாயக்கட்டை, நுங்கு வண்டி ஓட்டுதல், நீச்சல், கோகோ என்பன சில பாரம்பரிய விளையாட்டுகள் ஆகும். காலப்போக்கில் பல பாரம்பரிய விளையாட்டுகள் குறைந்தும் மறைந்தும் போயின. இவற்றில் ஒரு சில விளையாட்டுகளை தற்போதும் குழந்தைகள் விளையாடுகின்றனர்.
கபடி, கோகோ, நீச்சல் போன்ற விளையாட்டுகள் உடல் நலத்தை காக்கின்றன. பல்லாங்குழி, பூப்பறிக்க வருகிறோம் போன்ற விளையாட்டுகள் நினைவாற்றல் மற்றும் கணித அறிவை வளர்க்கின்றன. கண்ணாமூச்சி, பம்பரம், கோலி போன்ற விளையாட்டுகள் கவனத்தை அதிகரிக்கின்றன. தாயம், நொண்டி, கபடி போன்ற விளையாட்டுகள் கூட்டுறவு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றன. தாயம் விளையாட்டில் எத்தனை முறை வெட்டப்பட்டாலும் மீண்டு வந்து விளையாட்டில் தொடரும் அந்த செயல்தான் "வாழ்க்கையில் வீழ்வது எழுவதற்கே" என்ற கோட்பாட்டை கற்றுத் தருகிறது. கபடி நமது மாநில விளையாட்டு ஆகும். இது சடுகுடு விளையாட்டு என்றும் அழைக்கப்படும். மூச்சை அடக்கும் பயிற்சி இந்த விளையாட்டின் மூலம் கிடைக்கிறது.
கிச்சு கிச்சு தாம்பூலம் விளையாட்டு எதிராளியின் செயல்களை கூர்ந்து கவனித்தல், ஊகித்தல் போன்ற திறன்களை வளர்க்கிறது. இப்படி எல்லா விளையாட்டுகளுக்கான பயன்களை விளையாட்டா எழுதிக் கொண்டே போகலாம். முண்டாசுக் கவிஞர் கூட,
ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா. காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா என்றார். ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சி, வீடியோ கேம், இணைய வழி விளையாட்டுகள் இவற்றின் செல்வாக்கால் பாரம்பரிய விளையாட்டுகள் குறைந்து வருகின்றன.
பாரம்பரிய விளையாட்டுகளை பாதுகாப்பதன் மூலம் நம் கலாச்சாரமும் பாதுகாக்கப்படுகிறது. எனவே, விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் நம் பாரம்பரியத்தை காக்கும் ஆயுதமாக எடுத்துக் கொள்வோம்.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
பாரதீதீ..!
{{comments.comment}}